ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பாகிஸ்தானின் கூலிபடையான முன்னாள் புலியின் விபரம் சேர்க்க தேசிய புலானாய்வு குழு இலங்கை செல்கிறது !

சென்னை,
இந்தியாவில், அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
சென்னையில் பாக்.உளவாளி கைது தமிழ்நாட்டில் ஏற்கனவே பாகிஸ்தான் உளவாளிகளான தமீம் அன்சாரி, இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், அவரது கூட்டாளிகளான சிவபாலன், சலீம், ரபீக் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பு வைத்து செயல்பட்ட முகமது உசேன் என்ற உளவாளி மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி சென்னை சாலிகிராமம் முத்தமிழ் நகரில், இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை, மத்திய உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

தாக்குதல் நடத்த திட்டம் அருண் செல்வராசனிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி கடல் வழியாக மும்பை நகருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியது போல், சென்னை நகருக்குள் கடல் வழியாக தீவிரவாதிகளை ஊடுருவ செய்து, தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் சதித் திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது.
இதுதவிர தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்கள், துறைமுகங்கள், தலைமைச் செயலகம் அமைந்துள்ள சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், கல்பாக்கம் அணுமின்நிலையம், சென்டிரல் ரெயில் நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை உள்பட 20 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ. தகவல்களை சேகரித்து இருப்பதும் தெரிய வந்தது.
வரைபடங்கள் அருண்செல்வராசன் சென்னை சாலிகிராமத்தில் ‘ஐஸ்ஈவெண்ட்’ என்ற நிறுவனத்தை நடத்தியபடி, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்க்கும் செயலை சத்தமே இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக செய்து வந்து உள்ளார்.
தமிழகத்தின் முக்கிய இடங்களை படம்பிடித்து இருக்கிறார். அத்துடன் கொச்சி, விசாகப்பட்டினம் துறைமுகங்கள் பற்றிய தகவல்களை சேகரித்தும், தமிழக கடலோரங்களில் எந்தெந்த பகுதிகளில் எளிதில் ஊடுருவி காரியத்தை சாதித்துவிட்டு, தப்ப முடியும் என்பன போன்ற தகவல்களையும் வரைபடங்களாக தயாரித்து இருக்கிறார்.
அருண்செல்வராசன் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவரிடம் இருந்து அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
பாகிஸ்தான் தூதரகம் தான் சேகரித்த தகவல்கள், எடுத்த புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவற்றை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், சிராஜ் ஆகியோருக்கு அருண்செல்வராசன் அனுப்பி வைத்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
எந்த நேரமும் பலத்த பாதுகாப்புடன் காணப்படும் சென்னை துறைமுகத்தில் நுழைந்து எப்படி புகைப்படம் எடுக்க முடிந்தது? என்ற பல்வேறு சந்தேகங்கள் தேசிய புலனாய்வு குழுவினர் மத்தியில் எழுந்து உள்ளது.
ஏற்கனவே பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளியான ஜாகீர் உசேனிடம் இருந்து சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரகம், அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. அந்த புகைப்படங்களும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். எனவே இலங்கை தமிழர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு நாசவேலையில் ஈடுபட வைக்கப்படுகிறார்கள் என்றும், இந்த செயலில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் ஈடுபடுவது பற்றியும் அதிகாரிகள் மத்தியில் பலத்த சந்தேகம் எழுந்து உள்ளது.
புலனாய்வு குழு இலங்கை செல்கிறது பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு சென்று அவரைப்பற்றி மேலும் விசாரணை நடத்தவும், அதன் மூலம் கூடுதல் தகவல்களை திரட்டவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீர்மானித்து உள்ளனர். கொழும்பு நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடமும் விசாரிக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அவர்கள் அங்கு ஒரு குழுவை அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை தேசிய புலனாய்வு முகமை கேட்டு உள்ளது.
ஆனால் இந்திய விசாரணை குழுவை அனுமதிக்க இலங்கை ஏற்கனவே தயக்கம் காட்டி வருகிறது.
இதுபற்றி தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பரஸ்பர சட்டஉதவி ஒப்பந்தத்தின்படி, விசாரணை குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்க விருப்பம் தெரிவித்தும், சதிகாரர்கள் பற்றிய விவரங்களை கேட்டும் அந்த நாட்டுக்கு கடந்த 10 மாதங்களில் 2 கடிதங்கள் எழுதப்பட்டு உள்ளன. இரண்டாவது கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் எழுதப்பட்டது. ஆனால் இலங்கை அரசிடம் இருந்து அந்த கடிதங்களுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை’’ என்று தெரிவித்தார்.
எனவே இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசும், பாகிஸ்தான் அரசும் ஒத்துழைக்குமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து இருப்பதால், தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அணுமின் நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் மேலும் 5 உளவாளிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேசிய புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை: