ஞாயிறு, 5 ஜூலை, 2015

மின் வாரியம் அதானி' குழுமம் ரூ.4,500 கோடி ஒப்பந்தம் ! சூரிய மின்சாரம் 648 மெகாவாட் தயாரிக்க திட்டம்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில், 4,536 கோடி ரூபாய் முதலீட்டில், அதானி குழும நிறுவனங்கள், ஐந்து சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உள்ளன. இவற்றில் இருந்து, 648 மெகாவாட் மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், 2014 செப்டம்பர், 12ம் தேதி நிர்ணயித்துள்ளபடி, யூனிட் ஒன்றுக்கு, 7 ரூபாய் ஒரு பைசா என்ற விலையில், சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒப்பந்தம்: அந்த வகையில், 436 மெகாவாட் அளவிற்கு, சூரிய சக்தி மின்சாரம் வாங்க, 31 உற்பத்தியாளர்களுடன், தமிழ்நாடு மின் வாரியம், ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.இந்நிலையில், அதானி குழும நிறுவனம் சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில், 4,536 கோடி ரூபாய் மதிப்பில், சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் இருந்து, 648 மெகாவாட், சூரியசக்தி மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின் வாரியம், முடிவு செய்துள்ளது.அம்பானி போல அடானியும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கட்டும்...

இது தொடர்பான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து, இதுவரை மொத்தம், 1,084 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்கள் மூலம், தமிழகத்தில் சூரியசக்தி மின்சார உற்பத்தி நிறுவனங்களால், 7,588 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.

அதானி குழும நிறுவனத்தின், மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் அதானி கூறும்போது, ''கமுதி சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம், உலகில் ஒரே இடத்தில் அமைக்கப்பட உள்ள, மிகப்பெரிய உற்பத்தி நிலையம்,'' என்றார்.

உறவு தொடரும்:

முதல்வர் கூறும்போது,''மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டம் வெற்றி பெறும். தமிழக அரசுக்கு, உங்கள் நிறுவனத்துடன் உள்ள உறவு தொடரும்,'' என்றார்.

ஒப்பந்தம் கையெழுத்தான போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சாய்குமார்
வரவேற்றார்.

ரூ.208.50 கோடியில் மின்பாதை அமைப்பு:

ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், நிறுவப்பட உள்ள சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையங்களில், உற்பத்தியாகும் மின்சாரத்தை, எடுத்து செல்ல,
*ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், 435.50 கோடி ரூபாய் மதிப்பில், 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம்.
* விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே, 47.51 கோடி ரூபாயில், 230 கி.வோ, புதிய முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையம் அமைக்கும் பணி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால்,
மேற்கொள்ளப்பட்டுள்ளது.ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில், 208.50 கோடி ரூபாய் மதிப்பில், மின்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் துணை மின் நிலைய மேம்பாட்டுப் பணிகள், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

காத்திருக்கும் 107 உற்பத்தியாளர்கள்:

இதுவரை ஒப்பந்தங்கள் செய்துள்ள நிறுவனங்கள் தவிர, மேலும், 107 சூரியசக்தி மின்சார உற்பத்தியாளர்கள், 2,722.5 மெகாவாட் நிறுவு திறனுடைய, சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் வாரியத்தில், பதிவு செய்துள்ளனர்.
அதில் மொத்தம், 1,132 மெகாவாட் திறனுள்ள, 53 உற்பத்தியாளர்களின் திட்டங்களுக்கான,
மின்னோட்ட பகுப்பாய்வு முடிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள், நில ஆவணங்களை சமர்ப்பித்து, வைப்புத் தொகை செலுத்தியவுடன், மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை: