சனி, 11 ஏப்ரல், 2020

கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி !


veerakesari :கொரோனாவின் கோரப்பிடியில் முழு உலகமே சிக்கித்தவித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடுதிரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டாயிகு, கொரோனா தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பிரபல வைத்தியசாலையொன்றில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 51 பேர் குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்நிலையில், வீட்டிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது மீண்டும் கொரோனா இருப்பது தெரிய வந்தது .
இதையடுத்து அவர்கள் மறுபடியும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி தென்கொரிய விஞ்ஞானிகள் கூறும்போது, “இது வியக்க வைக்கும் விஷயம். மனித உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் கொரோனா வைரஸ் பிரிக்க முடியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டுள்ளது.

குணம் அடைந்தவர்களை கொரோனா மீண்டும் தீவிரமாக தாக்க வாய்ப்பு உள்ளது” என்கின்றனர். இங்கிலாந்தின் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் போல் ஹெண்ட் கூறுகையில், “இதில் பரிசோதனை முறைகள் தவறாக கையாளப்பட்டு இருக்க வேண்டும். அதனால் தான் இது நடந்துள்ளது. என்னை பொறுத்தவரை குணம் அடைந்தவரை மறுமுறை கொரோனா தாக்க வாய்ப்பில்லை” என்றார். கொரோனா தொற்றுக்குள்ளாகி குணம் பெற்ற பின்னரும் மறுபடியும் தொற்று உடலுக்குள் இருக்குமா என்ற சந்தேகம் எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: