நில கையகப்படுத்தல் சட்டம் தொடர்பான பிரச்சினையில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், குடிசை பகுதி மக்கள், கடலோர மக்களுக்கான அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக ஆர்வலர் மேதா பட்கர் பேசும்போது, "பாஜக அரசின் புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்படி சமூக தாக்க மதிப்பீடு, பெரும்பாலான மக்களின் ஒப்புதல் ஆகியவை தேவை இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சட்டம் கூட தனியாருக்கு நிலத்தை கொடுப்பதை தடுத்தது. ஆனால், இந்தச் சட்டத்தில் அது போன்ற பாதுகாப்புகள் இல்லை. இதைப் பற்றி விவாதிக்க ஜூலை 23-ம் தேதி டெல்லியில் தேசிய பொது விசாரணை நடத்தப்படும்.
இந்தப் பிரச்னையில் தென்னிந்தியாவின் குரல் முக்கியமானது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இதில் தங்களின் நிலைப்பாட்டை விளக்கவேண்டும்.
பாஜக அரசுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளுமா இல்லையா என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தொடர்பான பிரச்னையில் அதிமுக விவசாயிகளுடனும், தொழிலாளர்களுடனும் இருக்கிறார்களா என்பதை ஜெயலலிதா விளக்கவேண்டும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, "மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மூன்று முறை அவசர சட்டம் மூலமாக கொண்டு வந்துள்ளது. மண்ணின் மைந்தர்களிடமிருந்து நிலத்தை பறித்து தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குகிறது"என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாக்கியம், மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன /tamil.thehindu.com