ஏழ்மைக்கும் இரங்காத இராக்கதர்கள்!
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் எமது நாட்டுப் பணிப்பெண்கள் பலர் எதிர்நோக்குகின்ற துன்புறுத்தல்கள் தொடர்பாக இங்கு மீண்டும் குறிப்பிட வேண்டிருயிருக்கிறது. அந்நாடுகளில் உள்ள வீட்டு எஜமானர்கள் பலர் புரிகின்ற காட்டுமிராண்டித்தனமான கொடூர காரியங்கள் முடிவின்றித் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இலங்கைப் பணிப்பெண்களும் சித்திரவதைத் தழும்புகளை உடலில் சுமந்தபடி நாட்டுக்குத் திரும்பிக் கொண்டேயிருக்கிறார்கள். எத்தனை காலத்துக்குத்தான் இத்துன்பங்களை நாமெல்லாம் சகித்துக் கொண்டிருப்பதென்பது தெரியாதிருக்கிறது.
சவூதியில் பணிப்பெண்ணாகத் தொழில் புரிந்த ஆரியவதிக்கு நடந்த கொடுமையை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். வீட்டு எஜமானரால் உடலெங்கும் ஆணிகள் அறையப்பட்ட நிலையில் அங்கிருந்து இலங்கை வந்து சேர்ந்த ஆரியவதியின் உடலில் இருந்து பல ஆணிகள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. வீட்டு எஜமானர் புரிந்த கொடுமைகளை அந்தப் பெண் விளக்கமாக விபரித்துக் கூறினார்.
அக்கொடுமையின் பரபரப்பு அடங்குவதற்கிடையில் மற்றொரு பயங்கரமான செய்தி வெளிவந்திருக்கிறது. குவைத் நாட்டில் பணிப்பெண்ணாகத் தொழில் புரிந்த குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஆரியவதியைப் போல் உடலெங்கும் ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளார். குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண்ணின் உடலில் இருந்து உடனடியாக ஒன்பது ஆணிகளும் இரண்டொரு தினங்களில் மேலும் ஐந்து ஆணிகளும் அகற்றப்பட்டன.
ஆறு மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லையெனவும் அதனைத் தருமாறு கேட்ட போதே வீட்டு எஜமானும் எஜமானியும் சேர்ந்து உடலில் ஆணிகளை அறைந்ததாகவும் இப்பெண் கூறுகிறார். இதேவிதமான கொடுமையை ஜோர்தானில் பணிபுரிந்த பொலனறுவையைச் சேர்ந்த பெண்ணொருவரும் அனுபவித்த நிலையில் நாடு திரும்பியிருக்கிறார். தனக்கு ஆறு ஆணிகள் பலவந்தமாகப் பருக்கப்பட்டதாக இப்பெண் கூறுகிறார்.
இத்தகவல்களை அறியும் போது மனம் உறைகிறது. காட்டுமிராண்டித்தனமான யுகத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்ற கேள்வியும் மனதில் எழுகிறது. இத்தனை கொடுமை புரிவோரும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்களென்ற உண்மை புரிகிறது.
குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்வதற்காக கடல் கடந்து வீட்டு வேலைக்காகச் செல்கின்ற பரிதாப நிலையிலுள்ள பெண்களை இவ்வாறு துன்புறுத்துகின்ற அக்கிரமம் படைத்தோரை நாம் கண்டிப்பதால் பயன் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இவ்வாறான கிராதகர்களின் வலையில் அகப்பட்டுக் கொள்ளாமல் பணிப்பெண்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே இங்கு முக்கியம்.
பணிப்பெண்ணாகத் தொழில் புரியச் செல்லும் பெண்கள் அரசாங்கம் கூறுகின்ற வழிமுறைகளைப் பின்பற்றத் தவறக் கூடாது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறுகின்ற வழிமுறைகளை அனுசரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதன் மூலம் இவ்வாறான அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்புப் பெற வழியேற்படும்.
இது ஒருபுறமிருக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மீது கண்காணிப்பு செலுத்துவதும் அவசியம். மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வழங்குவோர் தொடர்பான முழுமையான விபரம் அறியப்படுவது பிரதானமானது. ஏனெனில் எமது நாட்டுப் பெண்கள் நியாயமான சம்பளத்துடன் பாதுகாப்பான இடத்தில் தொழில் புரிவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இங்கிருந்து பணிப்பெண் தொழிலுக்குச் செல்வோர் உண்மையிலேயே அனுதாபத்துடன் நோக்கப்பட வேண்டியவர்களாவர். அவர்கள் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ளவே அவர்கள் கடல் கடந்து செல்லத் துணிகின்றனர்.
இவர்களின் பரிதாப நிலைமையைப் புரிந்து கொள்ளும் காருண்ய சிந்தனை அங்குள்ள எஜமானர் பலரிடம் இல்லையென்பது எமக்கு நன்கு தெரிகிறது. அவர்களின் கல்நெஞ்சம் இப்பெண்களின் கண்ணீர் கண்டும் கரைவதில்லையென்பதையே சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.
(தினகரன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக