பிரதமரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. இவர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க மறுத்ததால் பிரதமர் பதவி இழந்தார். யூசுப் ரசா கிலானி. அவருக்கு பின் பிரதமர் பதவியேற்ற ராஜா பர்வேஸ் அஷ்ரப், சர்தாரி வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுத்தார். அதனால் பதவி தப்பியது. ஆனால், மின்துறை அமைச்சராக இருந்த போது ரூ.2,200 கோடி ஊழல் புரிந்த வழக்கில் மீண்டும் அஷ்ரப் சிக்கினார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அஷ்ரப்பை கைது செய்ய உத்தரவிட்டது.
இதற்கிடையில், அதிபர் சர்தாரி, பிரதமர் அஷ்ரப் பதவி விலக வேண்டும். ஆட்சியை கலைக்க வேண்டும். நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மதகுரு தாஹிர் உல் காத்ரி என்பவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். லாகூரில் இருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டு தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தார். அவருக்கு ஆதரவாக இஸ்லாமாபாத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
பார்லிமென்ட், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு காத்ரியின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அப்போதுதான், ஊழல் வழக்கில் பிரதமர் அஷ்ரப்பை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக கிளம்பியுள்ள மதகுரு சட்டம் பயின்றவர். இவர் ராணுவ அதிகாரிகளுக்கு மிக நெருக்கமானவர். மேலும், நீதித் துறையும் அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. எனவே, நீதித் துறை ஆதரவோடு ராணுவ புரட்சி மீண்டும் வெடிக்குமோ என்ற அச்சத்தில் அரசியல் தலைவர்கள் உள்ளனர்.
லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு தாஹிர் உல் வந்தது, சுப்ரீம் கோர்ட் உத்தரவு இரண்டுமே ராணுவத்தின் சதியால் நடந்ததுதான். இதில் சந்தேகம் இல்லைÕ என்று பிரதமர் அஷ்ரப்பின் உதவியாளர் பவாத் சவுத்ரி உறுதியாக கூறுகிறார். நாட்டில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்சி ராணு வம் நடவடிக்கை எடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட் கதவை திறந்து விட்டுள் ளது என்று அவர் குற்றம் சாட்டினார். பரபரப்பான சூழ்நிலையில், அஷ்ரப்புக்கு பதில் வேறு பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதுகுறித்து ஆளும் கட்சி தலைவர் சர்தாரி தலைமையில் அரசியல் பிரமுகர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற பதவி காலம் மார்ச்சில் முடிகிறது. மே மாதம் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், தேர்தலை தள்ளி போட சர்தாரி உள்பட பலர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் ராணுவத்துக்கு நெருக்கமான மதகுரு தாஹிர் உல் தலைமையில் போராட்டம் தொடங்கி உள்ளதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்பட்ட போது அதில் முக்கிய பங்கு வகித்தவர்தான் தாஹிர் என்று ஆதாரம் காட்டுகின்றனர். இதை ராணுவ அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் ராணுவ புரட்சி புதிதல்ல. எனினும், அரசியலில் இருந்து ராணுவத்தை தனியாக செயல்பட வைக்க தலைமை தளபதி அஷ்பக் கயானி விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும், பாகிஸ்தானில் புரட்சி ஏற்பட்டால் அது கயானியின் அனுமதி இல்லாமல் நடக்காது. அந்தளவுக்கு அவர் இப்போது பலம் வாய்ந்தவராக இருக்கிறார் என்று பல அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக