சனி, 16 ஜூலை, 2011

ஜெயலலிதாவைச் சுற்றிய சொத்துக் குவிப்புக் கொக்கி, மெள்ள மெள்ள இறுக ஆரம்பித்துவிட்டது.

''முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றிய சொத்துக் குவிப்புக் கொக்கி, மெள்ள மெள்ள இறுக ஆரம்பித்துவிட்டது. முதல் முறை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக ஜெயலலிதா மீது பதிவான வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 'ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதால், சொத்துக் குவிப்பு வழக்கு அம்பேல் ஆகிவிடும்’ என்று தி.மு.க-வினரே நினைத்தனர். ஆனால், அதற்கு மாறாக, வழக்கு வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டது என்று சில வாரங்களுக்கு முன்னால் நான் சொல்லியது ஞாபகம் இருக்கிறதா? வரும் 27-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 'முதல்வர் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டுள்ளார்.''

''எத்தனையோ சம்மன்கள் பார்த்தாச்சே... அதோடு இதுவும் ஒன்றுதானே?''

''இல்லை என்கிறார்கள், பெங்களூரு நீதித் துறை வட்டத்தினர். 'எத்தனையோ தடவைகள் கோர்ட் உத்தரவுகளை, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீறியுள்ளனர். இதனால், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கோபத்தில் இருக்கிறார். அவரது வலுவான வாதங்களைப் பார்த்துதான் நீதிபதி இம்மாதிரியான ஆஜர் உத்தரவைப் போட்டார்’ என்கிறார்கள். ஒரு முறை ஜெயலலிதாவின் வக்கீல் நவநீதகிருஷ்ணனைப் பார்த்து, 'இப்படி ஒரு வழக்கு இங்கு நடப்பது உங்களது பெட்டிஷனருக்குத் தெரியுமா?’ என்று நீதிபதியே கேட்டார். அந்தக் கோபம்தான் இன்று வெடித்துள்ளது.''

''ஓகோ!''

''அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, 'இந்த வழக்கில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், நேரில் ஆஜராகவே இல்லை. இந்திய கிரிமினல் சட்டம் 313-ன்படி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரையும் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்’ என்று சொன்னதும், ஜெ. தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ்வர ராவ், 'ஆடிட்டர் பாலாஜியை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பெங்களூரு ஹைகோர்ட்டில் நாங்கள் போட்ட மனு விசாரணையில் இருக்கிறது. அதன் தீர்ப்பு வரும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சொல்லக் கூடாது’ எனக் கேட்டாராம். 'ஒருமுறைகூட ஜெயலலிதா ஆஜராகாதது, கோர்ட்டை அவமதிக்கும் செயல்’ என்று ஆச்சார்யா சொல்ல... 27-ம் தேதி என்று நாள் குறித்துள்ளார் நீதிபதி. 'கோட்டையில் உட்கார்ந்து​கொண்டு கோர்ட் படி ஏறுவதா?’ என்று ஜெ. தரப்பு கொந்தளிக்க ஆரம்பித்துள்ளதாம்.'

கருத்துகள் இல்லை: