புதன், 3 பிப்ரவரி, 2021

ஒளிப்பதிவாளர் இயக்குனர் பி.எஸ். நிவாஸ் காலமானார் .

Ajayan Bala Baskaran : ஒளிப்பதிவாளர் நிவாஸ் மறைந்தார் என்ற செய்தி வருத்தம் அளித்தது.
அவரை சந்தித்து ஒரு பேட்டி எடுத்து காணொளியில் போட வேண்டும் என்று விருப்பம் வைத்திருந்தேன்.
அது நிறைவேறாமல் போய் விட்ட கனவுகளில் ஒன்றாகிப் போனது.
16 வயதினிலே படத்தில் அவர் போட்ட நீண்ட ட்ராலி ஷாட் இப்போதும் பிரமிக்க வைப்பது.
ஜூம் லென்சை தனது படங்களில் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
அத்தகைய ஷாட்டுகளில் தனி முத்திரை பதித்தவர்.
உதாரணமாக ஒரு முகத்திற்கு ஜூம் போகும்போது மிகத்தெளிவாக நேர்கோட்டில் பயணிப்பார்.அது முகத்திற்கு நேராக இல்லாமல் சற்று விலகி மையம் கொண்டாலும் கேமராவை வெகு அழகாக நகர்த்தி அந்த முகத்தை பிரேமின் நடுவில் இடம்பெறச் செய்து அழகு படுத்துவார்.
உதாரணமாக ஜூம் போகும் போது முகத்தை விட்டு சற்று விலகி ஃப்ரேமில் காது மட்டும் இடம்பெறும் என்றாலும் கவலைப்பட மாட்டார்.
காதிலிருந்து அந்த முகம் முழுமையாக தெரியுமாறு ஜூம் முடிந்தபிறகு கேமராவை கவிதையாக நகர்த்தி முழுமையாக பிரேமிற்குள் கொண்டு வந்துவிடுவார்.
பல ஒளிப்பதிவாளர்கள் ஜூம் செய்யும் போது முகத்தில் மையம் கொள்வதற்காக ஜூம் போகும்போதே கேமராவை நகர்த்தி நடுங்கிக் கொண்டு போகுமாறு அந்த ஷாட்டை கட்டமைத்து விடுவார்கள்.
சிகப்பு ரோஜாக்கள் படத்தில்தான் முதன்முதலாக ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமா ஒளிப்பதிவு பதிவாகியது.
ஹாலிவுட் படங்களில் மட்டுமே நான் பார்த்த சில காட்சி அமைப்புகள் கோணங்கள் மிக அற்புதமாக சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இடம் பெற்றது.
கல்லுக்குள் ஈரம் என்ற படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்து தனது ஆளுமையை நிரூபித்து இருந்தார்.
ஆர்வோ நெகட்டிவில் படம் பிடித்து தரத்தை நிரூபித்தவர்களில் தலையானவர் நிவாஸ்.
அதனால்தான் ஆர்வோ நிறுவனம் தனது வரவேற்பறையில் 16 வயதினிலே படக்காட்சியை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
ஆர்வோ நெகட்டிவில் லைட்டிங் செய்து ஒருவர் திறமை காட்டிவிட்டால் அவரை உலகிலேயே தலை சிறந்த ஒளிப்பதிவாளர் பட்டியலில் சேர்த்து விடலாம்.
ஹாலிவுட்டில் பணி புரிந்திருந்தால் உலகின் பிரபல ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக நிவாஸ் நிச்சயம் திகழ்ந்து இருப்பார்.
அன்புடன்
உலக சினிமா பாஸ்கரன்

கருத்துகள் இல்லை: