செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

தமிழகத்தில் விரைவில், ‘திகைக்க வைக்கும்’ மின் கட்டண எகிறல்! சாம்பிள் பார்க்க வாங்க!!


Viruvirupu
தமிழக அரசு, விரைவில் மின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக தெரியவருகிறது. மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்தப்படவுள்ளன. மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுக்கவும் கட்டணம் வரப் போகிறது. இதற்கு, தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.
தமிழக அரசு மின்வாரியம், 54,000 கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, வருவாயை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்து, முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.
இதோ அடுத்த ஆக்ஷன் பிளான் ரெடி!
புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது, மின்சார கணக்கீடு எடுப்பது, மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும் வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்துவது… இப்படியாக பல திட்டங்கள் கைவசம் உள்ளன.
கட்டண எகிறல் எந்த அளவுக்கு இருக்கும்?
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.  அவர்கள் வைத்திருக்கும் உத்தேச கட்டண எகிறல் விபரங்களை பாருங்கள்:
• ஒரு முனை மின் இணைப்பு பெற: ரூ.900 (தற்போதைய கட்டணம், ரூ.250)
மும்முனை இணைப்புக்கான கட்டணம்: ரூ.1,600 (தற்போதைய கட்டணம், ரூ500)
• வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம்: ரூ.10,000 (தற்போதைய கட்டணம், ரூ.3,000)
• புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது: ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.500 (தற்போதைய கட்டணம், ரூ.150) மும்முனை மின் இணைப்புக்கு, ரூ.750 (தற்போதைய கட்டணம், ரூ.150)
• மின் மீட்டர்களுக்கு மாதாந்திர வாடகை: வீட்டு மின் மீட்டர்களுக்கு, ரூ.10, மும்முனை மின் மீட்டர்களுக்கு, ரூ.40, வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, ரூ.50.
• மீட்டர்களுக்கான டிபாசிட்: ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.825 (தற்போதைய கட்டணம், ரூ.700; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, ரூ.3,650 (தற்போதைய கட்டணம், ரூ.2,000.
• மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுக்க: ஒவ்வொரு வீட்டுக்கும், ரூ.10, குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, ரூ.100, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, ரூ.250.
• வெள்ளை அட்டையின் விலை: ரூ.10.
• மின்சார பாவனையில், ஒரேயொரு விஷயத்தில் கட்டணம் அறவிடப்பட மாட்டாது. உங்கள் வீட்டு சுவிட்சை நீங்களே ‘ஆன்’ செய்தால்… சர்விஸ் சார்ஜ் இலவசம்!

கருத்துகள் இல்லை: