திங்கள், 11 அக்டோபர், 2010

அகதிகள் நாடு திரும்புவது ,இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி

வெளிநாடுகளில் உள்ள அகதி தமிழர்களை இலங்கைக்கு அனுப்புவது பற்றி ஐ. நா. கோரிக்கை

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கை துணைப் பிரதிநிதி ஜெனீப்பர் பெகோனிஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மலேசியா, ஹொங்கொங் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் இறுதியாக வெளியிட்ட புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் 71654 இலங்கை அகதிகள் 112 முகாம்களில் தங்கியிருப்பதுடன், 32467 அகதிகள் முகாம்களுக்கு வெளியே தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் சுய விருப்பின் அடிப்படையில் 1280 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கைக்கு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறெனினும், நீண்ட காலமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்புவதற்கு விருப்பம் காட்டுவார்களா என்பது சந்தேகத்திற்கிடமானதென ஜெனீப்பர் பெகோனிஸ் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக வெளிநாடுகளில் வாழ்ந்து தமது வாழ்க்கை முறைமையை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் மீளவும் இலங்கை திரும்புவார்களா என உறுதிபடக் கூற முடியாதென அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவன புள்ளி விபரங்களின் அடிப்படையில் 64 நாடுகளில் மொத்தமாக 146098 இலங்கையர்கள், அகதிகளாக தங்களை பதிவு செய்து கொண்டு வாழ்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் அதிகளவு இலங்கை அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: