வெள்ளி, 4 டிசம்பர், 2015

மாற்று திறனாளி குழந்தைகளை படகில் சென்று பார்த்த இளையராஜா

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற, வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளை இசையமைப்பாளர் இளையராஜா படகில் சென்று சந்தித்து உணவு அளித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் தங்களுடைய வீடுகளை இழந்து சாலையோரங்களிலும்,  சமுதாய கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபலங்கள் சிலர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாகனங்கள் மற்றும் உணவு பொட்டலங்களும் வழங்கி வருகிறார். அதுமட்டுமல்ல அவர் சில இடங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும் வருகிறார்.
நடிகை குஷ்பு வெள்ளத்தில் நடந்து சென்று பட்டினப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கியுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பார்வையற்ற, வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கான லிட்டில் பிளவர் பள்ளியில் 250 குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கி பசியுடன் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், இந்த தகவல்  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தெரியவந்துள்ளது. இதை அறிந்த அவர் அந்த பள்ளிக்கு படகு மூலம் தனது உதவியாளர்களுடன் உணவுப்பொட்டலங்களுடன் சென்றார்.  பின்னர் அந்த பள்ளியில் இருந்த காது கேளாத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு உணவு வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோ கட்சியை மேம்பாலத்தில் இருந்தவர்கள் தனது கைப்பேசி மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்கில் வெளியிட்டுள்ளனர்.
webdunia.com

கருத்துகள் இல்லை: