புதன், 14 மார்ச், 2018

ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் ! அறிவியல் உலகின் பொக்கிஷம்!

ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் உலகின் பொக்கிஷம்!மின்னம்பலம் :அறிவியல் உலகின் ஜொலிக்கும் நட்சத்திரமாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 76) இன்று காலை மரணமடைந்தார்.
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜில் உள்ள இல்லத்தில் இன்று காலை அவரது மரணத்தை உறுதி செய்த அவரது பிள்ளைகள் லூசி, ராபர்ட் மற்றும் டிம் வருத்தத்துடன் இந்தச் செய்தியைத் தெரிவித்தனர். மூளையும் இதயமும் நுரையீரலும் கை விரல்களும் தவிர்த்துப் பிற உறுப்புகள் செயலிழந்து எப்போதும் கணினியோடு இணைக்கப்பட்ட எந்திரக் குரலுடன் சக்கர நாற்காலியிலேயே சுற்றிவந்தவர், விவாதங்கள் தன்னைச் சுற்றி வரவைத்தவர். பேரண்டம் பற்றிய உண்மைகளைப் பேசுவோருக்கு நம்பிக்கையளித்தவர். சாதனைகளுக்கு உடற்குறைபாடுகள் தடையல்ல என்று தன்னம்பிக்கை தந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

யார் இந்த ஸ்டீபன் ஹாக்கிங்?
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில் 1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். தனது 11ஆம் வயதில் செயின்ட் ஆல்பன்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு 1952ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவருக்கு கணிதத் துறையில் ஆர்வம் இருந்துள்ளது. அப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறை இல்லாததால் வேறு வழி இல்லாமல் இயற்பியலைத் தேர்வு செய்கிறார். மூன்றாண்டுகள் கழித்து முதல்தர மாணவனாகத் தேர்ச்சி பெறுகிறார். அதற்குப் பின்னணியில் இருக்கும் ஒரு சுவாரசியமான விஷயத்தை 2013ஆம் ஆண்டு வெளியான இவரது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.

இறுதித் தேர்வில் முதல் வகுப்பிற்கும் இரண்டாம் வகுப்பிற்குமான விளிம்பு நிலையில் மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தேர்வுக்கான நேர்முகத்தில் தனக்கு முதல் வகுப்பு அளித்தால் தான் கேம்பிரிட்ஜ் சென்று விடுவதாகவும், இரண்டாம் வகுப்பெனில் ஆக்ஸ்போர்டிலேயே தொடர்வேன் எனவும் மிரட்டினார். இவரது தொல்லையே வேண்டாமென்று முடிவெடுத்து முதல் வகுப்பு அளித்தனர். மிரட்டும் அளவிற்குக் கடினமான மாணவனாகத் திகழ்ந்தார்.
இதற்கிடையில் 1963ஆம் ஆண்டு மோட்டார் நியூரான் என்ற நோயால் பாதிப்புக்குள்ளாகி சக்கர நாற்காலியில் முடங்கியது அவரது வாழ்க்கை. அப்போது அவருக்கு வயது 21 மட்டுமே. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டுமே இவர் உயிர் வாழ்வார் என்று டாக்டர்களும் கைவிரித்துவிட்டனர். பெரும்பாலான மனிதர்கள் இத்தகைய சூழலில் கவலையிலேயே முடங்கிவிடுவர். ஆனால் ஹாக்கிங் அதனைச் செய்யவில்லை. ”மரணம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது நிச்சயம் ஒரு நாள் வரும். ஆனால் அது வருமே என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கப் போவதில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது” என்று கூறி தனது பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்யத் தொடங்கினார் ஹாக்கிங்.

அவரைத் தாக்கிய நோய் மிக மெதுவாக வளரக்கூடியது. ஆகவேதான் அந்நோய் தாக்கிய பின்பும் அவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ முடிந்தது. அந்நோய் அவரைத் தாக்கவில்லை என்றால் அவர் இவ்வளவு புகழ் பெற்றிருப்பாரா என்பது சந்தேகமே. ஏனெனில் அவரது தசைகள் வலுவிழக்கத் தொடங்கியதும் முதலில் ஊன்றுகோலைப் பயன்படுத்திய ஹாக்கிங், பின்னர் இருசக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி, அதை ஈடுசெய்து வந்தார். 1985ஆம் ஆண்டு அவரது உடல்நலம் குன்றியபோது மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையினால் அவர் பேசும் திறனை இழந்தார். அப்போது 'ஸ்பீச் சின்தஸைசர்' என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு, கன்னத் தசைகளின் அசைவுகள்மூலம், கம்ப்யூட்டர் குரலில் உலகம் முழுவதும் இவர் ஆற்றிய உரைகள் லட்சக்கணக்கான மக்களை அவர்பால் ஈர்த்தன. எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது.
அண்டவெளி எவ்வாறு தொடர்ந்து விரிவடைகிறது என்பதை ஹாக்கிங்தான் உலகிற்கு எடுத்துரைத்தார். இதிலிருந்துதான் விண்மீன்கள் எப்படி உருவாகின என்பது முதல், உயிரினத்தின் தோற்றம் வரை அறிவியல் அறிஞர்களின் புரிதலுக்கான விதை விதைக்கப்பட்டது. "அறிவியல் வரலாற்றில் இதுதான் ஆகச்சிறந்த கருத்தாக்கம் என மாக்ஸ் டென்மார்க் என்னும் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் கூறுகிறார்.
ஹாக்கிங் 1988ஆம் ஆண்டு எழுதிய `A Brief History Of Time' என்ற புத்தகம்தான் இவரை உலக அளவில் ஒரு தாரகையாக உயர்த்தியது. தொடர்ந்து 237 வாரங்கள் `Sunday Times' பத்திரிகையின் அதிகம் விற்பனையான புத்தகங்கள் என்ற பட்டியலில் இடம்பிடித்தது இப்புத்தகம். இதனால் கின்னஸ் சாதனையிலும் இடம் பிடித்தது. இப்புத்தகம் 1 கோடி பிரதிகள் விற்பனையாகி தமிழ் உட்பட 40 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. உலகில் அதிகம் படிக்கப்படாத புத்தகம் இதுதான் என்று நக்கல் அடிப்போரும் உண்டு.
இவரின் அறிவியல் ஆராய்ச்சிகளே இவரது அடையாளங்கள். டைம் மெஷின், பிளாக் ஹோல், ஏலியன், பிக்பேங் தியரி என அண்ட அறிவியலின் பல மைல்கல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தி யுனிவர்ஸ் இன் எ நட் ஷெல், மை ப்ரீஃப் ஹிஸ்டரி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ஹாலிவுட்டின் பல படங்கள், இவரின் கோட்பாடுகளைத் தழுவியே எடுக்கப்படுகின்றன.

இவரது சாதனைகளுக்குக் கிடைத்த விருதுகளும் பரிசுகளும் (ஆண்டு வாரியாக):
1966 - ஆடம்ஸ் பரிசு
1975 - எட்டிங்டன் பதக்கம்
1976 - ஹுக்ஸ் பதக்கம்
1976 - டேனி ஹென்னிமேன் கணித விருது
1978 - அல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது
2009 - ப்ரெசிடென்சியல் மெடல் பார் ஃப்ரீடம்
பல அறிஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களோடு இணைந்து செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் உருவாக்கப்படும் போர் தளவாடங்களை முற்றிலும் எதிர்த்தவர். அவர் தீவிர கடவுள் மறுப்பாளர். அண்டம் இயங்க கடவுள் தேவையில்லை என உறுதியாகக் கூறியவர். சமயம் கொடுக்கும் வசதிகளை நிராகரித்தவர். ”நான் இறப்பதற்கு பயப்படவில்லை. அதற்கு முன் நான் முடிக்க வேண்டிய பணிகள் ஏராளம். விரைவில் மரணம் என்று கூறிய நிலையிலேயே 49 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன்” என்று கூறியவர் ஹாக்கிங்.

எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவைதான், அதை நம்மால் ஒன்றும் மாற்ற முடியாது என்று சொல்லி முடங்கிக்கிடப்பவர்களுக்கு மத்தியில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை மீட்டெடுக்க ஏதேனும் ஓர் வழி இருந்தே தீரும் என்று வாய் வார்த்தைகளில் மட்டும் கூறாமல் தன் வாழ்க்கையையே மாற்றிச் சாதித்துக் காட்டியிருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானியான இவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், இவரது கண்டுபிடிப்புகள் என்றும் அழியாது.

கருத்துகள் இல்லை: