ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

உணவகங்களில் ஏசி பயன்படுத்த அனுமதி!

உணவகங்களில் ஏசி பயன்படுத்த அனுமதி!

மின்னம்பலம் :உணவகங்களில் ஏசி பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு நேற்று (செப்டம்பர் 5) அனுமதி வழங்கியுள்ளது.   கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஹோட்டல்கள், ஜவுளி கடைகள் என அனைத்து விதமான கடைகளிலும் ஏசி பயன்படுத்தத் தமிழக அரசு தடை விதித்தது. காற்றோட்டமான இடத்தில் சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்களை அமர வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.   உணவகங்களைப் பொறுத்தவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் ஏசி வசதி இல்லாமல் இயங்க வேண்டும். 6 மணிக்கு மேல் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது.இந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தளர்வுகளை அறிவித்து வரும் தமிழக அரசு, ரெஸ்டாரன்ட், ஹோட்டல்களில் ஏசி பயன்படுத்த அனுமதி வழங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு விதிகளின்படி ஏசி வசதியைப் பயன்படுத்த வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி வசதியுடன் உணவகங்கள் இயங்கலாம். இரவு 9 மணி வரை பார்சல்களை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஹோட்டல்களுக்கு ஏசி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக வணிக வளாகங்கள், மால்களில் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: