பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லியில் போராட்டம் நடத்தும் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மொகாலி நகரங்களில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமர்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி முழக்கமிட்டனர்.
காஷ்மீரில் ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் அமர்ந்து மூன்று மணி நேரம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சமயத்தில் எந்த வாகனங்களும் அப்பகுதியில் இயக்கப்படவில்லை.
பெங்களூரு அருகே ஏலகங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில்
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டினர். இதுபோன்று அரியானா மாநில எல்லையான சாஜகான்பூரில் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில், சென்னை அண்ணா சாலையில், தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 30 பேர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிஆர் பாண்டியன், 70 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்காத பிரதமர் மோடியை தமிழக விவசாயிகள் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
இதனிடையே டெல்லியில் போராடும் விவசாயிகள் டெல்லி- டாபர் திகாரா சாலையோரத்தில் பூச்செடிகளை நட்டு நல்ல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். முன்னதாக விவசாயிகளின் டிராக்டர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இரும்பு கம்பிகளை அமைத்து போலீசார் தடுத்தனர். அதோடு சாலைகளில் ஆணி அடித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆணி அடித்த பகுதிகளில் ரோஜா உள்ளிட்ட பூச்செடிகளை நட்டு விவசாயிகள் நல்லெண்ண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலியாக திக்ரி, சிங்கு எல்லையில் இன்று இரவு வரை இன்டர்நெட் சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக