வெள்ளி, 26 மார்ச், 2021

வேலு vs வருமான வரித்துறை: வேட்டையாடியது யார்? சோதனை இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.

வேலு vs  வருமான வரித்துறை:  வேட்டையாடியது யார்?

 minnambalam :அரசியல் கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்காக வியூகம் வகுத்துள்ளது போலவே, மத்திய அரசின் வருமான வரித்துறையும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பு வியூகம் அமைத்துள்ளது. இந்தியாவிலேயே தேர்தல் நேரத்தில் பணம் அதிகம் விளையாடும் என்ற ரெக்கார்டு தமிழகத்துக்கு ஏற்கனவே இருக்கிறது,

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், கடந்த நாடாளுன்றத் தேர்தலில் வேலூர் என பணத்தால் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட வரலாறு தமிழகத்துக்கு உள்ளது.   அதனால் இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டை அதிகம் எதிர்பார்த்திருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தலின் போது நடக்கும் பண விளையாட்டைக் கட்டுப்படுத்தவும், கண்டறிந்து தடுக்கவும் இரு சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம். அதில் ஒருவர் வருமான வரித்துறையில் தென்னிந்திய அளவிலான உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன்.

இவரது தனிச் சிறப்பு என்னவெனில் இவரது பதவிக் காலத்தில்தான் வருமான வரித்துறையில் புலனாவுத் துறை என்ற தனி அமைப்பைத் தொடங்கினார். மாநில அரசில், மத்திய அரசில் எப்படி உளவுத்துறை இருக்கிறதோ அதேபோல வருமான வரித்துறைக்கென தனி உளவுத்துறை அமைக்கப்பட்டது.

இதன் வேலை கணக்கில் காட்டப்படாத வருமானத்தை வைத்திருப்பவர்கள், வரி ஏய்ப்பவர்கள், சொத்துகளை மறைப்பவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதுதான். இப்படிக் கிடைக்கும் தகவல்களை விசாரித்து அதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட தனி நபர், நிறுவனம் மீது ரெய்டு நடத்த வருமான வரித்துறையின் புலனாய்வுத் துறை பரிந்துரைக்கும். தங்களுக்குக் கிடைக்கும் வரி, வருமான ஏய்ப்புத் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி உரையாடல்களையும் வருமான வரித்துறையின் உளவுப் பிரிவுக்கு உண்டு.

இப்படியாக வந்த தகவல்களை எல்லாம் வைத்துக் கொண்டு தமிழகம் முழுக்க வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில்தான் பாலகிருஷ்ணனுக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவைப் பற்றி சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. திமுகவின் வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு தலைமை தரும் பணம் வேலு மூலமாகவே செல்கிறது என்பதும் ஐடி உளவுத்துறைக்கு கிடைத்திருக்கும் தகவல்.

ஆனால் எ.வ. வேலுவோ ஐடியின் உளவுத்துறைக்குள்ளும் ஓர் உளவுத்துறையை தனக்காக வைத்திருக்கிறார் போலிருக்கிறது. ரெய்டு அல்லது அதை ஒட்டிய ஏதோ ஒரு நெருக்கடியை தனக்கு தரப் போகிறார்கள் என்று சில நாட்களாகவே எ.வ. வேலு அறிந்திருக்கிறார். இதையடுத்து, ‘ரொம்ப கவனமாக இருங்க’என்று தனது வட்டாரத்தில் வேலு எச்சரித்திருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் எட்டு சட்டமன்றத் தொகுதியிலும் திமுகவே நிற்க வேண்டுமென்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி எட்டு தொகுதிகளையும் திமுகவுக்கே பெற்றிருக்கிறார். அந்தத் தொகுதிகளில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளுக்கே வேட்பாளர்களாக வாய்ப்பு கொடுத்திருக்கிறார் வேலு.

கீழ்பென்னாத்தூர் வேட்பாளர் பிச்சாண்டி, செங்கம் கிரி, போளூர் வேட்பாளர் சேகரன், வந்தவாசி வேட்பாளர் அம்பேத்குமார், கலசப்பாக்கம் சரவணன், ஆரணி வேட்பாளர் அன்பழகன், செய்யாறு வேட்பாளர் ஜோதி மற்றும் திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் எ.வ.வேலு என முழுக்க முழுக்க மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் திமுகவே போட்டியிடுகிறது.

இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வசதி மிக்கவர்கள் இல்லை. அவர்களுக்கான தேர்தல் செலவை வேலுவே ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தத் தகவல்கள் ஐடிக்கு போய்தான் அதை அடிப்படையாக வைத்து மார்ச் 25 ஆம் தேதி திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது ரெய்டு நடத்தியிருக்கிறது வருமான வரித்துறை.

ஆனால் எ.வ.வேலு ஏற்கனவே இதை ஸ்மெல் பண்ணிவிட்ட நிலையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டார். இதனால் தங்களுக்கு கிடைத்த புகார்களைக் கணக்குப்போட்டு பெரிதாக வேட்டை என எதிர்பார்த்துப் போன வருமான வரித்துறையினருக்கு அந்த அளவுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

-வேந்தன்

nakkeeran : தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில், நேற்று (25.03.2021) திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். எ.வ.வேலுவின் கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களிலும், அதேபோல் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக புகாரளிக்கப்பட்டதால் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தொடங்கிய சோதனை இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை: