திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மனநோயாளிகளை அடைத்து வைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த போலி டாக்டர்

மன நோயாளிகளை வைத்து மாதம் ரூ.2 லட்சம் சம்பாதித்தேன்: போலி
மருத்துவர் வாக்குமூலம்" மன நோயாளிகளை வைத்து மாதம் ரூ.2 லட்சம் சம்பாதித்தேன்: போலி மருத்துவர் வாக்குமூலம்" பாரிமுனையில் உள்ள பிரபல லாட்ஜ் ஒன்றில் மனநோயாளிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் ஸ்ரீதர், துணை கமிஷனர் நிர்மல் குமார் ஜோஷி, உதவி கமிஷனர் முரளி ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் அந்த லாட்ஜை சோதனையிட்டனர். அப்போது அந்த லாட்ஜில் 3 அறைகளில் 6 மன நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 6 வயது சிறுமி ராஜேஸ்வரி வாய் பேசாதவள். மற்றவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரியா, காஞ்சீபுரத்தை சேர்ந்த கண்ணகி, மேற்கு வங்காளத்தை சேர்ந்த முன்னா, ஆந்திராவை சேர்ந்த லட்சுமணராவ், மராட்டியத்தை சேர்ந்த ராகு என்பது தெரிய வந்தது. இந்த 6 மன நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களை பிச்சை எடுக்க வைத்து சுந்தர் (40) என்பவர் சம்பாதித்ததும் தெரிய வந்தது. மன நோயாளிகளை பராமரிப்பதற்காக கே.எம்.கார்டனை சேர்ந்த ஆனந்தி (32), பெரியமேட்டை சேர்ந்த தமயந்தி (38) ஆகியோர் நர்சுகளாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கு லாட்ஜ் மானேஜ் ரபீக் உடந்தையாக இருந்துள்ளார். சுந்தரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், கல்லிடைகுறிச்சி. 10–வது வகுப்பு வரை படித்துள்ள இவர் தன்னை சிறப்பு மன நல மருத்துவர் என்று கூறி மன நலம் இல்லாதவர்களை காட்டி பல நிறுவனங்களிடம் நன்கொடை பெற்றதும், அவர்களை பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலி மருத்துவர், நர்சுகள், லாட்ஜ் மானேஜர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலி மருத்துவர் சுந்தர் போலீசாருக்கு அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:–
சில மாதங்களுக்கு மன்பு என் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை வந்தேன். இங்கு எப்படி பிழைக்கலாம் என்று யோசித்த போது மனநலம் இல்லாதவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
எனவே, மனநலம் பாதித்த 6 பேரை அழைத்து வந்து லாட்ஜில் தங்க வைத்தேன். அவர்களை பராமரிக்க 2 பெண்களை நர்சுகளாக நியமித்தேன். நான் இலவசமாக மனநல சிகிச்சை அளிப்பதாக கூறி நம்ப வைத்தேன். லாட்ஜூக்கு வாடகையும், நர்சுகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு சம்பளமும் கொடுத்தேன்.
இதற்காக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்றாக உடை அணிவித்து பெரிய நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு நான் இலவச சிகிச்சை அளிப்பதற்காக நன்கொடை பெற்றேன். அவர்களை பிச்சை எடுக்க வைத்தும் பணம் பெற்றேன். இதன் மூலம் மாதம் ரூ.2 லட்சம் வரை வருமானம் வந்தது. அதை கொண்டு லாட்ஜிக்கும், பராமரித்த 2 பெண்களுக்கு சம்பளம் கொடுத்தேன். மீதியை நான் எடுத்துக் கொண்டேன். மன நோயாளிகள் தப்பி விடக்கூடாது என்பதற்காக லாட்ஜ் அறைகளில் அவர்களை மிரட்டி அடைத்து வைத்தேன்.
இவ்வாறு சுந்தர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
போலி மருத்துவர் சுந்தர் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அறையில் பூட்டி வைத்து சித்தரவதை செய்தல், வரம்புமீறி செயல் படுவது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. மீட்கப்பட்ட 6 மன நோயாளிகளும் மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலி மருத்துவர் சுந்தர், 2 நர்சுகள், லாட்ஜ் மானேஜர் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடக்கிறது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: