தெருவில் சென்னை மாநகராட்சியின் அல்லது
தனியாருக்குச் சொந்தமான கழிவுநீர் ஏற்றிச்செல்லும் லாரி சென்றால் முகத்தைச்
சுழித்துக் கொண்டு மூக்கை மூடிக் கொள்கிறோம். இந்த கழிவுநீர் எல்லாம்
எங்கே போகிறது? எப்படி சுத்தப்படுத்தப்படுகிறது? இவற்றை யார்
கையாளுகிறார்கள்? என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
நாம் நமது அழுக்குகளை கழுவி விட்டு, சுத்தபத்தமாக நடமாடுவதை சாத்தியப்படுத்தும் துப்புரவு தொழிலாளர்களின் உயிருக்கு மதிப்பே இல்லாமல் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? சம்பவம் நடந்த கொடுங்கையூரில் உள்ள, வெளிநாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் மெட்ரோவாட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கூடி நிற்கும் பகுதி மக்கள்.
நாம் நமது அழுக்குகளை கழுவி விட்டு, சுத்தபத்தமாக நடமாடுவதை சாத்தியப்படுத்தும் துப்புரவு தொழிலாளர்களின் உயிருக்கு மதிப்பே இல்லாமல் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? சம்பவம் நடந்த கொடுங்கையூரில் உள்ள, வெளிநாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் மெட்ரோவாட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கூடி நிற்கும் பகுதி மக்கள்.
“என்ன சார் இது, டுவென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரியில் இப்படி எல்லாம் நடக்குது. டெக்னாலஜி எங்க போயிட்டிருக்கு, செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பிட்டோம். மோடி நாடு முழுக்க ஒரே நாள்ல கோடிக்கணக்குல வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வைக்கிறார். ஆஃப்டர் ஆல் ஒரு சாக்கடை மேட்டர பாதுகாப்பா கையாள முடியலையே. எல்லாம் கரப்ஷன், இந்த கவர்ன்மென்ட் டிபார்ட்மென்ட் எல்லாம் இப்படித்தான்” என்று நொந்து கொள்ளாதவர் உண்டா? ஆனால் இரண்டு தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கிய இந்த நிகழ்வு குறித்து பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் விபரங்கள் இதை விட சிக்கலான, மேலும் கொடூரமான சித்திரத்தை அளிக்கின்றன.
மணலியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 8 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் இரண்டு ஆலைகளும், ஒரு நாளைக்கு 11 கோடி லிட்டர் நீரை சுத்திகரிக்கும் கொள்ளளவு கொண்ட ஒரு ஆலையும் உள்ளன. இவற்றில் 11 கோடி லிட்டர் கொள்ளளவிலான ஆலைதான் மிகவும் நவீனமான, தானியங்கி முறையிலான ஆலை என்கின்றனர் மெட்ரோ வாட்டர் பொறியாளர்கள். ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் வால்வுகளை இயக்கி மூடவும் திறக்கவும் வசதி இருக்கின்றது என்கின்றார்கள் அவர்கள்.
அதாவது, மெட்ரோ வாட்டர் நவீன தொழில்நுட்பத்தை வாங்கி சென்னை மாநகரவாசிகளின் கழிவுகளை சுத்தம் செய்ய ஈடுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம், அந்த தொழில்நுட்பத்தை விற்ற அன்னிய நிறுவனத்துக்கும், அதை நிறுவிய ஒப்பந்ததாரருக்கும், ஒப்பந்தத்தை வழங்கிய அதிகாரிக்கும் உடனடி கணிசமான ஆதாயம் கிடைத்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால், சாதாரண உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு அதில் என்ன கிடைக்கிறது?
ஜெயகுமாருக்கும், நந்தகுமாருக்கும் ராஜூக்கும், சத்யராஜூக்கும் அந்த தொழில்நுட்பங்கள் பாதுகாப்பைத் தேடித் தந்து விடவில்லை.
இந்த ஆலையை வடிவமைத்து, நிறுவி 10 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான உரிமத்தை பெற்றிருப்பது விஏ டெக் வாபாக் என்ற நிறுவனம். ஆஸ்திரியா-ஜெர்மனியைச் சேர்ந்த அந்நிறுவனம் சிக்கலான பல கைமாறுதல்கள் மூலம் இப்போது சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்தத் தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்தி சுத்திகரிப்பு தொட்டிகளை பராமரித்து வந்திருக்கிறது. நம் நாட்டு கழிவுநீரை சுத்திகரித்து வெளிவிடுவதற்கு ஜெர்மனியிலிருந்து துரைமார் வர வேண்டியிருக்கிறது, அவர்களோ உள்ளூர் தேசி கூலிகளை ஒப்பந்த முறையில் குறைந்த கூலிக்கு நியமித்து தமது லாபத்தை பெருக்கிக் கொள்கின்றனர். ஜெர்மன் தொழில்நுட்பம் கூட நம் நாட்டு தொழிலாளர் உயிரை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதில்லை; ஜெர்மன் முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்கும் வகையில்தான் வருகிறது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பராமரிப்பு வேலைக்கு நியமிக்கப்பட்ட 6 தொழிலாளிகள் தமது வேலையை தொடங்கியிருக்கின்றனர். சென்னை மாநகரத்தின் லட்சக்கணக்கான மக்கள் தமது படுக்கைகளில் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் நேரம் இந்தத் தொழிலாளர்களுக்கு வயிற்றுப்பாட்டுக்கான வேலை ஆரம்பிக்கும் நேரமாக இருந்திருக்கிறது.
12 அடி ஆழமான கழிவுநீர் தொட்டியில் நந்தகுமார் முதலில் இறங்கியிருக்கிறார். கழிவு நீர் தொட்டியில் விஷவாயு கசிந்து நிரம்பியிருந்ததால் அவர் உடனடியாக மயக்கமாகியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து உள்ளே இறங்கிய ராஜூ, சத்யராஜ் இருவரும் மயக்கமடைந்திருக்கின்றனர். மேலே நின்றிருந்த ஜெயகுமார் நிலைமையை உணர்ந்து கொண்டிருக்கிறார். அவர் உயிரைப் பிடித்துக் கொண்டு உதவி கேட்டு இடத்தை விட்டு ஓடி விடவில்லை. தனது சக தொழிலாளர்களை காப்பாற்றுவதற்காக உடனடியாக தானும் தொட்டிக்குள் இறங்கியிருக்கிறார். அவர் தொட்டியில் இறங்கி சத்யராஜ், ராஜூ இருவரையும் மேலே கொண்டு வந்திருக்கிறார். மூன்றாவதாக நநதகுமாரை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கும் போது ஜெயகுமாரும் வாயு தாக்கி மயக்கமடைந்திருக்கிறார்.
உதவிக்கு அழைக்கப்பட்ட தீயணைப்பு மீட்புப் படையினர் இருவரையும் மீட்டு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.
பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. சுத்திகரிப்பு தொட்டிக்குள் இறங்குவதற்கு முன்பு பாதுகாப்புப் பட்டையை அணிந்து கொண்டு இறங்கியிருந்தால், நிலைமை மோசமானவுடன் மேலே நிற்கும் தொழிலாளிகள் அவர்களை உடனடியாக இழுத்து வெளியில் கொண்டு வந்திருக்க முடியும் என்கிறார் ஒரு பொறியாளர். சென்ற ஆண்டு கோட்டூர்புரம் சுத்திகரிப்பு ஆலையில் சென்ற ஆண்டு இதே போன்ற விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ வாட்டர் என்ன சொல்கிறது?
நவீன எந்திரங்கள் வாங்கி, நவீன சுத்திகரிப்பு ஆலை நிறுவ பல கோடி ரூபாய் செலவழித்திருக்கும் மெட்ரோ வாட்டர் வாயு கசிவை உணர்ந்து தகவல் தெரிவிக்க தேவையாட உபகரணத்தை பொருத்தி தொழிலாளர்களை எச்சரிக்கும் ஏற்பாட்டை நாங்கள் செய்யவில்லை.
ஆலையின் பராமரிப்பை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் விட்டு பாதுகாப்பற்ற சூழலில் வேலை தொழிலாளர்களை வேலை செய்யும் நிலையை ஏற்படுத்தியிருந்தோம்.
தங்கள் சார்பில் பாதுகாப்பு வசதிகள் கோரி வாதாடவோ, பணி நிரந்தரம் செய்யவோ ஒரு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கூட அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
எங்களுடைய தவறான கொள்கைகளால், தவறான முடிவுகளால் இரண்டு தொழிலாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இப்படி எல்லாம் ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள். “விபத்து நடந்ததற்கான காரணத்தை விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கின்றனர். காவல்துறை, வளாக பொறுப்பாளர் பாக்யராஜ் மற்றும் ஆலை மேலாளர் ஷ்யாம் ஆகியோர் மீது ‘கவனக்குறைவால் மரணம் விளைவித்தனர்’ என்று வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியிருக்கிறது.
மெட்ரோ வாட்டரின் விசாரணை முடிவுகள் அதற்கேற்ற நேரத்தில் வந்து சேரும், அதன் அடிப்படையில், பன்னாட்டு முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கல்லாவை நிறைக்கும் வகையில் வேறு ஏதாவது திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படலாம்.
கொல்லப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்ச இழப்பீடு பெறுவது கூட பெரும் போராட்டமாக இருக்கும். மெட்ரோ வாட்டர் அவர்களை வேலைக்கு அமர்த்தியது தனியார் நிறுவனம் என்று தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முற்படும். தனியார் நிறுவனத்துக்கு இன்றைய ‘நவீன’, ‘வளர்ந்து வரும் வல்லரசான” இந்திய சட்டங்களின் படி எந்தப் பொறுப்பும் இருக்காது. லாபத்தை அள்ளிக் கொண்டு ஜெர்மனிக்கு கொண்டு போவது மட்டும்தான் அவர்களது பங்குதாரர்களுக்கு அவர்களது பொறுப்பு.
எங்கும் தனியார் மயம், எதிலும் உலகமயம், எதற்கும் தாராளமயம் என்று தனியார் லாபவெறியை தாராளமாக அனுமதிக்கும் உலகளாவிய முதலாளித்துவ பயங்கரவாதத்தின் இன்னொரு உயிர்ப்பலி ஜெயகுமார், நந்தகுமார் ஆகியோரின் மரணம்.
இதற்கு காரணமான ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், முதலாளிகளும் என்ன தண்டனை பெறப் போகிறார்கள்?
மேலும் படிக்க vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக