புதன், 3 செப்டம்பர், 2014

மரண தண்டனை பெற்றவர்களின் மறுசீராய்வு மனுக்கள்: பகிரங்கமாக விசாரிக்கப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி : 'நீண்ட காலம் நடக்கும் வழக்கு விசாரணையால், ஒருவர் சிறையில் இருப்பதை காரணமாக காட்டி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி கோர முடியாது. அதேநேரத்தில், மரண தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்யும், மறுசீராய்வு மனுக்கள் எல்லாம், பகிரங்கமான முறையில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.செங்கோட்டை தாக்குதல் வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முகமது ஆரிப், 1993ம் ஆண்டு நிகழ்ந்த, மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனை பெற்ற, யாகூப் அப்துல் ரசாக் மேமன் உட்பட, மரண தண்டனை பெற்ற ஆறு பேர், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.அதில், 'மரண தண்டனைக்கு எதிராக நாங்கள் தாக்கல் செய்துள்ள, மறுசீராய்வு மனுக்கள் எல்லாம், உச்ச நீதிமன்றத்தில், பகிரங்கமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும்' என, கோரியிருந்தனர்.ஏனெனில், இதற்கு முன், மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்கள் எல்லாம், நீதிபதிகளின் அறையிலேயே விசாரிக்கப்பட்டன.
அப்போது, தண்டனை பெற்றவர்கள், அங்கு ஆஜராக அனுமதிக்கப்படவில்லை. அதனால், இந்த கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.இவற்றை பரிசீலித்த, தலைமை நீதிபதி லோடா தலைமையிலான, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வில், நான்கு நீதிபதிகள், நேற்று பெரும்பான்மையாக அளித்த தீர்ப்பு விவரம்:நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக, சில வழக்குகள், நீண்ட நாட்களுக்கு நடக்கலாம். அதையே காரணமாக காட்டி, மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றும்படி, ஒருவர் கோர முடியாது.

மரண தண்டனை என்பது, மாற்ற முடியாதது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், குற்றவாளியின் உயிர் பறிக்கப்பட்டு விடும். அதைவிடுத்து, மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என, கருதினால், தண்டனை விதிக்கப்பட்டவர், தானாகவே இறந்தால், அவரை உயிரை மீட்டுக் கொண்டு வந்து, வழக்கை விசாரிக்க முடியுமா?எனவே, மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில், சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும், மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்படும், மறுசீராய்வு மனுக்களை, 30 நிமிடங்கள் மட்டுமே விசாரித்தால் போதுமானது.அதேநேரத்தில், மரண தண்டனை பெற்றவர்கள், அந்த தண்டனை எதிர்த்து, மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, அது தள்ளுபடி செய்யப்பட்டு, இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தால், அவர்கள் எல்லாம் இந்த தீர்ப்பு வெளியான ஒரு மாதத்திற்குள், தங்களின் வழக்கை மறுபடியும் விசாரிக்கும்படி கோரி, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.இருப்பினும், மரண தண்டனை பெற்றவர்களின் குறைதீர் மனுக்கள் மீது, ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தால், அவர்களின் வழக்குகளை நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பது சரியாக இருக்காது.மேலும், மரண தண்டனையை எதிர்த்து, தாக்கல் செய்யப்படும் மறுசீராய்வு மனுக்கள் எல்லாம், இனி கோர்ட்டில், பகிரங்கமான முறையில், குறைந்தபட்சம், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்படும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: