Surya Xavier : சீமான் கருத்தியலை முற்றாக நிராகரிக்கிறேன். ஏன்?
சீமான் பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் விமர்சித்து தானே பேசுகிறார். பிறகு எப்படி பாஜக B டீம் என்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புவோர்கள் உண்டு. அரசியல் கட்சிகளை விமர்சிப்பதற்கும், அரசியலை விமர்சிப்பதற்குமான வேறுபாடுகள் உண்டு. இந்தக் கட்டுரையைப் படியுங்கள். நுட்பம் விளங்கும்.
முதலாளித்துவம் எப்பொழுதெல்லாம் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாக சூறையாடி, அவர்களை வாழ்வா சாவா என்ற நெருக்கடிக்குத் தள்ளுகின்றதோ, அப்பொழுதெல்லாம் முதலாளி வர்க்கம் தன்னை காப்பாற்றிக் கொள்ள தேசிய வெறியையும், இனவெறியையும் கைக்கொள்ளும் என்பதுதான் உலக வரலாறு.
எந்த ஒரு பாசிச சித்தாந்தமும் அதற்கான சமூகத் தேவை இல்லை என்றால், அது வெகுமக்களிடம் எடுபடாது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், அது துளிர்விட்டு முளைக்கும் போதே அதை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இல்லாமல் பலவீனமாக இருந்தோம் என்றால், பாசிசம் மெல்ல மெல்ல அதிருப்தியின் மீது படர்வதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும். இன்று அப்படியான ஒரு போக்குதான் தமிழகத்தில் சீமானின் வடிவில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.
சீமானின் கடந்த கால அரசியல் நிலைபாடுகளையும், தற்போதைய அரசியல் நிலைபாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து விமர்சனம் செய்வது என்பது மலத்தை குச்சிவிட்டுக் கிளறி ஆராய்ச்சி செய்வதைவிட அருவருப்பானது என்பதாலும், ஏற்கெனவே சமூக வலைதளங்களில் சீமானின் இரட்டை நாக்குப் பேச்சுகள் நிறைய குறைவின்றி கிடைப்பதாலும், அதை நோண்டிப் பார்க்காமல் நேரடியாக நாம் பிரச்சினைக்கு வந்து விடுவோம். சில தினங்களுக்கு முன்னால் சீமான் அவர்களின் பேட்டி ஒன்றை ஆனந்த விகடன் வெளியிட்டு இருந்தது. அதில்,
"கருணாநிதி, ஜெயலலிதா மீது நீங்கள் வெளிப்படையாக விமர்சனம் வைக்கிறீர்கள். அதேபோல், பெரியார் மற்றும் அண்ணா மீதும் விமர்சனம் வைக்கிறீர்களே?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,
''பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மண்ணை; இது பெரியார் மண், அண்ணாவின் பூமி என்று சொல்லி, ஐம்பது ஆண்டுகளுக்குள் தமிழகத்தைச் சுருக்குவதை எப்படி ஏற்றுக் கொள்வது? இந்த மண்ணில் சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், யோகிகள் இருந்திருக்கிறார்கள், சேர சோழ பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். தீரன் சின்னமலை நிலம் இது. மருதுபாண்டியர் வீரம் தெரிந்த மண் இது.
இப்படி எத்தனையோ பெருமை இருக்கும்போது பெரியார் மண் என்று அடக்குவது தவறு. பெண் விடுதலைக்குப் பெரியார் மட்டும் தான் போராடினாரா? சாதி ஒழிப்புக்குப் பலரும் போராடி இருக்கும்போது ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதும் தவறு தான்''.(நன்றி விகடன்:14/04/2019) என்று பதிலளித்து இருந்தார்.
சீமானின் இந்த பதிலைப் படிக்கும் யாரும் “அப்படி என்ன சீமான் தப்பாகப் பேசிவிட்டார், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தனக்கென தனித்த வரலாறும், பண்பாடும் கொண்ட ஒரு மண்ணை பெரியாரின் மண் என்று சொல்வது தப்புதானே, அதைத்தானே சீமானும் சொன்னார்” என்று குறுக்கித்தான் பார்ப்பார்கள்.
ஆனால் சீமானின் இந்த பதிலுக்குள் ஒளிந்திருப்பது அப்பட்டமான இன துவேசம் என்பதைத் தாண்டி, சீமான் கட்சி நடத்துவதே இந்த மண்ணில் வேர்விட்டு விழுதுகளாக இறங்கி இருக்கும் பெரியார் என்ற மாபெரும் சிந்தனையாளரின் கருத்துக்களை ஒழித்து, பார்ப்பனீய சித்தாந்தத்தை தமிழர்கள் மீது திணிப்பதற்கான முயற்சிதான் என்பது புலப்படும்.
சீமானின் ஒரே நோக்கம் இந்த மண்ணின் தனித்த பண்பாக அடையாளம் காணப்படும் பார்ப்பன எதிர்ப்பு மரபை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட்டு, அந்த இடத்தில் பார்ப்பனீயத்தை குடியமர்த்துவதுதான். அதற்காகத்தான் இன்று சீமான் எல்லாமுமாக தன்னை காட்டிக் கொண்டு கபட நாடகமாடிக் கொண்டு இருக்கின்றார்.
திராவிடக் கட்சிகளின் மேல் உருவாக்கப்படும் வெறுப்பால், இளைஞர்கள் பலர் மாற்று அரசியல் சிந்தனையைத் தேடி நகர்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை முற்போக்கு அரசியலின் பக்கம் சென்றுவிடாமல், அதற்கு அணைபோட்டு தடுக்கும் தந்திர அரசியலை சீமான் கையில் எடுத்திருக்கின்றார்.
இளைஞர்கள் பார்ப்பனப் பாசிசத்தின் வெறுப்பு அரசியலைப் பார்த்து பெரியாரின் பக்கம் போகின்றார்களா... அப்படி என்றால் பிஜேபிக்கு எதிராகவும், சாதிக்கு எதிராகவும் சில வார்த்தைகளைப் பேசுவார்.
அவர்கள் இடதுசாரி மார்க்சிய அரசியலின் பக்கம் போகின்றார்களா...? அப்படி என்றால் கொஞ்சம் ஊறுகாயாக பொதுவுடமையையும், சேகுவேராவையும் தொட்டுக் கொள்வார்.
இல்லை வலதுசாரிப் பாசிசத்தால் கவரப்படுகின்றார்களா? அதற்கும் முப்பாட்டன் முருகன், மாயோன் போன்றவற்றைக் கலந்து செய்த பாரம்பரிய தமிழ் லேகியத்தை முன் வைப்பார்.
இப்படித்தான் சீமான் தன்னுடைய அரசியலை சமீப ஆண்டுகளாக கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார்.
மாற்று சிந்தனை கொண்ட ஒரு புரட்சிக்காரன் போன்று உச்சகுரலில் பேசினாலும், தான் கட்சி ஆரம்பித்த பிரதான நோக்கத்தைத் தவற விடாமல், அந்த மையப் புள்ளியை சுற்றியே தனது பார்ப்பன அடிமை அரசியலை கட்டமைத்துக் கொண்டு இருக்கின்றார்.
கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், பல சமயங்களில் குறிப்பாக எச்.ராஜா போன்றவர்கள் பெரியார் சிலையை இடிக்க வேண்டும் எனப் பேசியபோது, அதற்கு எதிராக எதிர்வினை ஆற்றிய போதும், அவர் மனதில் பெரியாருக்கு எதிராக மண்டிக் கிடக்கும் வெறுப்பு இன்று வளர்ந்து பேரவதாரம் எடுத்து நிற்கின்றது. அதன் வெளிப்பாடுதான் இந்த மண்ணை எப்படி பெரியார் மண் என்று சொல்லலாம், பெரியார் மட்டும்தான் பெண்களுக்கு ஆதரவாகப் பேசினாரா என்பது போன்ற பிதற்றல்கள்.
சீமான் உண்மையில் யோக்கியமான மனிதராக இருந்தால், கடந்த 2000 வருட தமிழக வரலாற்றில் பெண்ணுரிமைக்காகப் பேசிய, அவர்களை போராட்ட களத்திற்குக் கொண்டு வந்த, அவர்களுக்கான உரிமைகளை தன்னுடைய போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுத்த ஒரு நபரையாவது மேற்கோள் காட்டி, 'இவர்கள் எல்லாம் பெண் உரிமைக்காகப் பேசியவர்கள்' என்று நேர்மையாக சொல்லிவிட்டு, அவர்களோடு பெரியாரை ஒப்பிட்டு 'பெரியார் ஒன்றும் பெரியதாகப் பேசவில்லை' என்று சொல்லி இருந்தால் அவரின் நேர்மையை நாம் பாராட்டலாம். ஆனால் போகிற போக்கில் அவதூறு செய்வது என்பது பாசிஸ்ட்கள் கடைபிடிக்கும் வழிமுறையாகும்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டு தமிழக வரலாற்றில் பெண்கள் மிக இழிவாக நடத்தப்பட்டார்கள் என்பதும், தமிழ் இலக்கியங்களில் பெண்களின் அடிமைத்தனமே அவர்களின் சிறப்பான குணங்களாகப் புகழப்பட்டன என்பதும், சீமான் சொல்லும் சேர, சோழ, பாண்டியர்கள் அனைவருமே பெண்களை கோயிலில் தேவதாசிகளாக வைத்திருந்தார்கள் என்பதும், இருப்பதிலேயே பெண்களை மிக இழிவாகப் பேசியது சித்தர் பாடல்கள்தான் என்பதும்தான் வரலாறு.
எவனாது ஒரு தமிழ் மன்னன் சாதிக்கு எதிராகப் போராடினான், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தான் என்று சொல்ல எதாவது ஒரு ஆதாரம் இருக்கின்றதா?
இன்று சீமான் பெருமையாக சொல்லிக் கொள்ளும் மன்னர்கள் உண்மையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயிலில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவரடியார்களாக பணியமர்த்தப்பட்டனர் என்ற செய்தியை தஞ்சைப் பெரிய கோவில் வட வெளிச்சுற்றுச் சுவரில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இந்தப் பெண்களுக்கு மணம் புரியும் உரிமை கிடையாது. இந்தப் பெண்கள் அர்ச்சகர்களின் ஆசைக்குட்பட்ட வைப்பாட்டிகளாகவும் விளங்கினர். இப்படி தமிழ் மன்னர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் தேவதாசி முறை மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முன்முயற்சியால் தான் ஒழிக்கப்பட்டது என்பதையும், அதற்குத் தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதும்தான் வரலாறு.
ராஜராஜன் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக இருந்தது மட்டும் அல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தினான். அவனது ஆட்சிக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் தனிக் குடியிருப்புகளில் அதாவது ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டனர். பெரிய கோவில் கல்வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளைக் குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் குறிப்பிடுவதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு தமிழ் மன்னனும் சாதியை ஒழிக்கப் போராடவில்லை.
சோழர்கள் மற்றும் தமிழகத்தின் குறுநில மன்னர்கள் பார்ப்பனர்களைக் கொண்டு வேத வேள்விகள் செய்தும், இரணிய கர்ப்பதானம், துலாபார தானம் போன்றவைகள் செய்தும், தங்களை சூத்திர அந்தஸ்தில் இருந்து மாற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டாலும், அவர்களால் சத்திரியர்கள் ஆக முடியவில்லை என்பதையும் வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. ஆனால் அவர்கள் தமிழ் மக்கள் சார்ந்த குலத்தவர்கள் என்பதிலிருந்து மாறி, சந்திர குலத்தவர், சூரிய குலத்தவர் என்று பெயர் சூட்டிக் கொள்ளப் பார்ப்பனர்கள் உதவி புரிந்தனர்.
மன்னர்கள்தான் பார்ப்பன அடிமைகளாக, ஆணாதிக்கவாதிகளாக இருந்தார்கள், சரி சீமான் குறிப்பிடும் சித்தர்கள் தான் ஏதாவது பெண் உரிமை சம்மந்தமாக குரல் கொடுத்து இருக்கின்றார்களா எனப் பார்த்தால் அருவருப்பு உணர்வுதான் ஏற்படுகின்றது.
இன்னும் சங்க இலக்கியங்கள் தொடங்கி பார்ப்பன பக்தி இலக்கியம் வரை எப்படி சாதியையும், பெண்ணடிமைத்தனத்தையும் இந்த மண்ணில் உரம் போட்டு வளர்த்தன என்று நம்மால் விலாவாரியாக எழுத முடியும். இது எல்லாம் சீமான் அறியாததும் அல்ல.
அவரின் காழ்ப்புணர்வுக்கு முக்கிய காரணம் பார்ப்பனியம் தமிழகத்தில் வேர்கொள்ள முடியாமல், அதை தடுத்துக் கொண்டிருக்கும் பெரியாரிய சிந்தனைகளை எப்படியாவது அடி அறுக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் பெரியார் மண் என்ற வார்த்தை அவரை சுட்டுக் கொண்டே இருக்கின்றது.
“தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்" என்றும், "அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ்" எனவும் தமிழிசை சவுந்தரராஜன் சொன்னபோது சீற்றம் அடையாத சீமான், இது பெரியார் மண் என்று சொல்லும்போது மட்டும் ஏன் சீற்றம் அடைகின்றார்? பார்ப்பனியத்தின் நேரடியான கைக்கூலிகளை நம்மால் எளிதில் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட முடியும். ஆனால் இது போன்று பெரியாரிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டதுபோல நாடகமாடி அடியறுப்பவர்கள் மிக ஆபத்தானவர்கள்.
சீமானின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்குள்ள மார்க்சிய-அம்பேத்கரிய-பெரியாரியச் சிந்தனையாளர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. கடந்த 2000 வருட தமிழக வரலாற்றில் பல பேர் சாதிக்கு எதிராகப் பேசி இருக்கின்றார்கள். ஆனால் அதை அரசியல் களத்திற்குக் கொண்டு வந்து இயக்கமாக மாற்றியவர் பெரியார். வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஓலைச்சுவடியிலும், தாள்களிலும் சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியவன் எல்லாம் சாதி ஒழிப்புப் போராளி அல்ல. நடைமுறையில் பெரும் மக்கள் திரளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தி, சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உரிமையை வென்றெடுத்ததில்தான் பெரியாரின் தனித்தன்மை இருக்கின்றது. அவர் களப்போராளி, களங்கமில்லா போராளி.
சீமானைப் போல வாயில் மட்டுமே வடை சுடும் வேலையைப் பார்த்தவரல்ல பெரியார். 2000 வருடங்களாக தமிழன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தமிழ் மக்களை மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் இழிவுபடுத்திக் கொண்டிருந்த அயோக்கியர்களை அம்மணமாக்கி ஓட ஓட விரட்டி அடித்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. சீமான் குறிப்பிடும் யாருமே அதைச் செய்யவில்லை என்பதுடன் அந்த இழிவுகளுக்குத் துணையாக இருந்தார்கள் என்பதுதான் வரலாறு.
சீமான் சொல்வதை எல்லாம் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தி பார்க்கத் தெரியாத ஒரு மூளை மழுங்கிக் கூட்டம் அவர் பின்னால் இருக்கின்றது. யோனிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்களும், ஜாதகம் பார்த்து குழந்தைகளுக்குப் பெயர் வைத்தவர்களும், எந்தவித மக்கள் போராட்டத்திலும் கலந்து கொள்ள விரும்பாமல், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் மட்டுமே தங்களது அரசியல் அரிப்புகளை தீர்த்துக் கொள்ள நினைப்பவர்களும், சுயசாதி சங்கங்களில் இருந்து கொண்டு அப்பட்டமாக சாதிவெறியை கக்கிக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் தான் இன்று சீமான் கட்சியில் கணிசமாக இருக்கின்றார்கள்.
அது போன்ற கும்பல்களுக்கு நாம் தமிழர் கட்சி பாதுகாப்பான இடமாக இருக்கின்றது. தமிழ் மக்களை இழிவு செய்யும் சாதியையோ, மதத்தையோ, கடவுளையோ எதையுமே விட்டுவிடாமல் புரட்சிக்காரன் வேடம் போட்டு புளுகித் திரிய வேண்டும் என்றால், அது போன்ற புல்லுருவிகளுக்கு ஏற்ற இடம் நாம் தமிழர் கட்சி. ஜாதி தமிழனின் அடையாளம் என்றும் கூட இந்தக் கூட்டம் பேசும். பாவம் அவர்களுக்கு ஜாதி என்ற சொல் தமிழில் இல்லை என்பது கூடத் தெரியாது.
அவர் கட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு இடம் கொடுத்தாலும், ஏன் 100 சதவீதமே இடம் கொடுத்தாலும் அதனால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. பிற்போக்குத்தனத்தையும், பார்ப்பன அடிமைத்தனத்தையும், சாதி வெறியையும், இனவெறியையும் ஏற்றுக் கொண்ட பெண்களை வைத்துக் கொண்டு எந்த ஒரு சமூக மாற்றமும் சாத்தியமில்லை.
ஆர்.எஸ்.எஸ் பிஜேபி சித்தாந்தத்தை தமிழகத்தில் இருந்து கருவறுப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இந்த மண்ணில் பார்ப்பனியத்தை வேர்கொள்ளச் செய்ய உள்ளடி வேலை பார்க்கும் சீமானின் இனவாத அரசியலை வேரறுப்பதும். மார்க்சிய பெரியாரிய இயக்கங்கள் இந்தப் பிரச்சினையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு களப்பணி ஆற்றவில்லை என்றால் நாம் பெரும் விலை கொடுக்க நேரிடும்.
சீமான், இத்தகைய நுட்பமான பார்ப்பனிய அரசியலை புரிந்து செயல்படும் சிந்தனையாளரும் அல்ல. அவருக்கு இது போன்று உண்மையாக இயங்கவும் தெரியாது, பார்க்கவும் தெரியாது.
ஆனால் அவரை இயக்குபவர்களுக்கு இந்த நுட்ப அரசியல் இயல்பானது. அவர்கள் சொல்வது போல் மட்டுமே பேச தெரிந்தவர். மீண்டும் சொல்கிறோம். சீமான் இயங்குபவரல்ல. பார்ப்பனிய ஆதிக்க சக்திகளால் இயக்கப்படுபவர்.
ஒன்றை நினைவில் வையுங்கள்.
பெரியாரை மட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் வரும் எவரையும் தோலுரிப்போம். அவர்கள் எவராகினும் பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தியலின் அடிவருடிகளே.
Surya Xavier
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக