இந்த நிலையில், கடந்த வாரம் குடியரசு தின விழா நடந்த பிறகு செங்கோட்டையை முற்றுகையிடுவதாகக் கூறி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் போராட்ட பகுதியில் வெளி நபர்கள் நுழையாத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரு புறமும் காவல்துறையினர் தடுப்பு அரண்களை அமைத்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சியினரும் விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் எழுப்ப அனுமதி மறுப்பு
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்ப எதிர்கட்சிகள் முயன்றபோது மக்களவையில் அதன் சபாநாயகரும் மாநிலங்களவையில் அதன் தலைவரும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து பேருந்து மூலம் எதிர்கட்சி எம்.பிக்கள் டெல்லி - உத்தர பிரதேசத்தை இணைக்கும் காஸிபூர் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனர். ஷிரோமணி அகாலி தளம் கட்சி எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி செளகத் ராய், திமுக எம்.பி கனிமொழி, மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், விழுப்பும் தொகுதி எம்.பி ரவிக்குமார் உள்பட 10 கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.பி.க்கள் அந்த பேருந்தில் சென்றனர்.
னால், காஸிபூரை நெருங்கும் மேம்பாலத்திலேயே காவல்துறையினர் தடுப்பு அரண்களை போட்டிருந்ததால், எம்.பி.க்களால் அங்கு வாகனத்தில் செல்ல முடியவில்லை.
இதையடுத்து நடந்து சென்று விவசாயிகளை சந்திக்க எம்.பி.க்கள் முற்பட்டபோது அங்கிருந்த காவல்துறையினர், "இது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி, இங்கிருந்து விவசாயிகளை சந்திக்க அனுமதி கிடையாது," என்று குறிப்பிட்டனர். ஆனால், மக்கள் பிரதிநிதிகளான தங்களை தடுக்க காவல்துறையினருக்கு உரிமையில்லை என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, வெங்கடேசன், ரவிக்குமார் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர்.
இருந்தபோதும் எம்.பி.க்களை மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்பதில் காவல்துறையினர் உறுதியாக இருந்தனர். இதனால் கோபம் அடைந்த திருச்சி சிவா, "இங்கிருந்து நாங்கள் செல்லமாட்டோம். உங்களால் முடிந்ததை செய்யுங்கள்," என்று காவல்துறையினரை பார்த்துக் கூறினார்.
"இது தடை செய்யப்பட்ட பகுதி," என்று ஒரு அதிகாரி கூறியபோது, "நாங்கள் எம்.பி.க்கள். இங்கு நிற்கிறோம். இதனால் என்ன வந்து விடப்போகிறது? இங்கு நாங்கள் நிற்பதால் என்ன நேருகிறது? நீங்களெல்லாம்தான் பதற்றத்தை உருவாக்குகிறீர்கள்," என்று திருச்சி சிவா சாடினார்.
இந்தியாவா, சீன எல்லையா?
டெல்லி எல்லையில் இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சூழல் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
"விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தொலைக்காட்சிகளில் பார்த்தபோது இருந்ததை விட நேரில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலை மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. விவசாயிகள் கூடாரம் அமைத்திருந்த பகுதிக்கு வெகு தூரத்திலேயே பல அடுக்கு தடுப்புகளை காவல்துறையினர் போட்டிருக்கிறார்கள். அவற்றில் முள்வேலிகள் சுற்றப்பட்டுள்ளன. எல்லைகளில்தான் இப்படிப்பட்ட நிலையை பார்த்திருக்கிறோம். இங்கு போராடும் விவசாயிகள் அடிப்படையில் இந்திய குடிமக்கள். தங்களுடைய உணர்வுகளை கூட ஜனநாயக முறையில் வெளிப்படுத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஏதோ போர் மண்டலத்தில் இருப்பது போல, கோட்டை அரண்களை போல காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது என்ன இந்தியாவா, சீன எல்லையா? இதை பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது," என்று கனிமொழி கூறினார்.
"விவசாயிகள், தங்களை சந்திக்க எம்.பி.க்கள் சிலர் வருகிறார்கள் என்ற தகவலறிந்து எங்களை சந்திக்க முன்வந்தபோதும் அவர்களை காவல்துறையினர் தடுத்து விட்டனர். விவசாயிகளின் குரல்கள் வெகு தூரத்தில் ஒலிப்பதை மட்டுமே எங்களால் கேட்க முடந்தது. நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரச்னைகளை எழுப்ப தினமும் நேரம் கேட்டு வருகிறோம். ஆனாலும் எங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து எங்களுடைய குரலை விவசாயிகளுக்காக ஒலித்துக் கொண்டே இருப்போம்," என்றார் கனிமொழி.
14 அடுக்கு தடுப்பு அரண்கள் தேவைதானா?
காஸிபூரில் உள்ள நிலைமை குறித்து விவரித்த எம்.பி வெங்கடேசன், "விவசாயிகளை பார்க்க வந்த எம்.பி.க்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்ல, இந்த பகுதியை ஏதோ இந்திய - சீன எல்லை போலவும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை போலவும் முள் வேலி கம்பிகளால் சுற்றப்பட்ட பதினான்கு அடுக்கு தடுப்புகளை காவல்துறையினர் போட்டிருக்கிறார்கள். இதை பார்க்கும் போது, ஜனநாயக நாட்டில் மனித உரிமை என்பது இங்கே இருக்கிறதா என கேட்கத்தோன்றுகிறது," என்று தெரிவித்தார்.
விவசாயிகள் பிரச்னைகள் மற்றும் அவர்களின் குரலாக நாங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக குரல் கொடுப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரும் விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான ரவிக்குமார் கூறினார்.
இந்த தடுப்புகளை எல்லாம் அகற்ற வேண்டும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கேட்டுக் கொண்டனர்.
பிறகு காஸிபூர் எல்லையிலேயே சுமார் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்த எம்.பி.க்கள், விவசாயிகளை நாங்கள் ஆதரிக்கிறோம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று குரல் எழுப்பிய பிறகு அங்கிருந்து டெல்லிக்கு பேருந்து மூலம் திரும்பினர். இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் அவர்கள் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக குரல் எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக