புதன், 8 ஏப்ரல், 2020

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை 144 தடை!

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை 144 தடை!மின்னம்பலம் : இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 571 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை போலீசார் மூடி சீல் வைத்து வருகின்றனர். மாவட்டங்களின் நிலை குறித்து ஆட்சியாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருகிறார். பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களிடம் அந்தந்த மாநிலங்களின் நிலை குறித்துக் கேட்டறிந்து வருகிறார்.அதுபோன்று அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சகமும், தங்களது மாநிலங்களின் நிலையைத் தெரிவித்து வருகிறது.

இதனிடையே பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தன. 'தற்போது இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குப் போகாமல் தடுக்கும் வகையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் 144 தடை நீட்டிக்கலாம்' என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்று கொரோனா அதிகம் பாதித்துள்ள 274 மாவட்டங்களில் மேலும் 28 நாட்களுக்குத் தடை காலத்தை நீட்டிக்கச் சுகாதாரத் துறை அமைச்சகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஏப்ரல் 4ஆம் தேதி, தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றில், ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 24/03/2020 முதல் 30/04/2020 வரையில் 144 உத்தரவை அமல்படுத்துவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை இதை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஏப்ரல் 14ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: