minnampalam :வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2011-12 ஆம் ஆண்டில், இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட லிப்ரா மொபைல்ஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பிரத்தியேக ரிங்டோன் இசை அமைத்துக் கொடுத்ததற்காக ரூ.3.47 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். இதனைத் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு நேரடியாகச் செலுத்தும் படி ரகுமான் கூறியிருக்கிறார். அதாவது ரூ.3.47 கோடி ஊதியம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் அதற்கு வரி செலுத்தவில்லை. அறக்கட்டளை மூலம் வருமானம் பெற்று வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது.
வருமான வரித்துறை மூத்த ஆலோசகர் இதுதொடர்பாக கூறுகையில், ஏ.ஆர்.ரகுமானால் பெறப்படும் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட வேண்டியது அவசியம். ஏ.ஆர்.ரகுமான் வருமானத்தைப் பெற்ற பிறகு, அதை அறக்கட்டளைக்கு மாற்றலாம். ஆனால், அறக்கட்டளையின் வருமானத்துக்கு, வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படுவதால், அதை அறக்கட்டளைக்குத் திருப்பிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்நடவடிக்கைகள் வருமான வரி தீர்ப்பாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் இன்று (செப்டம்பர் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-கவிபிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக