சனி, 20 செப்டம்பர், 2014

சீன, அரபு மொழிகளில் திருக்குறள் விரைவில் வெளியாகிறது:

திருக்குறள் சீன மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது. திருக்குறள் மொழியாக்கம் தமிழ் அறிஞர்கள் தமிழில் எழுதிய அறிவுரைகள், கவிதைகள் போன்றவற்றை உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்ப்பதை தமிழக அரசு கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், பாரதியார், பாரதிதாசனின் கவிதைகள் மற்றும் புகழ்பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீனம், அரபி மொழிகள் மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான அறிவிப்பு 2011-12ம் ஆண்டு சட்டசபை கவர்னர் உரையில் வெளியிடப்பட்டது.


தயார் நிலையில்

அதைத் தொடர்ந்து அதற் கான அரசாணை உடனே பிறப்பிக்கப்பட்டு அவற்றை மொழியாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. சீன மொழியில் இதற்கான தகுதியுள்ள நபராக சீனக் கவிஞர் யூஷி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்த திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு யூஷி அதை சீன மொழியில் மொழியாக்கம் செய்தார்.

தற்போது அந்த சீன திருக்குறள் புத்தகம் அச்சிடப்பட்டு, வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அணிந்துரை பெறப்பட்டதும் அது வெளியிடப்படும். ஒரே புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம், சீன மொழிகளில் திருக்குறளை படிக்கலாம்.

அதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியாரின் பாடல்களையும் ஆங்கிலத்தில் இருந்து யூஷி சீன மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். அதுவும் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

அரபி மொழியாக்கம்

திருக்குறள் மற்றும் பாரதியார் பாடல்களை அரபி மொழியில் மொழியாக்கம் செய்யும் பணியில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர் நியமிக்கப்பட்டனர். தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நூல்களும் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.

இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த புத்தகங்கள் வெளியிடப்படலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளால், தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் பெருமையை உலகின் மற்ற மக்களும் தெரிந்துகொள்ள இது வழிவகை செய்யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் வளர்ச்சி இயக்ககம்

திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு முதற்கட்டமாக ரூ.41.70 லட்சம் ஒப்பளிக்கப்பட்டது. இதை அச்சிட்டு வெளியிடும் பணியை தமிழ் வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டுள்ளது.

இதுபோல பாரதிதாசனின் பாடல்களும் இந்த மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இதுவும் வெளியிடப்பட்டு, தமிழ் மொழியின் பெருமை உலகுக்கு காட்டப்படும்.

உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை

இதுமட்டுமல்லாமல், தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கான முதல் பரிசுத்தொகை (மாவட்ட அளவில்) ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், மாநில அளவிலான முதல் பரிசுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் உயர்த்தி வழங்கப்படுகின்றன.

அதுபோல் தமிழறிஞர்களை ஊக்குவிப்பதற்காக புதிய விருதுகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 2012-13-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில், ‘பெரும் தமிழறிஞர்களுக்கு கபிலர் விருது, உ.வே.சா. விருது, என்ற புதிய விருதுகளும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றும் தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்த்தாய் விருதும் வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதை நிறைவேற்றும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு, மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருதும், அ.அ.மணவாளனுக்கு கபிலர் விருதும், புலவர் செ.ராசுவுக்கு உ.வே.சா. விருதும் வழங்கப்பட்டன.

கம்பர் விருது

2013-14-ம் ஆண்டு சட்டசபை கவர்னர் உரையில், ‘‘புதிதாக இந்த ஆண்டில் இருந்து கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களை பரப்பும் சிறந்த அறிஞருக்கு கம்பர் விருதும், சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு சொல்லின் செல்வர் விருதும் வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட உடனேயே அரசாணை வெளியிடப்பட்டு பாலரமணிக்கு கம்பர் விருதும், ப.லோகநாயகிக்கு சொல்லின் செல்வர் விருதும் வழங்கப்பட்டன. இப்படி தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய விருதுகளை இந்த அரசு அறிவித்து, உடனே அதை நிறைவேற்றி வருகிறது.

2013-14-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு இருந்த, ஜி.யு.போப் விருது, உமறுப் புலவர் விருது, முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருதுகள், பாராளுமன்றத் தேர்தல் நடந்ததால் வழங்கப்படவில்லை.

தமிழ்த்தாய்க்கு சிலை

சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ‘தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். தற்போது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அந்த சிலையை அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ் பல்கலைக்கழகத்திற் கான கட்டிடங்களை, ‘த,மி,ழ், நா,டு’ என்ற வடிவில் அமைப்பதற்காக, புதிதாக ‘த’ மற்றும் ‘நா’ வடிவில் கட்டிடங்கள் ரூ.15 கோடி செலவில் கட்டப்படும் என்று கடந்த ஜூலை 25-ந் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதை நிறைவேற்றுவதற்காக கருத்துரு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வளர்ச்சிப் பாதையில்

தமிழ் வளர்ச்சிக்கு அரசு காட்டும் ஆர்வம் குறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இளம் தமிழர் இலக்கியப் பட்டறை, புதிய வகைப்பாடுகளான மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல், தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி வலைத்தளம் போன்ற எண்ணற்ற அறிவிப்புகளை அரசு வெளியிட்டது. அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி, தமிழ் மொழியை வளர்ச்சிப் பாதையில் அரசு கொண்டு செல்கிறது’’ என்றார். dailythanthi,com

கருத்துகள் இல்லை: