அண்ணா அரியணை ஏறினார்! செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்' ஆனது. சட்டசபை 'சட்டமன்றம்' ஆனது. பார்லிமென்ட் 'நாடாளுமன்றம்' ஆனது. கோர்ட் 'நீதிமன்றம்' ஆனது. 'மன்றம்' என்ற சொல்லையே மீட்டெடுத்தவர் அண்ணா! அரசு ஏடுகளில், ஸ்ரீ - ஸ்ரீமதி - குமாரி மறைந்து 'திரு - திருமதி - செல்வி' வந்தனர். மெட்ராஸ் ஸ்டேட் 'தமிழ்நாடு' ஆனது ! தமிழ் தலைநிமிர்ந்தது !! CNA is our DNA
Anna Mahizhnan : தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர்
அண்ணாவின் நினைவு நாள் இன்று! தமிழ் மொழியின் வளப்பத்தையும் சிறப்பையும், தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும், தமிழறிஞர்களின் புத்தகங்களைப் படித்து அறிந்து கொண்டவர்களை விட, பேரறிஞர் அண்ணாவின் சீரிய எழுத்துக்களாலும், ஆற்றொழுக்கான சொற்பொழிவுகளாலும் அறிந்து கொண்ட சாமானியத் தமிழர்கள் பல லட்சம் பேர். அறிஞர் என்றும் பேரறிஞர் என்றும் அண்ணாவை அழைத்ததற்குக் காரணம் அவரது அறிவாற்றல் மட்டுமல்ல, எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் அவருடைய பேராற்றலும் ஆகும். அண்ணா அவர்கள் படிக்கும் பொழுது, அது தமிழாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும் பத்தி, பத்தியாகப் படிப்பார் என்பார்கள். விவேகாநந்தர் பக்கம் பக்கமாகப் படிப்பார் என்பார்கள். அந்த அளவிற்குக் கூரிய அறிவுத்திறன் வாய்க்கப் பெற்றவர் பேரறிஞர் அண்ணா.
அண்ணா அவர்கள் உலகத்தமிழ் மாநாட்டில் பேசியதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால், அன்று அண்ணா என்ன பேசினார் என்பதை உள்வாங்கிக் கொள்ளும் அறிவோ, வயதோ எனக்கு அப்பொழுது இல்லை. பின்னாளில், அண்ணாவின் எழுத்துக்களையும், பேச்சுக்களயும் படித்ததற்குப் பிறகும், அவரைப் பற்றி மற்ற அறிஞர்கள் சொல்லக் கேட்டும்தான் அண்ணா அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
பேரறிஞர் அண்ணாவின் ஆங்கிலத்தின் மீது எனக்கு ஒரு மோகமே உண்டு. அண்ணாவைப் போல ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் வேண்டும் என்று எனக்கு ஒரு பேராசை உண்டு. ஆனால், இன்று வரை அந்த ஆசையில் நூறில் ஒரு பங்கு கூட நிறைவேற வில்லை.
அண்ணா அவர்கள் பல அறிவுச் செய்திகளைப் போகிற போக்கில் உதிர்த்து விட்டுப் போவார். ‘வோல்கா முதல் கங்கை வரை’ (Volga to Ganga) என்ற புத்தகத்தை, புகழ்பெற்ற வங்காள வரலாற்றுப் பேரறிஞர் இராகுல சாங்கிருதியாயன் அவர்கள் 1944ல் எழுதினார். அந்த புத்தகத்தைப் படித்துப் பார்த்த அண்ணா அவர்கள், ‘இராகுல சாங்கிருதியாயன் அவர்கள் மனிதப் பண்பாட்டை ருசியாவில் உள்ள வோல்கா நதியிலிருந்து தொடங்கி, கங்கை நதிக்கரையில் முடிக்கிறார். ஆனால், உண்மையில், மனிதப் பண்பாட்டின் தொடக்கத்தை, காவிரிக் கரையிலிருந்து தொடங்கி எழுத வேண்டும்’ என்றார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும், தமிழ்ப் பண்பாட்டையுமே எப்பொழுதும் முன்னிறுத்தியவர்.
அதனால்தான் தமிழ் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று போராடினார். ஏதோ, 1967ல் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்று அண்ணா அவர்களைப் பற்றிச் சிலர் தவறாகச் சித்தரிக்கக் கூடும். ஆனால், உண்மை அதுவல்ல. தொடக்க காலத்திலிருந்தே அண்ணா அவர்கள் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று போராடியவர்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், பாராளுமன்ற மேலவை உறுப்பினரான பிறகு, 1963 ஆம் ஆண்டு மே மாதம், இந்தியப் பாராளுமன்றத்தில் “தமிழ்நாட்டிற்கு ஏன் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும்” என்ற மசோதாவின் மீதான வாதத்தில் கலந்து கொண்டு வைத்த அசைக்க முடியாத வாதத்தின் ஒரு பகுதியை, அண்ணா அவர்கள் உரையாற்றியவாறே ஆங்கிலத்திலும், அதனை என்னுடைய சிற்றறிவிற்கு இயன்ற அளவில் தமிழிலும் மொழிபெயர்த்துத் தருகின்றேன்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான், தமிழ் இலக்கியத்தில் தமிழ் நாடு என்ற சொல் இல்லை என்று அந்த விவாதத்தில் கூறி விட்டார். அதற்கு மறுப்பாக, அண்ணா அவர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களைத் தமிழ் இலக்கியத்தில் இருந்து பல சாண்றுகளை இந்தியப் பாராளுமன்றத்தில் கீழ்க்கண்டவாறு எடுத்து வைக்கிறார்.
Paeraringar Anna’s speech in English:
“I am not surprised at his arguments that nowhere in Tamil literature does the word Tamil Nadu occur. A politician who cannot understand that Kollegal does not form part of Tamil Nadu cannot be expected to be conversant with Tamil literature.
For the edification of the House and for his own edification, I will point out the names of certain books wherein the word Tamil Nadu is to be found. These are books written 1800 or 2000 years ago.
I am reading the name in Tamil but the Hon. Member who made this allegation is a Tamilian Congressman and he can understand and the Hon. Deputy Minister who will be making the reply. She being also a Tamilian may tell him.
The names of Paripaadal, Pathitrupathu and more popular names of Silapathigaram and Manimegalai. These are all Tamil classics written more than 1000 years ago and in Paripaadal it is stated “ Thandamizh veli Thamizh Naatu agamellam” which means Tamil Nadu that is surrounded by sweet Tamil on all three sides.
In Pathitrupathu, a classic written about 1800 years it is stated “ Imizh kadal veli Thamizhagam” meaning Tamil Nadu which has got sea as boundary. In Silapathigaram it is stated “ Then Thamizh nannadu” meaning good Tamil Nadu and in Manimegalai it is stated“Sambutheevinul Tamizhaga marungil “ Tamil Nadu which is called Sambutheevu.
If my Hon. Members would like to have more popular illustrations I would like to refer them to the poems of Poet Kamban and Sekkilar both of whom have definitely used the word Tamil Nadu. It was only afterwards that there were three kingdoms, the Cheranadu, The Cholanadu and the Pandyanadu.
Tamil Nadu is to be found in the classics of Tamil. It is not that there is poverty of ideas in the classics. It only shows that my Hon. friend does not spend much thought or time over the Tamil classics.
I may point out for the edification of this House that when the Congress government in Tamil Nadu purchased the Jaipur Palace at Ooty known as Aranmore Palace they immediately renamed the Palace as Thamizhagam”.
இதன் தமிழாக்கம்:
அண்ணா: “தமிழ் இலக்கியத்தில் எங்குமே தமிழ்நாடு என்ற சொல் பயன்படுத்தப் பட வில்லை என்று அந்த உறுப்பினர் கூறியது எனக்கு எந்தவிதமான ஆச்சரியத்தையும் அளிக்க வில்லை. கொள்ளேகால் என்ற மாவட்டம் (இன்று) தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இல்லை என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத ஒரு அரசியல்வாதி, எப்படித் தமிழ் இலக்கியத்தை அறிந்தவராக இருக்க முடியும்?
இந்த மாமன்றம் அறிந்து கொள்வதற்காகவும், அந்த உறுப்பினரின் அறிவிற்கு ஏறும் வகையிலும் (அண்ணா அவர்கள் இங்கு ‘edification’ என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார். இதனை ‘education’ என்ற சொல்லாலும் குறிப்பிடலாம். ஆனால், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து’ என்ற வள்ளுவரின் அடியொற்றி அண்ணா அவர்கள், ‘edification’ என்ற ஆளுமை மிக்க சொல்லைப் பயன் படுத்துகிறார். அதனால்தான் அவர் அண்ணா, பேரறிஞர் அண்ணா.) நான் இங்கே ‘தமிழ் நாடு’ என்ற சொல், எந்தெந்த இலக்கியங்களில் காணக்கிடக்கிறது என்பதையும், அது இடம் பெற்றிருக்கக் கூடிய சில தமிழ் இலக்கியங்களின் பெயர்களைக் கூறுகின்றேன்.
இந்த இலக்கியங்கள் எல்லாம் 1800 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. அவற்றின் பெயர்களை நான் தமிழில் கூறுகின்றேன். ஏனென்றால், (தமிழ் இலக்கியத்தில் எங்குமே தமிழ்நாடு என்ற சொல் பயன்படுத்தப் பட வில்லை என்ற) இந்தக் குற்றச்சாட்டைக் கூறியவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த காங்கிரசுக்காரர் என்பதால் அவர் புரிந்து கொள்வார். அதேபோல், இந்த விவாதத்திற்கு பதில் அளிக்கப் போகிற துணை அமைச்சர் (அம்மையார்) அவர்களும் தமிழர், எனவே, (அந்த உறுப்பினருக்கு விளங்கவில்லை என்றால்) அமைச்சரும் இதனை அந்த உறுப்பினருக்கு எடுத்துக் கூறலாம்.
அந்த இலக்கியங்களின் பெயர்கள், பரிபாடல், பதிற்றுப்பத்து மற்றும் புகழ் பெற்ற சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை. இவையெல்லாம், 1000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட செம்மாந்த இலக்கியங்கள்.
பரிபாடல், “தண்டமிழ் வேலி தமிழ் நாட்டு அகமெல்லாம்” என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள் தமிழ்நாடு, முப்புறமும் இனிய தமிழ் சூழ்ந்த நாடு என்பதாகும்.
1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதிற்றுப்பத்து, “இமிழ் கடல் வேலி தமிழகம்” என்று பேசுகிறது. இதன் பொருள், “தமிழ்நாட்டின் எல்லைகள் கடலே’ என்பதாகும்.
சிலப்பதிகாரம், “தென் தமிழ் நன்னாடு’, என்று இயம்புகிறது. “சம்புத்தீவினுள் தமிழக மருங்கில்” என்று மணிமேகலை செப்புகிறது. தமிழ்நாட்டிற்கு, சம்புத்தீவு என்ற பெயரும் உண்டு.
என்னுடைய மாண்புமிகு உறுப்பினர்களுக்கு இன்னும் புகழ்பெற்ற ஆதாரங்கள் தேவையென்றால், பெருங்கவிஞர்களான கம்பனும், சேக்கிழாரும் எங்கெங்கு தமிழ் நாடு என்ற சொல்லைப் பயன் படுதியிருக்கின்றார்கள் என்றும் என்னால் எடுத்துக்காட்ட முடியும்.
பின்னாளில்தான், சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்ற முப்பெரும் பேரரசுகள் தோன்றின. உயர்தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களில் எல்லாம் தமிழ் நாடு என்ற பெயர் விரவிக் கிடக்கிறது. தமிழ் இலக்கியத்தில் கருத்துக்களுக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை.
இதனால் நாம் அறிவது என்னவென்றால், என்னுடைய மாண்புமிகு நண்பர் (குற்றச்சாட்டை சாட்டிய காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர்) தமிழ் இலக்கியத்தை அறிந்து கொள்வதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கி அவற்றை அறிந்து கொள்ள முயல வில்லை என்பதுதான்.
இந்த நேரத்தில் இன்னொன்றையும் இந்த மாமன்றத்தின் நல்லறிவிற்காக குறிப்பிட விரும்புகின்றேன். தமிழ்நாட்டின் காங்கிரசு அரசாங்கம், ஊட்டியில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையை வாங்கியவுடன், “ஆரன்மோர் அரண்மனை” என்ற அந்த அரண்மனையின் பெயரை, உடனடியாக “தமிழகம்” என்றே பெயர் மாற்றம் செய்தது”.
இப்படி அண்ணா அவர்கள் ஆணித்தரமாக, அழகான ஆங்கிலத்தில், அடுக்கடுக்கான வாதங்களை இந்திய பாராளுமன்றத்தில் வைத்து, 1963ல், தமிழ் நாட்டிற்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று போராடியவர்.
அண்ணா அவர்களின் இந்த முழு உரையையும் தமிழில் மொழி பெயர்த்து பகுதி பகுதியாகப் பதிவிட எண்ணி உள்ளேன். எப்பொழுது? யாரறிவார்?
அந்த மாமனிதரின் நினைவு நாள் இன்று. அவரின் மறைவு, தமிழகத்தின் வரலாற்றைத் திசை மாறி ஓடச் செய்து விட்டது என்றால் மிகையாகாது.
இன்றைய இளைய தலைமுறையினர்க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டியது தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணா அவர்களையும் மட்டும்தான். ஓங்குக அவர்தம் புகழ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக