திங்கள், 11 நவம்பர், 2013

கந்து வட்டியால் மரத்தடிக்கு வந்த குடும்பம் ! மழைபெய்தால் பஸ் ஸ்டாப்: மானம் காக்க போராடும் இளம்பெண்

மதுரை : மூன்று வேளை சோற்றுக்கும், இரவில் பயமில்லாமல் தூங்குவதற்கும் இயலாத நிலையில், மதுரை ஆண்டாள்புரம் பஸ் ஸ்டாப் அருகில் இளம்பெண் சித்ரா, தந்தையுடன் தவித்து வருகிறார்.ஒன்றிரண்டு நாட்களல்ல... மூன்றாண்டுகளாக மரத்தடியே குடியிருப்பாக, இருவரும் வாழ்ந்து வருகின்றனர். மழைபெய்யும் போது, அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் ஒதுங்கி நிற்கின்றனர். யாரோ ஒரு புண்ணியவான் கொடுத்த பணத்தில், மதியம் அருகிலுள்ள அம்மா உணவகத்தில் இருந்து, தயிர்சாதம் வாங்கி வந்து தந்தையை சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார், அப்பெண்.பஸ் ஸ்டாப் அருகில் உள்ள நடைமேடையில் இரண்டு போர்வைகள், ஒரு குடம், ஒரு தட்டு... ஆனாலும், அழுக்கின் சாயலின்றி, தெளிவாக, நிதானமாக பேசினார், சித்ரா.இதே தெருவில் எச்.எம்., காலனியில் மூன்றுமாடி சொந்த வீட்டில் வசதியா வாழ்ந்தவங்க தான். அப்பா, சவுந்தரபாண்டியன் அச்சாபீஸில் வேலை பார்த்தார். உடம்பு முடியாததால, விருப்ப ஓய்வு வாங்கிட்டாரு. எட்டாவதுக்கு அப்புறம் நான் படிக்கல, அண்ணன் செந்தில்குமார் பஸ்சில கிளீனரா போறாரு.அம்மா இல்ல, என்னை விருதுநகர் நரிக்குடியில கட்டிக் கொடுத்தாங்க. கட்டினவரு, நகைய புடுங்கிட்டு விரட்டி விட்டுட்டாரு. யாருக்கோ உதவி செய்யப் போய், அப்பா மேல கடன் சுமை ஏறிடுச்சு.
அந்த கடனுக்கு வட்டி மேல வட்டியா போட்டாங்க. கட்ட முடியல, ஒருநாள் மொத்த கடனுக்கும் சேர்த்து, சொத்தை எழுதி வாங்கிட்டாங்க. யாருமே இல்லாம, அப்பாவையும் விட முடியாம, கடைசியில பிளாட்பாரத்துல தங்கிட்டோம்.மூணு வருஷமாச்சு. அண்ணன் (திருமணமாகவில்லை), மாதம் ஒருதரம் வந்து பார்த்துட்டு, அப்பாவுக்கு 200 ரூபா கொடுப்பாரு. அது, மருந்து, மாத்திரை வாங்கவே சரியா போயிரும். தியாகராஜர் மாடல் பள்ளியில் இருக்கற, சத்துணவு கூடத்துல கூட்டி பெருக்குவேன். சத்துணவு கொடுப்பாங்க. அதை வாங்கி அப்பாவும், நானும் சாப்பிடுவோம்.

யாராச்சும், அப்பப்ப கொடுக்கும் காசுல, சனி, ஞாயிறுல அம்மா உணவகத்துல ஒரு ரூபா இட்லி, எட்டு வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடுவோம். மதியம் தயிர்சாதம். அப்பாவால வேலைக்கு போக முடியல. அவர விட்டுட்டு வேற எங்கயும் வேலைக்கு போக, என்னால முடியல. ஊருல ஒரு இடம் இருக்கு. அப்பாவோட அம்மா இறந்தப்போ, வாரிசு சான்றிதழ் வாங்கல. அத வாங்கினப்புறம் இடத்தை வித்துட்டு, அந்த காசுல ஏதாச்சும் வாடகைக்கு வீடு பாக்கணும். அதுவரை, மரத்தடி தான் எங்களை காப்பாத்தும், என்றார் வெள்ளந்தியாய். உடல்நலமில்லை என்றாலும், "தினமலர்' என்று சொன்னதும், சந்தோஷமாய் பேச ஆரம்பித்தார், பெரியவர். "பிள்ளைய நினைச்சா தான் பயமா இருக்கு' என்ற போது, நம்மையறியாமல் நமக்கு கண்கள் கலங்கியது. dinamalar.com

கருத்துகள் இல்லை: