சனி, 11 ஏப்ரல், 2020

தமிழக வண்ணார் - வரலாறும் வழக்காறுகளும் நூல் விமர்சனம் - முனைவர்.க.சுபாஷிணி

Subashini Thf : தமிழக வண்ணார் - வரலாறும் வழக்காறுகளும்
நூல் விமர்சனம் - முனைவர்.க.சுபாஷிணி
(பகுதி 1)
மாதப் பூப்பின் போது வடியும் குருதியைத் தடுத்து நிறுத்த பழைய துணிகளைப் பயன்படுத்தும் வழக்கம் முன்பிருந்தது. துணிகளைத் துவைத்து மீண்டும் பயன்படுத்தி வந்தனர். பூப்புக் குருதி கரையும் துர்நாற்றமும் கொண்ட துணிகளையும் அப்போது உடுத்தியிருந்த சேலைகளையும் பொட்டலமாகக் கட்டி வீட்டின் கொல்லை பகுதியில் வைத்து விடுவர். ஊர்ச்சோறு எடுக்க வரும்போது இச்செய்தி வண்ணாரப் பெண்ணிடம் தெரிவிக்கப்படும். அவர் மறுநாள் வந்து அவற்றை எடுத்துச் செல்வார். வீட்டுக்காரப் பெண் குச்சியால் எடுக்கும் துணிகளை அவர் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை. `மூட்டு துணி` என்று தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் `தீட்டுத்துணி`, `தீண்டல் துணி` என்று தென் மாவட்டங்களிலும் அழைக்கப்பட்ட துணியை வெளுத்துத்தரும் பணி என்பது வண்ணார் மீது திணிக்கப்பட்ட கொடுமையான பணியாகும். சானிடரி நாப்கின் அறிமுகம் இக்கொடுமையில் இருந்து மக்களை விடுவித்துள்ளது என்றாலும், சில கிராமங்களில் இக்கொடுமை தொடரத்தான் செய்கிறது.
- திரு.ஆ.சிவசுப்பிரமணியன், (பக் 47)

நாடோடிகளாக, வேட்டையாடும் சமூகமாக இருந்து, பின்னர் படிப்படியாகக் குழுக்களாக உருவாகி, விவசாயம் கற்று ஓரிடத்தில் நிலைபெற்று, கிராமம், நகரம், நாடு என்ற நீண்ட வளர்ச்சியைக் கடந்து வந்துள்ளது இந்த மனிதகுலம். காலத்துக்குக் காலம் வாழ்க்கை அனுபவங்களைக் கற்று தன் அறியாமையிலிருந்தும், தவறுகளிலிருந்தும், தன்னைப் படிப்படியாக உயர்த்திக் கொண்டே வருகிறது இந்த மனிதகுலம். இந்த படிப்படியான கற்றலே தொழில்நுட்ப வளர்ச்சி என்றும் அறிவியல் வளர்ச்சி என்றும் சமூக நீதி என்றும் சமூக சட்ட திட்டங்கள் என்றும் தனி மனித உரிமை என்றும் பொது மனித வாழ்க்கைக்கான நெறிகளாக நமக்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. இத்தனை மாற்றங்கள் வந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும் கூட மனிதக்குலத்துக்குப் பொருந்தாத சாதிப்பகுபாடு என்ற ஒரு விஷயத்திலிருந்து தமிழினம் இன்னும் விடுபடாமல் இருப்பது தமிழினத்தின் அவலம்தான். தனி மனித உரிமையை ஏற்றுக்கொண்டு தொழில்ரீதியான மனித பாகுபாட்டைக் கடந்து ஏனைய உலக இனங்கள் சமூக சிந்தனைத் தளத்தில் சுதந்திரம் அடைந்து விட்டன, நாகரீகம் பெற்றுவிட்டன. ஆனால் உலகின் ஏனைய இனங்களிலிருந்து மாறுபட்டு, மனிதருக்குள் தொழில்ரீதியாக சாதியை வலியுறுத்தி உயர்வு தாழ்வைக் கட்டமைக்கும் பண்பாட்டைப் பிடித்துக்கொண்டு இருப்பதாலேயே இந்தியச் சமூகம் உலக அளவில் பல படிநிலைகளில் சரிந்து கீழே இருக்கின்றது, மனித உரிமை தளத்தில்.
பண்பாட்டுத் தளம், மக்கள் வரலாறு, மானுடவியல், சமூகவியல், வரலாறு என்று பன்முகத் தன்மையில் தனது ஆய்வினைத் தொடர்ந்து நிகழ்த்தி கொண்டும், அந்த ஆய்வுகளின் வழி தான் அறிந்த செய்திகளை நூலாக்கித் தருவதிலும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டு வருபவர் திரு ஆ.சிவசுப்பிரமணியன். இவரது நூல்கள் தமிழகத்தின் பண்பாட்டுத் தளத்தினை அறிந்துகொள்ள ஆய்வாளர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் உதவுகின்றன. அந்த வகையில் திரு.ஆ.சிவசுப்பிரமணியன் எழுதி, 2014 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்த நூல் `தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்`.
முதலில் நூலின் அமைப்பைப் பற்றிப் பார்ப்போம். நூலில் ஒன்பு கட்டுரைகள் வண்ணார் என்ற சமூகத்தினரின் பல்வேறு விஷயங்களைப் பேசுகின்றன. இதற்குத் துணையாகச் சில பின்னிணைப்புகள் நூலில் இடம்பெறுகின்றன. தமிழ்ச்சூழலில் சாதிக் கட்டமைப்பு வரையறையில் வண்ணார் சமூகத்தினர் எந்த வகையில் அடங்குகின்றனர் என்பதைப்பற்றி இந்த முதல் ஒன்பது கட்டுரைகளும் விளக்குகின்றன. தமிழ்ச்சூழலில் உயர் சாதி மற்றும் ஆதிக்க சாதி என்ற இரண்டு பெரும் பிரிவுகளுக்குள் வண்ணார் சமூகத்தினர் எந்த வகையில் இடம்பெறுகின்றனர் என்பதையும், ஒடுக்கப்பட்ட அல்லது தலித் என்று அடையாளப்படுத்தப்படும் சமூகத்தினர் சூழலில் வண்ணார் சமூகத்தினர் எவ்வாறு இடம்பெறுகின்றனர் என்பதையும் துல்லியமாக எளிய முறையில், அதே வேளை சான்றாதாரங்களுடன் இந்தக் கட்டுரைகள் வாசிப்போருக்குப் புரிதலை ஏற்படுத்துகின்றன.
சங்க இலக்கியங்களில் வண்ணார் தொழில் மற்றும் அத்தொழிலுக்குத் தொடர்புடைய தொழில்நுட்பமாகிய உவர் மண் சேகரித்தல், துணி வெளுத்தல் போன்ற பல்வேறு தொழில்முறை செய்திகள் எவ்வகையில் குறிப்பிடப்படுகின்றன என்பதை ஆசிரியர் இலக்கியச் சான்றுகளுடன் விவரிக்கின்றார். சங்ககாலத்தில் இருந்த தொழில்முறை சிறப்பு அதாவது skill-based specialization என்ற நிலையிலிருந்து மாறி படிப்படியாக வண்ணார் சமூகத்தவர் `அடிமைகள்' என்ற கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட அவலச்செய்தியை இந்த கட்டுரைகள் நமக்கு விளக்குகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் கரிசூழ்ந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று கோவிலுக்குக் கொடையாக வண்ணார்களை அடிமைகளாக வழங்கிய செய்திகளையும் பதிகின்றது.
வண்ணார்களில் பெரும்பாலானோர் சமூகத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும் இச்சமூகத்தினர் சிலர் நிலவுடைமையாளர்களாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிடக்கூடிய கல்வெட்டுகளும் உள்ளன என்பதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளின் வழி அறிய முடிகின்றது. இச்செய்திகள் வண்ணார்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும், கோவில் திருப்பணியில் பங்கு கொண்டார்கள் என்ற செய்தியையும் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு கல்வெட்டாக திருத்துறைப்பூண்டி வட்டம், வடகாடு கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கி.பி.12 அல்லது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இக்கோயிலுக்குப் பள்ளர், பறையர், வண்ணார் ஆகிய சமூகத்தவர்கள் நிலக்கொடை வழங்கியுள்ளார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.
இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்ணார் சமூகத்தவர்களில் ஒருசிலர் பொருளாதார மேம்பாட்டுடன் இருந்தாலும்கூட பொதுவாகவே, வண்ணார் சமூகத்தவர் தமிழ்ச்சூழலில் தாழ்த்தப்பட்டு, உயர் குடிகளுக்கு ஒருவகையான அடிமைகளாகவே பார்க்கப்பட்டனர் என்பதை நூல் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
நமது பண்பாட்டுச் சூழலில் சில செய்திகள் அதன் ஆழமான உட்பொருளை உணர்ந்து கொள்ளும் போது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
`ஊர் சோறு எடுத்தல்`. ஒரு நாள் முழுதும் ஆற்றங்கரையில் அல்லது படித்துறையில் துணிகளைத் துவைத்து, வெள்ளாவி வைத்து, தூய்மைப்படுத்தி, காயவைத்து ஊர் மக்களுக்கு அவர்கள் உடை அணிந்து வாழ உதவுகின்ற வண்ணார்களுக்கு ஊர் மக்களே வழங்குகின்ற உணவு `ஊர் சோறு எடுத்தல்` என்று குறிப்பிடப்படுகின்றது. வெளிப்படையாகப் பார்க்கும்போது இது ஒரு மனிதாபிமான செயல் தானே என்று நினைக்க வைக்கும் இச்செயலுக்குப் பின் இருக்கும் மிகப்பெரிய சமூக அநீதி கொடியது, அசிங்கமானது. அதனை மிகத் துல்லியமாக நூலாசிரியர் நூலில் உள்ள கட்டுரைகளின் வழி விளக்குகின்றார்.
நாள்தோறும் மாலையில் ஊரில் வீடு வீடாகச் சென்று சோறும் குழம்பும் இவர்கள் பெற்றுக் கொள்வார்கள். அன்றைக்கு இரவு சாப்பிட்டது போக மிஞ்சிய உணவை நீர் ஊற்றி வைத்து தங்களின் வளர்ப்புப் பிராணிகளான கழுதை, நாய், ஆடு போன்றவற்றுக்கு இந்த உணவைக் கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்படி ஒரு ஊர்ச்சோறு எடுக்கச் செல்லும்போது வீட்டுக்கார மனிதர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கையைக் கழுவாமல் எச்சில் கையாலேயே சோறு எடுத்துப் போடுவதுண்டு. சிலர் குழந்தைகள் அல்லது வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு மீதம் வைத்த உணவையும் கலந்து போட்டு விடுவர். பலவேளைகளில் திட்டிக்கொண்டே உணவு வழங்குவர். விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் உள்ள கொங்கணம் என்ற கிராமத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் ஊர் சோறு வாங்க சென்றபோது குழம்பு கேட்டதற்காக வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றை சோற்றில் துப்பி, `இந்தக் குழம்பை வைத்துக்கொள்` என்று அனுப்பிய களப்பணியில் சேகரித்த அவலச் செய்தியையும் நூலில் காணமுடிகின்றது. இத்தகைய அவமானங்கள் நிகழ்ந்தாலும், பலவேளைகளில் `ஊர் சோறு` எடுப்பதை வண்ணார் சமூகத்தவரால் தவிர்க்க முடியாத சூழலும் நிகழ்ந்திருக்கின்றது. ஊர் சோறு எடுக்கும் வரை அவர்கள் அடிமைகள் என்பதை உறுதிப்படுத்தும் எழுதப்படாத பொதுப்போக்கு இயங்கிக் கொண்டிருப்பதை ஆதிக்க சாதியினர் தொடர்ந்து விரும்புவதால், ஊர் சோறு எடுக்காமல் போகும்போது பல்வேறு வகை பிரச்சினைகளுக்கும் வண்ணார் சமூகத்தவர்கள் ஆளாகிறார்கள் என்ற செய்தியையும் நூல் சொல்கிறது.
துரும்பர் என்ற வண்ணார் சாதியில் ஒரு தனிப் பிரிவினைப் பற்றியும் நூல் பேசுகிறது. புரத வண்ணார், புறத்து வண்ணார், பறஏகாலி, பறவண்ணார் எனப் பல்வேறு பெயர்களால் சுட்டப்படுபவர்கள் இவர்கள். இவர்கள் தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட, அதாவது இன்று தலித் என்று அடையாளப்படுத்தப்படும் சமூகத்தினருக்குத் துணி வெளுக்கும் சேவை செய்யக் கூடிய ஊழியம் செய்பவராக அறியப்படுகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்டோருக்கு வண்ணார் சேவை செய்வதால், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கீழ் மேலும் தாழ்த்தப்பட்டவர்களாக ஆதிக்க சாதியினரால் அடையாளப் படுத்தப்படுவதால், இவர்கள் இரட்டை தீட்டு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
தீண்டத்தகாதோர் என்பவர்கள் தொட்டால் தீட்டு என்பது உயர் சாதி மற்றும் ஆதிக்க சாதி சமூகம் உருவாக்கி வைத்துள்ள ஒரு அமைப்பு. இதன்படி தீண்டத்தகாதோர் என்று இவர்களால் ஒதுக்கப்பட்ட சமூகத்தவர்களுக்கு இவர்கள் அழுக்கு துணிகளைச் சுத்தம் செய்வதால், மேலும் ஒரு தீட்டு இவர்களுக்குக் கூடுவதாகவும் இதன் அடிப்படையில் இந்த பறவண்ணார் சமூகத்தவர் `பார்த்தாலே தீட்டு` என்ற வகையில் ஒதுக்கப்பட்டு, கொடுமையான வகையில் சமூக அவலத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
உளவியல் ரீதியாக தங்கள் சுயமரியாதையையும், தன்மானத்தையும் சிதைத்துத் தாக்கும் வகையில் பல்வேறு சமூக தாக்குதல்களுக்கும் உள்ளாகும் வண்ணார் சமூகத்தவர்களுக்கு உள்ள மேலும் ஒரு பிரச்சனையாக அமைவது அவர்களுக்குத் தேவைப்படுகின்ற சாதிச்சான்றிதழ். இன்றைய கால சூழலிலும்கூட சாதி சான்றிதழைப் பெறுவதில் வண்ணார் சமூகத்தவர் மிகுந்த பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
சாதிச் சான்றிதழைப் பெற்றால்தான் இவர்களின் குழந்தைகள் உயர்கல்விக்குச் செல்வதற்கு அல்லது சமூகத்தின் மிக அடித்தளத்தில் வாழ்கின்ற இவர்களின் வாழ்க்கையில் சிற்சில மேம்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் சலுகைகளைப் பெறுவதற்கு உதவியாக அமையும். ஆனால் இதற்கு மாற்றாகச் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டிய அதிகாரிகள் பல்வேறு நிபந்தனைகளை வண்ணார் சமூக மக்களிடம் வைப்பதன் காரணத்தினால் அவர்களின் துன்பம் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
உதாரணமாக, புதிரை வண்ணாரிடம் கழுதை இருக்கிறதா? துணி வெளுப்பதற்குப் பாரம்பரிய வெள்ளாவி அடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறதா? அந்த ஊரில் அவர் தான் துணிகளை வெளுத்தார் என்பதற்குச் சாட்சியாக யார் இருப்பார்கள்..? என்று சாட்சிகளாகக் கழுதையையும் வெள்ளாவி அடுப்பையும் அதிகாரிகள் கேட்பது தொடர்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மேலும் ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்கின்ற இவர்களுக்குத் தேடிச்சென்று உதவுவதுதான் அரசு அதிகாரிகளின் செயல்பாடாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை மேலும் மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கி அவர்களின் குழந்தைகள் வாழ்வில் மேம்பட உள்ள எல்லா கதவுகளையும் அடைக்கும் செயல்பாடுகள் சமூகத்திற்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை அரசு இயந்திரமும் உணர்ந்து செயல்பட வேண்டியதும் அவசியமாகின்றது.
தொடரும்
-சுபா
நூலாசிரியர் - ஆ.சிவசுப்பிரமணியன்
பதிப்பு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ 135/-

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இவ்வளவு கிழ் தரமாக நடத்தப்படும் இந்த சாதி மக்களுக்கு நீதி கிடைக்காதா