புதன், 21 ஜனவரி, 2015

திடீர் தடை? வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு.....

புதுடெல்லி: ஆப்ஸ் ( app's)  சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது.
வாட்ஸ் அப் போன்றே வாட்ஸ் அப் பிளஸ் ( WhatsApp+) என்ற அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் ரக போன் வைத்திருப்பவர்கள் சிலர் பயன்படுத்தி தங்களது நண்பர்கள் மற்றும் உறவு வட்டாரங்களுக்கு தகவல், புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு என்ற விவரம் தெரியவில்லை.


இவ்வாறு  வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை பயன்படுத்தியவர்களுக்கு ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் போன்ற வெவ்வேறு  சமூக வலைத்தளங்கள் மூலம், " தேர்ட் பார்ட்டி க்ளையன்ட் ( third-party client) சேவையை பயன்படுத்தி ஆப்ஸ் ( app's)  சேவைகளுக்கான விதிமுறைகளை நீங்கள் மீறியதால்,  24 மணி நேரத்திற்கு வாட்ஸ் அப் -ல் உங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது" என்ற தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் தடை விதிக்கப்பட்ட வாட்ஸ் அப் பயனாளிகள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர். மேலும் இதுகுறித்த தகவலை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டதால், வாட்ஸ் அப் பயனாளிகளிடையே பரபரப்பு நிலவியது.

இதனிடையே இதுகுறித்து வாட்ஸ் அப் நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் போனதால், அதுபற்றி அந்நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது.

அதில், " வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷன் வாட்ஸ் அப்- ஆல்  உருவாக்கப்பட்டதோ அல்லது வாட்ஸ் அப்- ஆல் அங்கீகரிக்கப்பட்டதோ அல்ல. வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை உருவாக்கியவர்களுக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷன் பாதுகாப்பானது என்ற உத்தரவாதத்தை வாட்ஸ் அப்- ஆல் அளிக்க முடியாது. உங்களது தனிப்பட்ட தகவல் நீங்கள் அறியாமலோ அல்லது உங்களது அனுமதி இல்லாமலோ பிறருக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளது.

எனவே வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளவர்கள், அதனை நீக்கிவிட்டு, வாட்ஸ் அப்-பின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்றோ அல்லது கூகுள் பிளே மூலமோ வாட்ஸ் அப் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதே சமயம் புதிதாக பதிவிறக்கம் செய்தாலும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டவர்களுக்கு அத்தடை 24 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விகடன்.com

கருத்துகள் இல்லை: