புதன், 13 மார்ச், 2013

பாலியல் குற்றங்கள் தடுப்பு மசோதா விவகாரத்தில் கருத்து வேறுபாடு

புதுடில்லி:பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும், சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில், நேற்று நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து, இதுபற்றி விவாதிக்க, வரும், 18ம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை அடுத்து, இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை வழங்கவும், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்தது. "பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண், இறந்து விட்டாலோ அல்லது செயல்பட முடியாத அளவுக்கு முடங்கி விட்டாலோ, அந்த குற்றத்தை செய்தவருக்கு, மரண தண்டனை அளிக்க வேண்டும். சிறார் சட்ட வயது வரம்பை, 18லிருந்து, 16 ஆக குறைக்க வேண்டும்' என்பது உட்பட, பல முக்கிய விதிமுறைகள், இந்த சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த, இந்த கூட்டத்தில், மசோதாவில் இடம் பெற்றுள்ள, சில விதிமுறைகளுக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சம் உள்ளிட்ட, சில அமைச்சகங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன.சிறார் சட்ட வயது வரம்பை, 18லிருந்து, 16 ஆக குறைப்பதற்கு, குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மசோதாவில், கற்பழிப்பு என்ற வார்த்தை இடம் பெற வேண்டுமா, செக்ஸ் தாக்குதல் என்ற வார்த்தை இடம் பெற வேண்டுமா என்பதிலும், மத்திய அமைச்சகங்களுக்கு இடையே, கருத்து வேறுபாடு எழுந்தது.

"இந்த மசோதா நடைமுறைப் படுத்தப் பட்டால், பொய் புகார்களை தெரிவித்து, அப்பாவிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் அபாயம் உள்ளது. எனவே, மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்றும், சில அமைச்சகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.நீண்ட நேரம் விவாதம் நடந்தும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில், மத்திய அமைச்சகங்களுக்கு இடையே, ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.இதையடுத்து, இந்த மசோதா, மத்திய அமைச்சரவை குழு ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. நிதி அமைச்சர் சிதம்பரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா திராத், சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர், இந்த அமைச்சரவை குழுவில் இடம் பெறுவர் என, தெரிகிறது.

இதுகுறித்து, உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே கூறியதாவது:இந்த சட்ட திருத்த மசோதா குறித்து, நாளை நடக்கும் மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், விவாதிக்கப்பட உள்ளது. அப்போது, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். இந்த மசோதா, கண்டிப்பாக, பார்லிமென்டில் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.இம்மாதம், 22ம் தேதிக்குள், மசோதா நிறைவேற்றப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.இவ்வாறு, சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியதை அடுத்து, இந்த மசோதாவில் உள்ள விதிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக, வரும், 18ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

மத்திய சட்ட அமைச்சர், அஸ்வனி குமார் கூறுகையில்,
""பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதில், அரசியல் கட்சிகளிடையே, பெரிய அளவில், கருத்து வேறுபாடு இல்லை. வரும், 22ம் தேதிக்குள், இந்த மசோதா, பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படும்,'' என்றார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: