BBC :தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை . மார்ச் 22ஆம் தேதியன்று இந்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.
இந்தத் தேர்தல் அறிக்கையை பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையிலான குழுவினர் தயாரித்தனர்.
இந்த தேர்தல் அறிக்கை வெளியான உடனேயே, பலரும் கவனித்த ஒரு அம்சம் தலைப்பில் இடம்பெற்றிருந்த எழுத்துருக்கள்.
தேர்தல் அறிக்கை புத்தகத்தின் தலைப்பிலும் உட்தலைப்புகளிலும் பழைய தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன பெரியாரால் முன்மொழியப்பட்டு, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்த எழுத்துகள் பயன்படுத்தப்படாமல்,
பழைய பாணி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருந்ததை பலரும் கவனித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
இந்த எழுத்துருக்களை பா.ஜ.க பயன்படுத்தியிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
தவிர, இதனைத் தேர்தல் அறிக்கை எனக் குறிப்பிடாமல் "தொலைநோக்குப் பத்திரம்" என்றும் பா.ஜ.க. குறிப்பிட்டது.
இந்த தொலைநோக்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பல திட்டங்கள், அக்கட்சியின் நீண்ட காலத் திட்டங்களை, கொள்கைகளைப் பிரதிபலிப்பதாக இருந்தன.
குறிப்பாக, பொருளாதார ரீதியில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும், தேசிய கல்விக் கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும், பள்ளிக்கூடங்களில் தியானம், யோகாசன வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும், சி.பி.எஸ்.இ. முறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாநில அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற முறை கைவிடப்படும், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும், பசுவதை தடைச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும், இந்து கோயில்கள், தனியாக இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும், இந்துக் கோயில் நிலங்களில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்கள் அகற்றப்படுவார்கள் உள்ளிட்ட, அக்கட்சி நீண்ட காலமாக பேசிவரும் கொள்கைகள், திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
தவிர, பள்ளிக்கூட பாட திட்டங்களில் ஆத்திச்சூடி, நாலடியார், கொன்றைவேந்தன், விவேக சிந்தாமணி, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்றவை சேர்க்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவற்றில் பல நூல்கள் வெவ்வேறு வகுப்புகளில் பாடத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
பெரிய புராணம், நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருவிளையாடல் புராணம், கம்பராமாயணம் போன்ற பழந்தமிழ் சமய நூல்கள் 9ஆம் பத்தாம் வகுப்பிற்கான தமிழ் பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல, சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் வரலாறுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என இந்த தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் பாட திட்டத்தில்ஆறாம், ஏழாம் வகுப்பில் தொடங்கி பல்வேறு வகுப்புகளில் தமிழக மன்னர்களின் வரலாறுகள் இடம்பெற்றிருக்கின்றன.
கோயில்கள் அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு தனியாரிடம் அளிக்கப்படும் என்பதை நீண்ட காலமாகவே பா.ஜ.க கூறிவந்தாலும், இந்து ஆலயங்கள் குறித்த பிரிவில் இடம்பெற்றுள்ள "ஆலயங்களில் நாயன்மார்கள், ஆழ்வார்களின் பிறந்த நாட்களில் மட்டும் சமபந்தி போஜனம் நடத்தப்படும்" என்ற வாக்குறுதி கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
தற்போது மறைந்த முதல்வர் சி.என். அண்ணாதுரையின் நினைவு நாளுக்கு திருக்கோயில்களில் அன்னதான நிகழ்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்றும்பொருட்டே இந்த திட்டத்தை பா.ஜ.க. முன்வைப்பதாக பலரும் கருதுகின்றனர். நீண்ட காலமாகவே சி.என். அண்ணாதுரையின் நினைவு தினத்தன்று, "எதற்காக கோவில்களில் இன்று சமபந்தி நடத்த வேண்டும்?" என்ற கேள்வியை எச். ராஜா எழுப்பி வந்திருக்கிறார்.
பா.ஜ.கவின் இந்தத் தேர்தல் அறிக்கையில் மும்மொழிக் கொள்கை குறித்து தனியாக ஏதும் குறிப்பிடப்படவில்லை, ஆனால், மாணவர்கள் பிற மொழிகளைப் படிக்க விரும்பினால் அவர்களுக்கு தனியாக வகுப்புகள் நடத்த உரிய வசதிகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில அம்சங்கள், கவனத்தை ஈர்ப்பவையாகவும் வித்தியாசமாகவும் உள்ளன.
குறிப்பாக, மாவட்டந்தோறும் கலாக்ஷேத்ரா நிறுவப்படும் என்ற ஒரு வாக்குறுதியை இந்த தேர்தல் அறிக்கை அளிக்கிறது. இதேபோல, "வெள்ளி மலை ஆசிரமத்தில் வித்யா ஜோதி பட்டம் பெற்றவர்கள், சமய வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்" என்ற வாக்குறுதியும் பல கேள்விகளை எழுப்புகிறது.
சில இடங்களில் பா.ஜ.கவின் கொள்கைகள் குறித்த தகவல்களே இல்லை. குறிப்பாக, விவசாயம் தொடர்பான வாக்குறுதிகளில் விவசாய சட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த வாக்குறுதிகள் ஏதும் இல்லை. மாறாக, செயல்படாத இடங்களில் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைச் செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருக்கிறது.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்துவந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படும் என்றும் இந்தத் தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறது.
பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஏற்காத பல அம்சங்கள் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
"ஆகவே, இந்தத் தேர்தல் அறிக்கை குறித்து மற்றவர்கள் கருத்து தெரிவிப்பதைவிட, பா.ஜ.க. இந்தத் தேர்தல் அறிக்கை குறித்து என்ன கருதுகிறது என்பதுதான் முக்கியம்.
2004ஆம் ஆண்டுக்கு முன்பாக, மத மாற்ற தடை சட்டம், பசு வதை தடை சட்டம் போன்றவற்றை அமல்படுத்திய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. அந்தத் தோல்விக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும்கூட, மேலே சொன்ன சட்டங்களையெல்லாம் திரும்பப் பெற்றார்.
இந்த நிலையில், பா.ஜ.க இப்படிக் கூறியிருப்பது குறித்து அ.தி.மு.க என்ன நினைக்கிறது என்பது முக்கியம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஜென்ராம்.
தேர்தல் அறிக்கையின் தலைப்புகளில், பழைய தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அது சொல்லும் செய்திகளையும் அரசியல் நோக்கர்கள் மிகுந்த கவனத்தோடு சுட்டிக்காட்டுகிறார்கள்.
"அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை என்பதைத்தான் வழக்கமாகப் பயன்படுத்துவார்கள். அதற்குப் பதிலாக தொலைநோக்குப் பத்திரம் என்ற வார்த்தை இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், தலைப்புகளில் திராவிட அரசுகள் கொண்டுவந்த சீர்திருத்த எழுத்துகள் பயன்படுத்தப்படாமல், பழைய பாணியிலான எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. திராவிட இயக்க ஆட்சிக் காலத்தில் மொழி தொடர்பாக இரண்டு விஷயங்கள் நடந்தன. முதலாவதாக, தனித் தமிழ் சொற்கள் பெருமளவு புழக்கத்திற்கு வந்தன. இரண்டாவதாக, எழுத்து சீர்திருத்தம் அமலுக்கு வந்தது. திராவிட இயக்கங்கள் செய்த இந்த இரண்டு மொழி சீர்திருத்தங்களையும் ஏற்க மாட்டோம் என்பதைத்தான் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவர்கள் பேசிவரும் 'திராவிட நீக்கம்' என்பதன் தொடர்ச்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன்" என்கிறார் தன்னாட்சித் தமிழகம் இயக்கத்தைச் சேர்ந்த ஆழி செந்தில்நாதன்.
ஆனால், இப்படி எழுதியிருப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்புகிறார் பா.ஜ.க செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி.
"தமிழே பழையதுதானே. இப்படி எழுதக்கூடாது என சட்டம் ஏதும் இருக்கிறதா?" என்கிறார் அவர்.
மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், தென்னிந்தியாவில் தமிழகத்தை முதலிடத்திற்குக் கொண்டு வர முயற்சிப்போம் எனச் சொல்லியிருப்பது சரியா எனக் கேட்டபோது, "தொழில்துறையில் இன்னும் சிறப்பாகச் செய்வோம் என்பதை சொல்லியிருக்கிறோம். அப்படித்தான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார் நாராயணன்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மத மாற்ற தடை சட்டம், பசு வதைத் தடை சட்டம் போன்றவை, அ.தி.மு.கவுக்கு ஏற்புடையதாக இருக்குமா என கேட்டதற்கு, "காங்கிரஸ் சொல்வதெல்லாம் தி.மு.கவுக்கு ஏற்புடையதா? நாங்கள் சட்டப்பேரவையில் இடம்பெற்றால் எந்தெந்த விவகாரங்களை எல்லாம் எழுப்புவோம் என்பதைச் சொல்லியிருக்கிறோம்" என்கிறார் நாராயணன்.
இந்த விஷயங்கள் தவிர, மற்ற கட்சிகள் குறிப்பிடாத வேறு சில நல்ல அம்சங்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கருவூட்டல் மருத்துவமனைகளில் கட்டணம் லட்சக் கணக்கில் இருக்கும் பின்னணியில் இந்த வாக்குறுதி கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக