செவ்வாய், 8 செப்டம்பர், 2020

அரியர் ரத்து வழக்கு: ஏஐசிடிஇ பதிலளிக்க உத்தரவு!

minnambalam.com :தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளித்த விவகாரத்தில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ ) மற்றும் பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி) பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அரியர் மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவும், அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் கூறி வருகின்றனர். இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் அரியர் ரத்து தொடர்பாக அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், கலை மற்றும் அறிவியல், எம்.சி.ஏ, பொறியியல் படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.    இதனால் கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகத்தின் மதிப்பு கெடும். அதோடு அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்பது படித்து தேர்ச்சி அடைந்தவர்களைச் சோர்வடையச் செய்யும். 20 படங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்ச்சி அளிப்பதன் மூலம் கல்வியின் தரம் குறையும்.

தேர்வின் மூலம்தான் மாணவர்களின் போட்டித் திறன், செயல்திறன், நம்பகத் தன்மை ஆகியவை பிரதிபலிக்கும். எனவே பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் தலையிட்டு அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் என்று அறிவித்திருப்பது தவறானது. எனவே அரசின் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று (செப்டம்பர் 8) விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையிலேயே தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு யுஜிசி விதிகளுக்கு முரணாகச் செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கு குறித்து 2 வாரத்தில் பதிலளிக்கத் தமிழக அரசு, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: