செவ்வாய், 15 ஜனவரி, 2013

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (81)


புலிகளினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து துயர்துடைப்பதற்கு உள்நாட்டு – வெளிநாட்டுப் பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்!  புலிகள் வடக்கு கிழக்கைத் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களுக்கு புலிகளின் இரும்புச் சப்பாத்துகளின் ‘சுவை’ புரிந்திருக்கும். அந்த வாழ்க்கையிலிருந்து தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களுக்கு அந்தப் பயங்கரமான வலியின் வேதனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அதனால்தான் யுத்தத்தில் சிக்காமலும், புலிகளின் அதிகார தர்பாரில் அகப்படாமலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர், புலிகளுக்கு விசுவாசமாகவும், பொழுதுபோக்காகத் தமிழ் தேசியம் பேசுபவர்களாகவும் இப்பொழுதும்கூட இருக்கிறார்கள்.
இந்தச் சிறை வாழ்க்கையில் ஒருவர் மிகவும் கூடுதலாகப் பாதிக்கப்படுவது முதலில் மனோரீதியாகத்தான். மனிதன் தான் தோன்றிய காலத்திலிருந்து சக மனிதர்களுடன் இணைந்த ஒரு கூட்டு வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கிறான். இன்றைய உச்சகட்ட முதலாளித்துவ வளர்ச்சி நிலையால் கிராமிய வாழ்க்கை, கூட்டுக் குடும்ப வாழ்க்கை மட்டுமின்றி, தனிப்பட்ட குடும்பங்களே சிதைவடைந்த நிலையிலும்கூட, தனக்கு உறவானவர்கள் இல்லாவிட்டாலும் தான் வாழும் சூழலில் வாழும் இதர மனிதர்களுடன் ஏதோ ஒரு வகையில் உறவு கொண்டதாகவே அவனது வாழ்வு அமைந்துள்ளது.
அதிலும் குடும்பம் என்பது இன விருத்திக்காக மட்டுமின்றி, பரஸ்பர உறவுகளை, உதவிகளை, நம்பிக்கைகளைக் கட்டியெழுப்புவதற்கு மட்டுமின்றி, ஒரு மனிதனின் உடலியல் உளவியல் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. அதனால்தான் மனித சமூகத்தின் மிக அடிப்படையான அலகு குடும்ப அமைப்பே என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 ஒரு மனிதனை அழிப்பதானால், எல்லாவற்றையும்விட அவனை அவனது குடும்பத்தில் இருந்து பிரித்து வைத்தாலே போதும். அவன் உருக்குலைந்து போவான். ஆதிகாலத்தில் மன்னர் ஆட்சிகள் நிலவிய காலத்தில் சமூக ரீதியிலான குற்றம் இழைப்பவர்களை அவர்களது குடும்பங்களிலிருந்து தனிமைப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காக மன்னர்கள் இந்த சிறை வாழ்க்கை முறையை உருவாக்கியதாக வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு முன்னர் மக்கள் கணக் குழுக்களாக வாழ்ந்த காலத்தில், இரண்டு குழுக்களுக்கிடையே நடைபெறும் யுத்தத்தில் வெற்றிபெற்ற குழுவினர் தோற்றவர்களைக் கொன்று விடுவது வழமையாக இருந்தது. பின்னர் அவர்களைக் கொல்லாது தமது அடிமைகளாக மாற்றித் தமக்கான உடலுழைப்பில் ஈடுபடுத்தினர்.
ஆனால் நாம் வாழும் இந்த நவீன காலத்தில் பல நாடுகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இராணுவ ரீதியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகத் தமக்கு எதிராக இருப்பவர்களையும் சிறையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவது ஒரு வழிமுறையாக வந்துவிட்டது. இந்த விடயத்தில் புலிகள் இரண்டு வழி முறைகளையும் ஏககாலத்தில் கையாண்டனர். ஒரு வழி மன்னராட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தமக்கு எதிரானவர்களைச் சிறைகளில் அடைக்கும் வழிமுறை. உதாரணமாக புலிகளுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடாத என் போன்றவர்கள் மீது கையாளப்பட்ட முறை.
இன்னொரு முறை, மன்னராட்சிக் காலத்துக்கு மிகவும் முந்திய முறையாகும். அதாவது தமக்கு எதிரான போட்டி இயக்கத்தவர்களை முற்றாக அழித்து விடுவது. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், என்.எல்.எப்.ரி பிற்காலத்தில் ஈ.பி.டி.பி என்பன போன்ற மாற்று இயக்கங்கள் மீது இந்த முறையையே புலிகள் கையாண்டனர்.

இந்த இரு முறைகளின் மூலமும் தமக்கு எதிரான இயக்கங்களை பூண்டோடு ஒழித்துக் கட்டுவதும், சமூகத்தில் தமக்கு எதிரான மக்களை மௌனிகளாக்குவதும்தான் புலிகளின் நோக்கமாக இருந்தது. அதன் மூலம் தமிழ் சமூகத்தை தமக்கு ஏற்ற விதத்தில் ‘சுத்திகரிக்கப்பட்ட’ (பாசியமயப்படுத்தப்பட்ட) ஒரு சமூகமாக மாற்றுவதுதான் புலிகளது திட்டமாக இருந்தது. அந்த நடவடிக்கையின் ஒரு சுவையைத்தான் என் போன்றவர்கள் அனுபவித்தோம்.
புலிகள் வடக்கு கிழக்கைத் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களுக்கு புலிகளின் இரும்புச் சப்பாத்துகளின் ‘சுவை’ புரிந்திருக்கும். அந்த வாழ்க்கையிலிருந்து தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களுக்கு அந்தப் பயங்கரமான வலியின் வேதனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அதனால்தான் யுத்தத்தில் சிக்காமலும், புலிகளின் அதிகார தர்பாரில் அகப்படாமலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர், புலிகளுக்கு விசுவாசமாகவும், பொழுதுபோக்காகத் தமிழ் தேசியம் பேசுபவர்களாகவும் இப்பொழுதும்கூட இருக்கிறார்கள்.
ஆனால் புலிகளினால் முள் மிதியடிகளிலும், மிதி வெடிகளிலும் நடக்க வைக்கப்பட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இன்றைய அரசாங்கம் தமிழ் மக்களுக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் ஒரு நிலையான தீர்வை வழங்கவில்லை என்ற போதிலும்கூட, புலிகளை அழித்ததிற்காக நன்றிக் கடன் பட்டவர்களாகவே இருப்பர். யுத்தத்தில் இந்த மக்களில் பலர் தமது உயிரினும் மேலான உறவுகளை இழந்துள்ள போதிலும், இந்த நாசகார யுத்தத்தை இனிமேலும் தொடர முடியாதவாறு புலிகள் அழிக்கப்பட்டு விட்டதற்காக மகிழ்ச்சி அடையாமல் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் புலிகளின் கொடுங்கோல் ஆட்சியை அனுபவித்துவிட்டனர்.
என்னைப் பொறுத்த வரையில் இந்த யுத்தத்தின் காரணமாக எமது குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் வரை இழந்திருக்கிறேன். நான் உட்பட நாலைந்து பேர் புலிகளின் சிறைகளில் ஓராண்டுக்கும் மேலாக சித்திரவதை அனுபவித்திருக்கிறோம். இரண்டொருவர் மரண தண்டனைக்கும் உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற அனுபவம் தமிழ் மக்களில் பலருக்கும் புலிகளுடன் உண்டு. ஆனால் சிங்களப் பேரினவாதம் பற்றி உரக்கக் கூச்சிலிடுவோரும், தீவிர தமிழ் தேசியம் பேசுவோரும், மனித உரிமை பேசும் சிலரும், ஜனநாயகம் பற்றி தொண்டை கிழியக் கத்துவோரும் அரசின் ‘தமிழின விரோத’ நடவடிக்கை பற்றிப் பேசுகின்ற அளவுக்கு, புலிகளின் மானிட விரோதச் செயற்பாடுகள் குறித்து வாய் திறக்கிறார்கள் இல்லை.
இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து இன்று ஐ.நாவில் முறையிட முடியும், நெதர்லாந்தின் ஹேக் (The Hague) நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குப் போட முடியும், அமெரிக்காவில்கூட வழக்குப் போட முடியும். ஏன் இலங்கையிலுள்ள சட்டதிட்டங்களின்படி, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அந்நாட்டிலேயேகூட வழக்குப் போட முடியும். ஆனால் புலிகளின் ஆட்சி வடக்கு கிழக்கில் நிலவிய போது, புலிகள் நடாத்திய (கங்காரு) நீதிமன்றங்களில் புலிகளுக்கு எதிராக ஒரு வழக்குப் போட முடியுமா? அவ்வாறு ஒருவர் தப்பித்  தவறி வழக்குப் போட்டாலும், அவர் அடுத்த ஒரு மணித்தியாலத்தின் பின்னர் உயிருடன் இருந்திருக்க முடியுமா?
இன்றும்கூட, இலங்கை அரசாங்கம் இறுதி யுத்த நேரத்தில் நடாத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில், பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளில், பல கருத்தரங்குகளில் தொடர்ச்சியாக ஆராயப்படுகின்றன. ஆனால் புலிகள் மனித குலத்துக்கு எதிராக யுத்த நேரத்தில் மட்டுமின்றி, சாதாரண நேரங்களில்கூட நிகழ்த்திய, நாகரீக உலகம் வெட்கித் தலை குனியக்கூடிய செயல்கள் குறித்து ஏன் ஆராயப்படுவதில்லை?
இலங்கையிலுள்ள மேற்கத்தைய உலகத்தினருக்குப் பிடிக்காத அரசை வீழ்த்துவதற்காக பல்வேறு மனித உரிமை மீறல் விசாரணைகளையும், பல்வேறு அரசியல் கோஸ்டி சேர்க்கைளையும் உருவாக்கி வரும் சக்திகள், ஏன் புலிகளால் பாதிப்புக்குள்ளான சாதாரண அப்பாவி மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றுக்குப் பரிகாரம் காணுவதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கவில்லை?
என்போன்ற புலிகளின் கைதிகளாக இருந்தவர்கள், புலிகளிடம் எமது முழு வாழ்க்கையையும் இழந்திருக்கிறோம். எம்மை எமது குடும்பங்களிலிருந்து பிரித்து, சித்திரவதை முகாம்களில் மாதக்கணக்கில் அடைத்து வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். எம்மை அங்கவீனர்களாக்கி இருக்கிறார்கள். எம்மை உளவியல் நோய்க்கு ஆளாக்கியிருக்கிறார்கள். சமூகத்தின் முன் எம்மை ‘துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறார்கள். எமது சொத்துக்களை அபகரித்திருக்கிறார்கள். எமது தொழிலை நாசம் செய்திருக்கிறார்கள். இறுதியாக எம்மை எமது மண்ணில் இருக்க விடாமல் தென்னிலங்கைக்கோ அல்லது புலம்பெயர் தேசங்களுக்கோ விரட்டியிருக்கிறார்கள்.
இவையெல்லாவற்றையும் ஏன் இன்னமும் ஐ.நா நிறுவனங்களோ, சர்வதேச நீதிமன்றங்களோ, மனித உரிமை அமைப்புகளோ கண்டும் காணாமல் இருக்கின்றன?
இந்த விடயத்தில் புலிகளை அழித்து அப்பாவி மக்களை புலிகளது கொடூரப் பிடியிலிருந்து மீட்டதுடன் தமது கடமை முடிந்தது என, இலங்கை அரசாங்கமும் ஏனோ தானோ என இருக்கின்றது. அது தவறு. தனது நாட்டின் பிரஜைகள் பலர் சட்டவிரோதமான முறையில் புலிகளால் கொலை செய்யப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், வேறு பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். அந்த மக்களை புள்ளி விபர அடிப்படையில் பதிவு செய்வதற்கும், அவர்களுக்குப் புலிகளால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறியவும், அவர்களுக்கு போதிய நஸ்ட ஈடுகள், நிவாரணங்கள் வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக, இலங்கை அரசு ஆணைக்குழு ஒன்றை அமைத்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதும் அவசரமானதுமான கடமையாகும்.

தொடரும்

கருத்துகள் இல்லை: