maalaimalar : புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 73-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில்
வன்முறை ஏற்பட்டது. இது விவசாயிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதன்
பிறகு 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து அமைதியாக போராடி
வருகிறார்கள்.
அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்துகிறோம் என்பதை பொதுமக்களின்
கவனத்துக்கு கொண்டு செல்லவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும், வேளாண்
சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடுமுழுவதும்
இன்று ‘சக்கா ஜாம்’ எனப்படும் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக
விவசாயிகள் அறிவித்தனர்.
அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு விவசாயிகளின் நெடுஞ்சாலை மறியல் போராட்டம்
தொடங்கியது. பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள முக்கிய
நெடுஞ்சாலைகளில் 3 மணி நேரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது ஆம்புலன்ஸ், பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்ற
வாகனங்கள், அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கான வாகனங்கள், பள்ளி வாகனங்கள்
ஆகியவை தடுத்து நிறுத்தப்படவில்லை. அவற்றை விவசாயிகள் அனுமதித்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் விவசாயிகள்
மறியல் போராட்டத்தை நடத்தினார்கள்.
மறியல் போராட்டத்தின்போது சாலையில் சிக்கி கொண்ட வாகன ஓட்டிகளுக்கு உணவு,
தண்ணீர் ஆகியவற்றை விவசாயிகள் வழங்கினார்கள். மேலும் ஆரோக்கிய உணவுகளான
கொண்டைகடலை, பச்சை பட்டாணி ஆகியவற்றையும் பொதுமக்களுக்கு வழங்கி வேளாண்
சட்டங்களின் பாதகங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
டெல்லியில் அனைத்து போராட்டங்களும், மறியல் தளங்கள் போலவே காணப்படுவதால்
டெல்லிக்குள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படவில்லை என்று விவசாய
சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி டெல்லியில் மறியல் போராட்டம்
நடத்தப்படவில்லை.
டெல்லியில் விவசாயிகள் ஏற்கனவே போராட்டம் நடத்தி வருகிற இடங்களை தவிர மற்ற
இடங்களில் உள்ள சாலைகளில் வழக்கமான போக்குவரத்து நடைபெற்றது.
அதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் இன்று மறியல்
போராட்டம் நடத்தப்படாது என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
அங்கு கரும்பு அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் இன்று மறியல் போராட்டம்
நடத்தப்படவில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். அதன்படி உத்தரபிரதேசம்,
உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று விவசாயிகள் மறியல் போராட்டத்தில்
ஈடுபடவில்லை.
ஏற்கனவே விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால்,
இன்றைய விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும்
நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் போலீசார்
உஷார்படுத்தப்பட்டனர்.
டெல்லியில் பாதுகாப்பு பணிக்காக டெல்லி போலீசார், ரிசர்வ் போலீஸ் படை என
மொத்தம் 50 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 60 கம்பெனி துணை ராணுவ
படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் டெல்லியின்
எல்லைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு நிபுணர் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். மோப்ப நாய்களும்
பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. டெல்லியில் உள்ள வணிக
வளாகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய
இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 12 மெட்ரோ ரெயில்
நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. டெல்லி
செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக விவசாய
சங்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியின் எல்லை பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா மூலம் போலீசார்
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தன்று ஏற்பட்ட வன்முறைபோல
அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர்.
டெல்லியின் எல்லை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
பதற்றம் நிறைந்த பகுதிகளான காளிந்தி குஞ்ச், அக்ஷர்தாம், நாரைனா மற்றும்
நரேலா ஆகிய இடங்களில் கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன.
டெல்லி-நொய்டா பாதையான காளிந்தி குஞ்ச் எல்லைப்பகுதி முற்றிலுமாக
மூடப்பட்டது. மற்ற இடங்களில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டு இருந்தன.
டெல்லி பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால்
அங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. போலீஸ் ரோந்து வாகனங்களும்
தயார் நிலையில் இருந்தன.
டெல்லியின் முக்கிய எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. காசிப்பூர் எல்லை
பகுதி வழியாக விவசாயிகள் டிராக்டர்களுடன் புகுந்து விடக்கூடாது என்பதற்காக
அந்த பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
வன்முறை சம்பவங்கள் ஏற்படாத வகையில் டெல்லி முழுவதும் முன் எச்சரிக்கை
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக