ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, வருமான வரித்துறை ஆகியவை மூலம் மாநிலத்தில் பரவலாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட பலரும் வருமான வரித்துறையின் சோதனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கதிகலங்கும் கரூர் : தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 487 புகார்கள் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். `இந்தப் புகார்களில் 440 புகார்கள் உண்மைத்தன்மை உடையவை' எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுதவிர, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் சோதனைகள் மூலம் கணக்கில் காட்டப்படாத பணம், பரிசுப் பொருள்கள், தங்கம், வெள்ளி நகைகள், மதுபானங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் கடந்த 24 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ, ` தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 4,004 பேர் போட்டியிடுகின்றனர். இதுவரையில் சி-விஜில் மூலம் 1,607 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் 487, கோவை 365, திருப்பூர் 131, சென்னை 130, கன்னியாகுமரி 126 என்ற அளவில் புகார்கள் வந்துள்ளன.
வேட்பாளரிடம் சிக்கிய ரூ.1 கோடி
நாங்கள் நடத்தும் வாகன சோதனையில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பிடிபட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும். இதில், முசிறி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜின் காரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் செலவின பார்வையாளர்கள், வேட்பாளர்களின் கணக்குகளைக் கண்காணித்து வருகின்றனர்" என்றார்.
இதுவரை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பரிசுப் பொருட்கள், மது வகைகள், தங்கம், வெள்ளி நகைகள் போன்றவற்றின் மதிப்பு ரூ. 265 கோடியே 45 லட்சமாகும். இதில் ரொக்கம் மட்டும் ரூ.115 கோடி என்று சத்யபிரதா சாஹூ கூறினார்.
`தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என பல்லாவரம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான சமூக ஆர்வலர் செந்தில் ஆறுமுகத்திடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.
`` தமிழ்நாட்டுக்கு இரண்டு செலவின பார்வையாளர்களை நியமித்துள்ளனர். தமிழ்நாட்டில் தேர்தல் செலவுகள் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் செலவின பார்வையாளர்களை நியமிக்கிறோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருப்பதுதான் வேதனை" என்கிறார்.
ஒருநாள் செலவே ரூ. 30 லட்சமா?
தொடர்ந்து பேசுகையில், ``ஒரு வேட்பாளர் 30.8 லட்ச ரூபாயை செலவு செய்யலாம் என அளவு நிர்ணயித்துள்ளனர். தற்போதைய சூழலில் இதனை ஒருநாள் செலவாகக்கூட எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு தொகுதியிலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சராசரியாக 10 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை செலவு செய்கின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தாலே, 100 பேரைக் கூட்டி வருகின்றனர். கடைசி நேரத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேலைகளும் நடக்க உள்ளன. முன்பெல்லாம் ஆம்புலன்ஸ்களில் வைத்துப் பணத்தைக் கொண்டு சென்றதையும் பார்த்திருக்கிறோம். இப்போது வேறு வகையான உத்திகளைக் கையாளுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி ஒவ்வொரு உணவுக்கும் விலைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு செட் பூரி சாப்பிட்டால் 45 ரூபாய் என்கின்றனர். இதுதவிர, சுவரொட்டி, நோட்டீஸ் என ஒவ்வொன்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது.
இதனை `நிழல் பதிவேடு' என்ற ஒன்றின் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். உண்மையாகவே, நிழல் பதிவேட்டைப் பராமரித்தால் வேட்பாளர்கள் சொல்லும் கணக்குகள் எல்லாம் தாண்டிவிடும். இந்தத் தொகை கட்டுப்படியாக வாய்ப்பில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தால் பல நூறு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்படுகிறது.
சிக்குவது சிறிய மீன்கள்தான்
தேர்தல் முடிந்த பிறகு ஆணையத்தின் அதிகாரிகள் கொடுக்கும் விளக்கத்தில், டிரைவர், கூரியர் நிறுவன ஊழியர்கள்தான் சிக்க வைக்கப்படுகின்றனர். அந்தப் பணத்துக்கு உரிமையாளர் எவரோ, அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. டிரைவர் குற்றவாளி என்றால், உரிமையாளரும்தானே குற்றவாளி. `சிறிய மீன்கள் மட்டுமே பிடிபடுகின்றன' என தேர்தல் ஆணைய அதிகாரிகளும் வேதனைப்படுகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் பாதிக் கிணறுகளை மட்டுமே தாண்டுகின்றனர். அதுதான் பிரச்னை" என்கிறார்.
`தேர்தல் ஆணையத்தால் ஏன் உறுதியான நடவடிக்கை எடுக்க முடிவதில்லை?' என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
`` தேர்தலில் உலவும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் ஆங்காங்கே பணத்தைப் பறிமுதல் செய்வதைப் பார்க்கிறோம். இதில் அப்பாவிகள் பலரும் தங்கள் சொந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு போய் சிக்குவதையும் பார்க்கிறோம். இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகள் எல்லாம் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி பணத்தைக் கொண்டு போய் சேர்த்து வைத்து விட்டன.
டோக்கன் சிஸ்டம்
வாக்காளர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்காமல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்துக்கும் இது தெரியும். அவர்களால் இந்த விஷயத்தில் எதையும் செய்ய முடியாது. ஏற்கெனவே பிடிபட்ட பணம் என்ன ஆனது. அது தொடர்பாக தண்டனை வழங்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. `நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகிற மாதிரி அழு' என்ற போக்கில்தான் நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. பணத்தை எதிர்பார்க்கும் சில வாக்காளர்கள் வாழும் இந்த சமூகத்தில் தேர்தல் ஆணையத்தைக் குறை கூறி என்ன பயன் என நினைக்கத் தோன்றுகிறது" என்கிறார் அசோகன்.
`வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை எந்த அடிப்படையில் துல்லியமாக ஆராய்கிறார்கள்?' என இந்திய அரசின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். ``
எல்லாவற்றுக்கும் சில வரையறைகளை வைத்துள்ளனர். ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்தால் எவ்வளவு தொகை, பேனர் வைத்தால் எவ்வளவு தொகை எனப் பட்டியலிட்டுள்ளனர். சந்தை நிலவரப்படி எவ்வளவு செலவாகும் என்பதை தோராயமாகக் கணக்கிடுகின்றனர்.மூன்று நாளைக்கு ஒரு முறை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நிழல் அறிக்கை தயார் செய்கின்றனர். ஆணையத்தின் வரம்பிற்குட்பட்டுத்தான் வேட்பாளர்கள் செலவு செய்கிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்வேன். என்ன மாதிரியான தவறுகளை செய்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது" என்கிறார்.
உண்மைக் கணக்கு எங்கே?
தொடர்ந்து விவரித்தவர், `` ஒரு பிரியாணியை 150 ரூபாய்க்குக் கொடுத்துவிட்டு 300 ரூபாய் என்றுகூட எழுதலாம். அதனைக் கண்டறிய முடியாது. யாரும் முறையாகச் செலவு செய்வதில்லை. இது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். தேர்தல் ஆணையமும் எவ்வளவு விசாரிக்க முடியுமோ அதைத்தான் செய்ய முடியும். அவர்களால் எவ்வளவு பேரைத்தான் பிடிக்க முடியும். ஒரு சிலர் தவறு செய்தால் கண்டறியலாம். ஒட்டுமொத்தமாக தவறு செய்தால் என்ன செய்ய முடியும்? ஒரு சிலர் வேண்டுமானால் உண்மைக் கணக்கைக் காட்டலாம். தேர்தல் ஆணையம் ரூ. 260 கோடியை பறிமுதல் செய்கிறது என்றால், அந்தத் தேதியில் முறையான ஆவணங்கள் இல்லாததால் பிடிபட்டிருக்கலாம். சரியான கணக்கைக் காட்டினால் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். ஆவணத்தை உடனே கொண்டு வரவில்லை என்றால் தவறு செய்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனாலும், ஆவணத்தைக் காட்டி விட்டால் பணத்தைத் திருப்பிக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்" என்கிறார்.
தமிழ்நாட்டுக்குப் பெருமையா?
`ஆர்.கே.நகரில் பண விநியோகத்தின் பேரில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தாரே?' என்றோம்.
``அவரிடம் ஒன்றைக் கேளுங்கள். அவரும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்தான் செலவு செய்தாரா. அவரது மகனும் அதே அளவுதான் செலவு செய்தாரா? ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரையில் வேறு தொகுதிக்கு வாக்காளர்களை வரவழைத்துப் பணம் கொடுத்தார்கள். ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கிறது என்றால் வேறு தொகுதியில் வைத்துப் பணம் கொடுத்தால் என்ன செய்ய முடியும்? எத்தனை அதிகாரிகள்தான் கண்காணிக்க முடியும்? ஒரு தொகுதிக்குள் 2 அல்லது 3 செலவின பார்வையாளர்கள்தான் இருப்பார்கள். ஆனால், ஆர்.கே.நகரில் 247 பேரை போட்டார்கள். அதில் இருந்தே தமிழ்நாட்டின் பெருமை தெரியவில்லையா?
நாடாளுமன்ற தேர்தலின்போது வேலூரில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், குடோனில் பணம் வைத்திருந்ததாகத் தகவல் வெளியானது. எவ்வளவு குடோன்களை ஆணையத்தால் ஆய்வு செய்ய முடியும்?
மக்களும், `எங்கே பணம் கொடுக்கிறார்கள், எவ்வளவு கொடுக்கிறார்கள்?' என்றுதான் பார்க்கிறார்கள். கடந்த தேர்தலில் ரூ. 30 கோடி என சொத்துகளைக் காட்டியவர்கள், இப்போது ரூ. 60 கோடியை காட்டுகிறார்கள். அரசியல் வர்த்தகமாக மாறிவிட்ட பிறகு சொல்வதற்கு என்ன இருக்கிறது?" என்கிறார் வேதனைக் குரலில்.
பறக்கும் படை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பும் வருமான வரித்துறை அதிகாரிகளின் தொடர் சோதனைகளும் பிரதானக் கட்சிகளை சற்று அச்சம் கொள்ளவே செய்துள்ளன. தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் கூகுள் பே, பேடிஎம் என இணைய வழி பரிவர்த்தனைகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பதை விட, பண விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பதற்றத்திலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக