புதன், 13 ஜூலை, 2011

ஆலமர பிள்ளையாருக்கு அதிர்ஷ்டம்: கலைஞர்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலை திருப்பணி செய்யப்போவதாக அறிவித்து ரூ.18.5 லட்சம் அதற்காக செலவிட ஜெயலலிதா ஆணை பிறப்பித்திருக்கிறாரே?
பதில்: ஓமந்தூரார் வளாகத்திற்குள் தி.மு.க. அரசு புதிய தலைமைச்செயலகம் கட்டியது என்பதற்காக  அந்த இடத்தை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதுபற்றி நீதியரசர் தங்கராஜை கொண்டு விசாரணை ஆணையமும் அறிவித்திருக்கிறார். அது மாத்திரமல்லாமல், அந்த இடத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டுமென்பதற்காக, ஆலமர பிள்ளையாருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆலமர பிள்ளையார்கள் மழையிலும் வெயிலிலும் வாடிக்கொண்டிருக்கும்போது கருணாநிதி புதிய தலைமைச்செயலகத்தைக் கட்டிய காரணத்தால், அங்கேயுள்ள ஆலமர பிள்ளையாருக்கு திருப்பணி செய்ய அம்மையார் ஆணை பிறப்பித்திருக்கிறார் போலும்.
கேள்வி: ஜெயலலிதா அறிவித்துள்ள அ.தி.மு.க. அரசின் புதிய மருத்துவக்காப்பீடு திட்டம் பற்றி?

பதில்: அ.தி.மு.க. அரசின் புதிய திட்டம் அல்ல அது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற திட்டம்தான் அது. அ.தி.மு.க. அரசு புதிதாக எதையும் செய்யாவிட்டாலும், ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, அதிலே ஒருசில சிறிய மாற்றங்களை செய்து புதிய திட்டங்களை போல அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கழக ஆட்சியில் 642 வகையான சிகிச்சைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதிலே வேறு சில நோய்களின் பெயர்களை தற்போது சேர்த்து 950 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அது தவிர தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. தற்போதைய திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒரே குடும்பத்தில் நான்கு லட்சம் ரூபாயை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது. எனவே அந்த அறிவிப்பிலும் புதிதாக எதுவும் இல்லை. இவைகளைத்தவிர வேறு எதுவும் புதிதாக இல்லை. பரிசோதனை செலவுத்தொகை என்றெல்லாம் சொல்லியிருப்பது ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்லப்பட்டுள்ள அறிவிப்பாகும். கழக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் பற்றி இதே ஜெயலலிதாதான் அந்த திட்டத்தினால் தனியார் காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளும்தான் பயன்பெற்றன என்றும், அவை உருப்படியாக நடைபெறவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். இப்போது அவர் கொண்டு வருகின்ற திட்டத்திற்காக தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம்தான் டெண்டர் கோரியிருக்கிறார். தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பல மக்கள் நல திட்டங்களுக்கு ஐடியா கொடுத்து துவங்கியது கருணாநிதி. அதனை விரிவாக்கம் செய்துள்ளவர் ஜெயலலிதா. இன்று ஜெயலலிதா கடுமையாக உழைப்பதும் கருணாநிதியின் கடந்த ஆட்சியின் உழைப்ப பார்த்த பின் பின்பற்றுவதாகும்.

கருத்துகள் இல்லை: