மின்னம்பலம் : தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூரில் மத்திய அரசின் உடான் திட்டத்தின்கீழ் விமான நிலையம் விரைவில் செயல்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள ஓசூர் அருகில் உள்ள ஓசூர் - தளி சாலை பெலகொண்டபள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான தனுஜா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த விமான நிலையத்தை உடான் திட்டத்தின் கீழ் நாட்டுடைமை ஆக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விமான நிலையத்தில், ஏர்பஸ் ஏ320 மற்றும் போயிங் 737 ஆகிய பெரிய விமானங்கள்கூட இயக்கும் வகையில் ஓடுதளம் உள்ளதால் அதை அப்படியே பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உள்நாட்டு விமான நிலையமாக இது அமையவுள்ளது என்று கூறப்படுகிறது.
ஓசூரில் புதிய விமான நிலையம் செயல்பட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில், ஓசூரின் அருகில் உள்ள பெங்களூருவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய நிர்வாகத்துக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் புதிய விமான நிலையம் அமைந்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதே அவர்களின் அதிருப்திக்குக் காரணம். இதனிடையே, மத்திய விமான போக்குவரத்துத்துறை மற்றும் பெங்களூரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அருகில் 150 கிலோமீட்டர் சுற்றளவில் புதிய விமான நிலையம் தொடங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளதால், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக