செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

அரசு வக்கீல் பவானி சிங் நீக்கம்! ஜெ.,சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக கோரிக்கை ஏற்பு !

பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை
நடத்தி வந்த அரசு வக்கீல் பவானிசிங் அதிரடியாக மாற்றப்பட்டார். குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளிடம் சரியான குறுக்கு விசாரணை செய்யவில்லை என குற்றம் சாட்டி இவரை மாற்ற வேண்டும் என தி.மு.க.,தரப்பில் கோர்ட்டில் மனு செய்திருந்தது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதால் தி.மு.க.,வுக்கு மகிழ்ச்சியும், அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன். இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அரசு வக்கீல் பவானி சிங், தன் கடமையை சரியாக செய்யவில்லை. எனவே, அவரை மாற்ற வேண்டும். அதுவரை, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, தி.மு.க., பொது செயலாளர் அன்பழகன், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
< இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி போப்பண்ணா முன்னிலையில், நேற்று நடந்தது.
அன்பழகன் தரப்பில் ஆஜரான வக்கீல் நாகேஷ் வாதிடுகையில், ""இவ்வழக்கில், சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்படவேண்டும். வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். அரசு தரப்பில் ஆஜராகும் வக்கீல் பவானி சிங், தன் கடமையை சரியாக செய்யவில்லை. வழக்கை அவசரமாக முடிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இதனால் நீதி கிடைக்காது. எனவே, வழக்கு விசாரணைக்கு தடை செய்ய வேண்டும்,'' என்றார்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி போப்பண்ணா, அன்பழகன் மனுவுக்கு, பதிலளிக்குமாறு, கர்நாடகா அரசு தலைமை செயலாளர், சிறப்பு நீதிமன்ற அரசு வக்கீல் பவானிசிங் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதற்கான பதிலை, நாளை (இன்று) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
6 வது நீதிபதி: 2 வது வக்கீல் :
கோர்ட் விளக்கம் கேட்ட நிலையில் இன்று அரசு வக்கீல் பவானிசிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரிரு நாளில் அரசு வக்கீல் நியமனம் செய்யப்படுவார். இந்த வழக்கை பொறுத்தவரை பல நீதிபதிகள் தானாக விலகினர். தற்போது விசாரித்து வரும் நீதிபதி 6 வது நீதிபதியாவார். இது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசு வக்கீலாக இருந்த ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு விசாரணையால் தமக்கு மன உளச்சல் ஏற்படுவதாக கூறி விலகினார். இதனையடுத்து பவானிசிங் நியமிக்கப்படார். இவர் வழக்கில் ஜெ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகம் தெரிவித்த தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. வக்கீலும், நீதிபதியும் மாறிக்கொண்டேயிருப்பதால் தீர்ப்பில் காலதாமதம் ஏற்படுவதுடன் வழக்கு தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்வதற்கே சிலருக்கு சில காலம் பிடிக்கும். இதனால் கோர்ட் நடவடிக்கைகள் அவ்வப்போது பாதிக்கும் dinamalar.com

கருத்துகள் இல்லை: