சீனுவாச வர்மா மற்றும் ராஜகோபாலன், சிரோமணி முதலிய ஆய்வாளர்கள் முதலில்
இம்முயற்சியில் ஈடுபட்டனர். கள ஆய்வுகள் மூலம் இதுவரை தெரியாத பல உண்மைகள்
அதன் மூலம் தெரிய வந்தது. அவர்கள் பற்றிய கற்பனைக் கதைகளே, இதுவரை அவர்களது
யதார்த்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றும்படி வெளியிடப்பட்டு வந்தன. நேரடி
ஆய்வுகளை, மானிடவியல் அறிவினால் ஆராய்ந்து, நரிக்குறவர் வாழ்க்கையில் சில
அம்சங்களின் உண்மையான செய்திகள் விஞ்ஞான முடிவுகளாக இவர்கள் கண்டு உணர்ந்து
கொண்டனர்.
சமூகத்தின் மிகவும் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் இப்படிப்பட்ட ஓர் இனத்தின் மொழிக்கு அகராதி தயாரிப்பது என அப்போது அவர்கள் முடிவு செய்தார்கள்.
''அழிந்துவரும் ஒரு மொழியைப் பாதுகாப்பது சமூகத் தேவை மட்டுமல்ல; நமது கடமையும் கூட!'' என்கிறார் இதில் முதன்மைப் பங்கு வகித்த சீனுவாச வர்மா. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறைப் பேராசிரியராக இருந்து பணி நிறைவு பெற்றவர்.
நரிக்குறவர்களின் மொழியைப் பற்றி எந்தவிதமான குறிப்புகளும் இல்லாத 60-களின் காலகட்டத்தில் அந்த மொழியைப் பயின்று, அதை ஆவணப் படுத்தி முனைவர் பட்டம் பெற்ற இவர்தான், தற்போது நரிக்குறவர்களின் மொழிக்கு அகராதியை உருவாக்கியிருக்கிறார்.
''எம்.ஏ. மொழியியல் படித்து முடித்தவுடன் முனைவர் பட்டம் பெற வேண்டி, எழுத்துருக்கள் இன்றி வாய்மொழியாக மட்டும் இருக்கும் ஒரு மொழியைத் தேர்வு செய்ய எண்ணினேன். நான் தங்கி இருந்த பகுதியில் நரிக்குறவர்கள் அதிகமாக இருந்தார்கள்.அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி எனக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருந்தது. அந்த மொழியையே தேர்வு செய்யலாமே என்று முடிவுசெய்தேன்.
"முதலில் அவர்களைப் பற்றி நூலகத்தில் தேடிப்பார்த்தேன். நரிக்குறவர்கள் குறித்து ஒரு தமிழ்ப் புத்தகமும் இல்லை.
" 'சரி, புத்தகம் இருந்தால்தான் முடியுமா? அனுபவத்தைவிடச் சிறந்த புத்தகம் எதுவும் இல்லை’ என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு நரிக்குறவர்களிடம் போய் நின்றேன். 'என்னது... எங்க மொழியை நீங்க கத்துக்கணுமா..? அய்யோ அதெல்லாம் கஷ்டங்க சாமீயோவ்’ என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்கள்.
"இருந்தாலும் நான் அவர்களை விட்டு விடவில்லை. அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் தொடர்ந்து சென்றேன். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் என்னிடமிருந்த டேப் ரெக்கார்டரில் பதிவுசெய்து மீண்டும் மீண்டும் பலமுறை அதை ஒலிக்கவிட்டு, மனதுக்குள் பதித்துக்கொண்டேன்.
"1960-களிலேயே விருத்தாச்சலம் கம்மாபுரம் என்கிற ஊரில் நரிக்குறவர்களுக்கு எனத் தனியாக ஒரு காலனியை அமைத்திருந்தார் பெருந்தலைவர் காமராஜர். அங்கே நரிக்குறவர் குழந்தைகளுக்காக இயங்கிய பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இலியாஸ் என்பவர், நரிக் குறவர்களின் மொழியைக் கற்பதற்கு உதவி செய்தார்.
"ஒலிக்குறிப்புகள், எழுத்துருக்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஒரு மொழியின் வேர் மொழி எது என்பதை நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். நரிக்குறவர்கள் பேசும் 'வாக்ரி’ எனும் மொழியின் வேர் எது என்று தீவிரமாக ஆராய்ந்தபோது, அது குஜராத்தி மொழி என்று கண்டுகொண்டேன். குஜராத்தி மொழியில் 'வாக்ரி’ என்ற சொல் குருவி பிடிப்பவர்களைக் குறிக்கிறது. 'போலி’ என்றால் மொழி. ஆகவே 'வாக்ரிபோலி’. இவர்கள் ஆதிதிராவிடர்/பழங்குடி எனும் பட்டியல் இனத்தில் சேர்க்கப்படாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவில் வைக்கப்பட்டு இருப்பதால் இவர்களுக்குக் கல்வி முதற்கொண்டு கிடைக்க வேண்டிய பல உரிமைகள் கிடைக்காமல் போகின்றன.
"இந்தோ ஆரிய மொழியான வாக்ரி,இந்த நாடோடி சமூகத்தினர் வழியாகத்தான் பல ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது. வாக்ரி மொழி பேசும் மக்கள், தற்போது குறைந்தளவு மட்டுமே உள்ளனர். முன்பு போல் நகர்ந்து கொண்டே போவது போல இல்லாமல், நரிக்குறவர் சமூகத்தினர் தற்போது ஓரிடத்தில் வசிக்கத் துவங்கி உள்ளனர்.
"அவை அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றியது மட்டுமின்றி, அவர்களின் வாக்ரி மொழியையும் பாதித்துள்ளது. மற்ற நாடோடிகளின் மொழிகள் சமூக மாற்றத்தில் அழிந்து விட்டன. அதுபோல் ஏற்படாமல், வாக்ரி மொழியை பாதுகாப்பது அவசியம் என்று எண்ணினேன். தென்தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தைக் கொண்ட மேலும் சில நாடோடிகளின் மொழிகள் பற்றி அதிக அளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை,'' என்றார் சீனுவாச வர்மா.
சீனிவாசன் வர்மாவின், நரிக்குறவர் சமூகம் பற்றிய ஆய்வு ஏற்கனவே ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
நரிக்குறவர் இனத்தில் உள்ள குஜராத்தி, மேவார், டாபி, சேலியோ எனும் நான்கு பிரிவில் பேசும் ஒரே மொழி, வாக்ரிதான். இந்த மொழியை குஜராத்தி மொழியின் எழுத்துருக்களுடனோ அல்லது இந்தி எழுத்துருக்களுடனோ கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அது நடைமுறைச் சாத்தியம் இல்லை.
சென்னையில் உள்ள தேசிய நாட்டார் வழக்காற்றியல் மையத்துடன் இணைந்து வாக்ரி மொழிக்கான அகராதி உருவாக்கப்பட்டது.நரிக்குறவ இனத்தில் இருந்து படித்த சிலரை அணுகி விவாதம் நடத்தியபோது, இந்த மொழிக்கு ஒரு பன்மொழி இலக்கணம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனாலேயே இந்த அகராதி உருவானது. இந்த அகராதியில், வாக்ரிபோலியின் சொல் முதன்மைச் சொல்லாக ஆங்கில வரிவடிவத்தில் சில குறியீடுகளுடன் கொடுக்கப்பட்டு, அந்தச் சொல்லின் இலக்கணக் குறிப்பும் தரப்பட்டு உள்ளது. அதே சொல் தமிழ் ஒலிபெயர்ப்பு எழுத்து மூலமும், அந்தச்சொல்லுக்கான அர்த்தம் தமிழ் மொழியிலும் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்தச் சொல்லுக்கு இந்தி எழுத்தில் வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு இணையான குஜராத்தி மொழி வரிவடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக அந்தச் சொல்லுக்கு ஆங்கில மொழி அர்த்தமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அகராதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகள் முதல்கட்டமாக இடம்பெற்றுள்ளது.
தாய்மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போவதுதான் ஒரு மொழி இறப்பதற்குக் காரணம். ஒரு மொழி அழிந்து போகவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், முதலில் அந்த மொழியை ஆவணப்படுத்த வேண்டும்.
"எங்களைப் போன்ற ஆய்வாளர்கள் வாக்ரி மொழியை ஆவணப்படுத்தி விட்டோம். இனி இதைக் கற்றுக் கொடுக்கும் பணி நமது அரசின் கைகளில்தான் உள்ளது" என்கிறார் சீனுவாச வர்மா!இவர் 1962 முதல் 1967 வரை ஐந்து ஆண்டுகள் இந்த மொழியை கற்றிருக்கிறார்.
நரிக்குறவர்கள் சாதாரணமாக பத்துப் பதினைந்து தலைமுறை தாத்தாக்களின் பெயர்களை வரிசை மாறாமல் சொல்லக்கூடிய நினைவாற்றல் மிக்கவர்கள்.
நக்கலவால்டோ என ஆந்திராவிலும்,
ஹிக்கி பிக்கி என கர்நாடகாவிலும்
அழைக்கப்படும் இவர்கள்அங்கெல்லாம் பழங்குடியின பட்டியலில் தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள்
இந்த வாக்ரிபோலி திருக்குறள் சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ளது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக