டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பல தடைகளைத் தாண்டி தனக்கென தனிமுத்திரை பதித்திருக்கும் முத்தையா முரளிதரன் இன்று நடைபெறவுள்ள இலங்கை – இந்திய டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ளார்.
792 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையுடன் களமிறங்கும் முரளி, 800 விக்கெட்டுகளை வீழ்த்தியே ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்று நடைபெறவுள்ள போட்டி வரலாற்றிலும் இடம்பிடிக்கவுள்ளது.உலகின் அதிக ஓட்டங்களை குவித்திருக்கும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் – உலகின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முத்தையா முரளிதரனின் இறுதிப்போட்டியில் களத்தில் சந்திக்கவுள்ளார். இப்படியான சந்தர்ப்பம் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மாத்திரமே நிகழ்ந்திருக்கிறது.
1887ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஆதர் ஸ்ரௌஸ்பெரி (Arthur Shrewsbury)- அவுஸ்திரேலியாவின் பிரட் ஸ்பெப்பொத்தை (Fred Spofforth) களத்தில் சந்தித்தார். இது முதலாவது சந்தர்ப்பம். இரண்டாவதாக, மேற்கிந்தியாவின் பிரைன் லாரா – அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னினை 2005ஆம் ஆண்டு ஓய்வுபெறமுன் களத்தில் சந்தித்தார். இப்பொழுது வரலாற்றில் மூன்றாவது தடவையாக இமயமொன்று ஓய்வுபெறும் போட்டியில் இரு சிகரங்கள் களத்தில் சந்திக்கவுள்ளன