செவ்வாய், 12 ஜூலை, 2011

குற்றாலம்:கட்டணக் கொள்ளையும் புலம்பலும்

தென்மேற்கு பருவ மழை இந்த வருடம் சரியாக மே கடைசியில் கேரளாவில் தொடங்கியதால், குற்றாலத்தில் மழைச் சாரல் கிளம்பி அதன் எதிரொலியாய் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை, கணிசமாக உயர்ந்தது.
அந்த சீசன் சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை. கடந்த சில வாரங்களாக வெள்ளை வெயில் கொளுத்துவதால், சாரல் மழை சீசனும் கண்ணாம்மூச்சு ஆட்டம் காட்டுகிறது. கார் பார்க்கிங், அருவி கட்டணம், ஆயில் மசாஜ் போன்றவைகளுக்கு லட்சக்கணக்கில் செலுத்தி நாங்கள் குத்தகை எடுத்துள்ளோம். அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பெருமளவில் சரிந்துவிட்டது. இதனால் நாங்கள் எடுத்துள்ள குத்தகைகளில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று வேதனையும், புலம்பலுமாக சொல்லுகிறார்கள் இந்த குத்தகைகாரர்கள்.
ஆயினும், குற்றாலம் பேரூராட்சியின் துணைத் தலைவரான ராமையாவோ, இந்த ஆண்டு அனைத்து அமைப்புகளும் (கார் பார்க்கிங், அருவி கட்டணம், ஆயில் மசாஜ்) ரூபாய் 75 லட்சத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் நஷ்டம் ஏற்பட்டால் நிர்வாகம் எப்படி ஏற்கும் என்கிறார்.
சீசன் காலங்களில் வரும் வாகனங்களுக்கு மனம்போல் வசூலிக்கும் இந்த குத்தகைகாரர்கள், இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் கூடாது என்ற நிலையிலும், அதற்கும் ஒரு கட்டணத்தை வசூல் செய்கிறார்கள். மேலும் சீசன் குறைந்த நேரத்தில் வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத்தை இஷ்டம்போல் ஏற்றி வசூல் செய்கிறார்கள். அப்படி இருக்க இவர்களுக்கு எங்கே நஷ்டம் ஏற்படப்போகிறது என நிலைமையை சுட்டிக்காட்டுகிறார்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரசீத்.
குற்றாம் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு குளிர்ச்சியோ, அதைப்போன்றே கட்டணக் கொள்ளையில் சூட்டையும் வெளிப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை: