திங்கள், 6 ஜூலை, 2015

வியாபம்' ஊழலில் தொடரும் மரணங்கள்: விசாரணைக்கு உதவிய 'டீன்' சாவு

புதுடில்லி:மத்திய பிரதேசத்தில், 'வியாபம்' ஊழல் தொடர்பான விசாரணைக்கு உதவிய டாக்டர், டில்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் மற்றும் குற்றவாளிகள் உள்ளிட்ட, 40 பேர், இதுவரை மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசுப் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்வதற்கு, 'வியாபம்' எனப்படும், தொழில்முறை தேர்வு வாரியம் செயல்படுகிறது.இந்த வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதில் உள்ளவர்கள், பெருமளவில் பணம் பெற்று, ஆட்களை தேர்வு செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.


இந்நிலையில், பிரபல, 'டிவி' நிறுவனத்தின் நிருபர் ஒருவர், இந்த ஊழல் குறித்த செய்திகளை சேகரித்து வந்தார். கடந்த, 3ம் தேதி, அவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், மீண்டும் ஒரு மர்ம மரணம் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழுவுக்கு, ம.பி., மாநிலம் ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவ கல்லுாரியில், டீனாக பணியாற்றும் அருண் சர்மா, உதவி செய்து வந்தார்.டில்லி சென்றிருந்த இவர் நேற்று, துவாரகா பகுதியில் உள்ள ஓர் ஓட்டல் அறையில், மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் உடல் அருகே, காலி மது பாட்டில்களும் மாத்திரைகளும் கிடந்தன.இந்த மர்ம மரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் உட்பட, 40 பேர், இதுவரை மர்மமான முறையில் இறந்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜபல்பூர் மருத்துவ கல்லுாரியில், அருண் சர்மாவுக்கு முன், டீனாக பணியாற்றியவரும், இதேபோல் மர்மமான முறையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிகள், சி.பி.ஐ., விசாரணை கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றன. '

வியாபம்' முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் இறப்பது கவலை அளிக்கிறது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிப்பதற்கு மாநில அரசு தடையாக இருக்காது. ஐகோர்ட் உத்தரவிட்டால், தாராளமாக சி.பி.ஐ., விசாரணைக்கு இந்த வழக்கை பரிந்துரைப்போம்.

சிவ்ராஜ் சிங் சவுகான்,  dinamalar.com

கருத்துகள் இல்லை: