வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

எடப்பாடி- ஓ.பன்னீர்: என்ன சொல்கிறார் சசிகலா?

எடப்பாடி- ஓ.பன்னீர்: என்ன சொல்கிறார் சசிகலா?
minnnambalam :  ஏழரைக்குப் பின்புதான் எட்டு வரும்; ஆனால் எட்டுக்குப் பின்தான், தமிழகத்தில் ஏழரை ஆரம்பிக்கப் போகிறது. நான்காண்டு சிறைவாசம், பத்து நாள்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை, ஏழு நாள்கள் தனிமைக்குப் பின்பு வரும் எட்டாம் தேதியன்று தமிழகத்துக்கு வரவிருக்கிறார் சசிகலா. அன்றைக்கு கர்நாடகா எல்லையிலிருந்து சென்னை வரையிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படவிருப்பதாக டிடிவி தினகரன் சொல்லியிருக்கிறார். சசிகலாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சுவரொட்டிகள் தெறிக்கின்றன.அவர் வந்த காரில் அதிமுக கொடி இருந்தது தொடர்பாக, தமிழக காவல்துறை தலைவரிடமே அமைச்சர்களே நேரில் சென்று புகார் கொடுத்திருக்கின்றனர். தமிழக எல்லைக்குள் அதிமுக கொடி கட்டிய காரில் வந்தால், சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன்முகம் காட்டியிருக்கிறார் தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சர் சண்முகம். கொடியை மட்டுமல்ல; கரைவேட்டி கட்டி வருகிறோம்; முடிந்தால் அவிழ்த்துப் பாருங்கள் என்று கர்நாடகா செய்தித் தொலைக்காட்சிகளில் சீறுகிறார்கள் சின்னம்மா பேரவையினர்.

நம்பிக்கை தீர்மானத்தன்று சட்டை கிழிந்து ஸ்டாலின் வெளியே வந்த நாளுக்குப் பின்பு, பிரேக்கிங் நியூஸ்க்கு பெரிய பிரேக் கொடுத்திருந்த தமிழக செய்தி சேனல்கள், சசிகலாவின் வரவுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. அவர் வந்தால் அதிமுகவில் என்னென்ன நடக்கும் என்று எதிர்க்கட்சியினரும் ஆளுக்கு ஆள் கதை கட்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே சசிகலாவைத்தானே குனிந்து வளைந்து கும்பிடு போட்டார்கள்; இப்போது ஏன் இவ்வளவு வன்மம் காட்டுகிறார்கள் என்று அமைச்சர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களும் ஆச்சரியத்தில் மூழ்கிக்கிடக்கின்றனர்.

டிடிவி தினகரன் பேட்டி கொடுப்பதைப் பார்த்தால், அதிமுக தலைமைக்கு எதிராகவும், குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு எதிராகவும் சசிகலா ஆவேசமாக களமிறங்குவார் என்று பலருக்கும் தோன்றுகிறது.

மற்றவர்களை விடுங்கள்...உண்மையில் சசிகலாவின் மனநிலை எப்படியிருக்கிறது?

அதிமுக தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்கு அவர் களமிறங்கிப் போராடப் போகிறாரா, அரசியல் இனி நமக்கு எதற்கு என்று ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிடப்போகிறாரா...தமிழகமே தவிப்போடு காத்திருக்கிறது.

சசிகலாவுடனும், அவருடைய குடும்பத்தினருடனும் நெருக்கமாகவுள்ள சிலரிடம் பேசினோம்...

‘‘மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் சின்னம்மா. இப்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்கள் பலரும், எப்போது முதல் முறையாக அம்மாவைப் பார்க்க வந்தார்கள், யார் மூலமாக அவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது, அவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது எதற்காக, அமைச்சரானது எப்படி என்பதிலிருந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்குச் செல்லும்முன் ஒவ்வொரு அமைச்சரைப் பற்றியும் அம்மாவிடம் இருந்த தகவல்கள் என்னென்ன என்பது வரைக்கும் அனைத்தும் அறிந்தவர் சின்னம்மா மட்டுமே.

இன்றைக்கு வரையிலும் யாருக்குமே அவர் பகிர்ந்து கொள்ளாத எத்தனையோ விஷயங்கள் அவரிடம் புதைந்து கிடக்கின்றன. அவரை அரசியலில் இருந்து மொத்தமாக ஓரம்கட்டி வீட்டில் உட்கார வைத்துவிட்டால் எல்லா விஷயங்களையும் மொத்தமாக மறைத்துவிடலாம் என்று பலர் நினைக்கின்றனர்.

இதற்கு எதிராக சின்னம்மா கிளர்ந்தெழ வேண்டுமென்று சிலர் துாண்டிவிடுகிறார்கள். ஆனால் அவர் ஆத்திரப்படவோ, ஆவேசப்படவோ இல்லை. நிதானமாக இருக்கிறார். அரசியலில் இதை விட மிகவும் கஷ்டமான சூழலை எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார். அப்போதெல்லாம் அவர் எடுக்கும் முடிவுகள் சற்று அதிரடியாகவும் ஆவேசத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். இப்போது அப்படியில்லை. முதல்வர் உட்பட அமைச்சர்கள் பலரும் தனக்கு எதிராக பேட்டி கொடுத்து, பகிரங்கமாக பகைமையை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் அவர் யார் மீதும் கோபப்படவில்லை. நிறையவே வருத்தப்படுகிறார்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தும் திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், அந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கு வியூகம் அமைத்தது சின்னம்மாதான். வெறும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியுமென்று அதற்கான வேலைகளைச் செய்ததும் அவர்தான். அன்றைக்கு ஆட்சியைப் பிடிக்காமல் இருந்திருந்தால் இவர்களெல்லாம் இத்தனை ஆண்டுகளாக அமைச்சர்களாக வலம் வந்திருக்க முடியுமா, இவ்வளவு சம்பாதித்திருக்க முடியுமா, அரசியலில் அடையாளத்தைப் பெற்றிருக்க முடியுமா...இதையும் சிலர் எடுத்துச் சொன்னபோதும்கூட அவரிடம் பெரிய ரியாக்ஷனைப் பார்க்க முடியவில்லை.

இப்போது தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக ஆட்சிக்கு எதிராகவோ, தற்போது தலைமையில் இருப்பவர்களுக்கு எதிராகவோ அவர் சொல்லும் ஒரு வார்த்தையும் அரசியல் களத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். அது வேண்டாமென்று அவர் நினைக்கிறார். ‘இந்தக் கட்சியையும் சின்னத்தையும் காப்பாற்றுவதற்கு 1989 லிருந்து நான் எப்படியெப்படி உழைத்தேன் என்பது என்னுடைய மனசாட்சிக்குத் தெரியும்; அக்காவின் ஆன்மாவுக்குத் தெரியும். அப்படியிருக்க அதே கட்சி உடைந்துபோவதற்கு நான் எப்படிக் காரணமாக முடியும்’ என்று கேட்கிறார் அவர்.

பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவதற்கு தன்னுடைய பேச்சோ, நடவடிக்கையோ எந்தவகையிலும் துணை போகக்கூடாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தேர்தல் முடியட்டும்; அதற்குப் பின்பு கட்சியை யார் வழி நடத்துவது என்பதற்கு காலம் ஒரு விடை சொல்லுமென்று நம்புகிறார். அதனால் எங்களுக்குத் தெரிய, எட்டாம் தேதியன்று அவர் தமிழகத்திற்கு வந்தாலும், உடனடியாக எந்த ஸ்டேட்மென்ட்டும் கொடுக்கமாட்டார். தேர்தல் முடிவு வரையிலும் அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்பதுதான் எங்களுடைய யூகம்!’’ என்று சசிகலாவின் மனநிலையை விவரித்தார்கள்.

ஆனால் இன்னும் சிலரோ, “விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது சாதாரண ஒரு காரில் ஏறி சசிகலா ஓய்வெடுக்கப் போயிருக்கலாம். ஆனால் அவர் அப்படி அவர் போகவில்லை. அம்மா பயன்படுத்திய கார், அதிமுக கொடி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார். தனது அடுத்த கட்ட செயல்பாடு என்ன என்பதற்கான தெளிவான சமிக்ஞைதான் இது”என்று வேறு மாதிரிப் பேசுகிறார்கள்.

சசிகலாவின் அமைதியோ, அதிரடியோ நிச்சயம் ஓர் அரசியல் புயல் காத்திருக்கிறது.

–பாலசிங்கம்

கருத்துகள் இல்லை: