சனி, 24 ஜனவரி, 2015

கிருஷ்ணகிரி Bank of Baroda கொள்ளை ! 2000 பவுன் நகைகள் கொள்ளை போனதாக தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அடுத்த குந்தாரப்பள்ளியில் உள்ள பாங்க் அஃப் பரோடா வங்கியில் சுமார் 2000 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குந்தாரப்பள்ளியில் உள்ளது பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை. நேற்றிரவு வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வங்கி லாக்கரை உடைத்து சுமார் 2000 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டன. தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. கண்ணம்மாள் உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வங்கியில் இருந்து எத்தனை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை வங்கி மேலாளரோ இல்லை போலீஸ் அதிகாரிகளோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆந்திர கொள்ளையர்கள் கைவரிசை?
வங்கிக்குப் பின் புறத்தில் உள்ள கம்பி வேலியை அறுத்து கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். வங்கியின் பின்புற கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மர்ம நபர்கள் மூன்று பேர் வங்கிக்குள் நுழையும் காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த இரண்டு நபர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
4 தனிப்படைகள் அமைப்பு:
வங்கிக் கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடாகாவுக்கும் தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். மேலும், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மறியல்:
கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் 52 கிராமங்களைச் சேர்ந்த 5000 பேர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். நாளொன்றுக்கு ரூ.2 கோடி அளவு இந்த வங்கியில் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள பலர் வங்கியின் முன் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீஸார் குறுக்கிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
வங்கிக்கு காவலர் இல்லை:
வங்கியில் இரவுக் காவலர் இல்லாததால் பாதுகாப்பு குறைபாடும் கொள்ளைக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர். tamil.hindu.com

கருத்துகள் இல்லை: