செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

உச்சநீதிமன்றம் : சமரசத்திற்கு இடமில்லை ! பாலியல் கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவரே குற்றவாளியை மன்னித்தாலும் ,,,

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவரே குற்றவாளியை மன்னித்தாலும் சமரசத்திற்கு இடம் அளிக்க கூடாது என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இடையேயான சமரச ஒப்பந்தம் ஏற்படுத்துவது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளது. < பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், சமரசம் செய்து கொள்ள விசாரணை நீதிமன்றங்கள் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பாலியல் குற்றவாளிகளுக்கு ஒருபோதும் கருணை காட்டக் கூடாது எனக் கூறிய நீதிபதிகள் பாதிக்கப்பட்டவரே குற்றவாளியை மன்னித்துவிட்டாலும் தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். பாலியல் குற்ற வழக்குகளில் வழங்கப்படும் தண்டனைகளை உயர்நீதிமன்றங்கள் சாதாரணமாக குறைக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: