வெள்ளி, 8 ஏப்ரல், 2022

அமித் ஷா : ஆங்கிலத்துக்கு பதில் இனி இந்தியைத்தான் ஏற்கவேண்டும்

மின்னம்பலம் : ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைதான் ஏற்க வேண்டும், வேறு மொழிகளை அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சரான அமித் ஷா, நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
ஏப்ரல் 7ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய அமித் ஷா,
"ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்திதான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வேறு உள்ளூர் மொழிகளை அல்ல.
நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக, அலுவலக ரீதியான மொழியை மாற்றுவதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. ஆட்சியை நடத்தும் ஊடகம் அலுவல் மொழிதான் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
மாநிலங்களின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​​​அது பிராந்தியமாக இருந்தாலும் அல்லது மாநிலம் சார்ந்ததாக இருந்தாலும் அது இந்திய மொழியாக இருக்க வேண்டும்.

தற்போதைய அலுவல் மொழிக் குழு செயல்படும் வேகம் இதற்கு முன்பு காணப்படவில்லை. இந்தக் குழுவின் ஒரே பதவிக்காலத்தில் மூன்று அறிக்கைகளை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அனைவரின் கூட்டுச் சாதனையாகும்.

தற்போது அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு எட்டு மாநிலங்களில் 22,000 இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வடகிழக்கில் ஒன்பது பழங்குடியின சமூகத்தினர் தங்கள் பேச்சுவழக்குகளின் எழுத்துகளை தேவநாகரிக்கு மாற்றியுள்ளனர். இது தவிர, வடகிழக்கு மாநிலங்கள் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயமாக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

அறிக்கையின் 1 முதல் 11 வது தொகுதி வரை செய்யப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்காக ஜூலை மாதம் குழு கூட்டத்தை நடத்த வேண்டும்.

அந்த கூட்டத்தில் தொகுதி வாரியான அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அலுவல் மொழிக் குழுவின் செயலாளர்... உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்‌" என்று பேசிய அமித் ஷா,

"9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். மேலும் இந்தி கற்பித்தல் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் இந்தி அகராதியைத் திருத்தி மீண்டும் வெளியிட வேண்டும்.

அலுவல் மொழிக் குழு அறிக்கையின் 1 முதல் 11 வது தொகுதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அனைத்து செயலாளர்களையும் சந்தித்த பிறகு, ஒரு அமலாக்கக் குழுவை அமைக்க வேண்டும்" என்று கூட்டத்தில் பேசியுள்ளார் அமித்ஷா.

உள்துறை இணை அமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா மற்றும் நிஷித் பிரமானிக், அலுவல் மொழி நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் குழுவின் பிற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக மக்களவை துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. ஒரு கேள்வி கேட்கையில் அதற்கு அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் சொல்லத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட கனிமொழி எம்பி, "உங்களுக்கும் ஆங்கிலம் நன்றாக தெரியும். ஆங்கிலத்திலேயே பதில் சொல்லுங்கள்" என்று கூற அதன்பிறகு ஆங்கிலத்தில் பதிலளித்தார் கோயல்.

இந்த நிலையில், நாடாளுமன்ற அலுவல் மொழி குழு கூட்டத்தில் நேற்று பேசிய அமித் ஷா, ஆங்கிலத்திற்கு பதில் இந்தி தானென்று பேசியிருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

வேந்தன்

கருத்துகள் இல்லை: