புதன், 3 பிப்ரவரி, 2021

நடு ரோட்டில் எழுந்த சுவர்கள்.. கூர்மையான ஆணிகள்.. இதுவரை நாடு காணாத கெடுபிடி!

சிமெண்ட் சுவர்கள்

Veerakumar - tamil.oneindia.co : டெல்லி: சுதந்திர போராட்ட காலத்தில் கூட நிகழாத ஒரு கெடுபிடி, டெல்லியை சுற்றிலும் தற்போது அரங்கேறிக் கொண்டு இருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள். 

ஆணியும்       மோடியும்


மத்திய அரசு கொண்டு வந்த, சர்ச்சைக்குரிய, 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக, டெல்லி-ஹரியானா டெல்லி-உத்தர பிரதேசம் உள்ளிட்ட 3 முக்கிய எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் போராட்டம் அமைதியாகத்தான் நடந்து வந்தது.                                ஆனால் குடியரசு தினத்தில் நடைபெற்ற பேரணியின்போது, சிலர் வன்முறையில் ஈடுபட்டதால் மொத்த பழியையும் தற்போது விவசாயிகள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத நிலவரம்.... குடியரசு தின நாளில், சில விவசாயிகள் டெல்லியின் மையப்பகுதி வரை வந்து காவல்துறையினருடன் மோதியதாக கூறப்படுகிறது.                       
       இது தொடர்பாக பலர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. மீண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க டெல்லி காவல்துறையை வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை கேள்விப்பட்டிராத வகையிலான முன்முயற்சிகளாக இருக்கின்றன இவை.




சிமெண்ட் சுவர்கள் போராட்ட களத்தின் ஒரு பகுதி, சிங்கு எல்லை. இங்கு, பிரதான நெடுஞ்சாலையின் ஒரு பக்கவாட்டில் இரண்டு வரிசை சிமென்ட் பேரிகேட்கள் இடையே இரும்பு கம்பிகளை கட்டி, அவற்றுக்கு இடையில் இரும்பு கம்பிகளைக் கட்டிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. டெல்லி-ஹரியானா எல்லையில் நெடுஞ்சாலையின் மற்றொரு பகுதியில் தற்காலிக சிமென்ட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் காசிப்பூரில் டெல்லி-உத்தரபிரதேச எல்லையும் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில ஆயுதப் படை மற்றும் விரைவு அதிரடிப் படை (ஆர்ஏஎஃப்) உட்பட நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டனர். நிலைமையைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பஞ்சர் செய்ய ஏற்பாடு இதற்கிடையில், திக்ரி எல்லையில், வாகனங்களின் நடமாட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் பல அடுக்குகள் தடுப்புகள் போடப்பட்டு, சாலையில் ஆணிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. சிமெண்ட் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமதியின்றி டெல்லிக்குள் நுழைய முயன்றால், அந்த வாகனங்களின் டயர்கள் பஞ்சர் செய்யப்படும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

சுதந்திர போராட்ட காலம் காந்தியடிகள் வெள்ளையர்களை எதிர்த்து தண்டி யாத்திரை சென்றபோது கூட பிரிட்டிஷ் காவல்துறை அதை தடுக்கவில்லை.. ஆனால் நமது ஜனநாயக நாட்டில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இதுபோல சாலைக்கு குறுக்கே மதில் எழுப்புவது, ஆணிகளை ரோட்டில் நட்டு வைப்பது என்று அளவுக்கு மீறி செல்கிறார்கள் என்று கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.

நாட்டு எல்லை பாதுகாப்பு சீனா அல்லது பாகிஸ்தான் எல்லையில் எதிரி நாட்டுப் படைகள் உள்ளே வராமல் தடுப்பதில் தான் இந்திய அரசு கவனம் செலுத்தி இருக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க கூடாது, என்று மேலும் சில நெட்டிசன்கள் விமர்சனம் செய்வதை பார்க்க முடிகிறது.

ராகுல் காந்தி இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பதிவில், பாலத்தை கட்டுங்கள், சுவரை கட்டாதீர்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மக்களை இணைக்க வேண்டும்.. பிரிக்க கூடாது என்பது இதன் உள் அர்த்தம் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் பின்னூட்டத்தில், கூறி வருவதை பார்க்க முடிகிறது.


கருத்துகள் இல்லை: