திங்கள், 19 ஜூலை, 2010

தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி:

ஆண், பெண் பேதமில்லாமல்ஓதுவாராக வரணும்!தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி: என் சொந்த ஊர் திருச்சியில் உள்ள செம்பட்டு. அப்பாவிற்கு இரவுக் காவலர் வேலை. நாங்க மொத்தம் ஆறு பேர். அக்கா, இரண்டு அண்ணன், தம்பி, தங்கைன்னு எங்க குடும்பம் பெரிசு. எங்க தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தினமும் மாலையில் முதியவர் ஒருவர் பக்திப் பாடல்களை ராகமாகப் பாடுவார். அவர் பாடுவதைக் கேட்டு, நானும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பக்திப் பாடல்களைப் பாடக் கத்துக்கட்டேன். அப்ப, எனக்கு ஆறேழு வயசு இருக்கும். அப்போது நான் நினைத்துப் பார்த்ததில்லை, இப்படி கோவிலில் ஓதுவாராவேன் என்று.எங்க குடும்பக் கஷ்டத்துலயும், வறுமையிலும் மிகவும் சிரமப்பட்டு படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றேன். குடும்ப வறுமையால கல்லூரியில சேர்ந்து படிக்க முடியல. வீட்டில் இருந்தப்ப தான், திருச்சியில் 1996ம் ஆண்டு அரசு இசைப் பள்ளி ஆரம்பிச்சாங்க. அங்க இலவசமா தவில், பரதம், தேவாரம், நாதஸ்வரம் சொல்லிக் கொடுத்தாங்க. இசை மேல் உள்ள ஆர்வத்தால் நான் அங்கு சேர்ந்தேன்.கடந்த 2004ல் சிறப்புத் தேர்ச்சி பெற்று, இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் சிரமப்பட்டேன். ஓதுவார் பணிக்கு பெண்களை இது வரைக்கும் நியமித்ததில்லை. ஆனால், எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானும் ஓதுவார் பணிக்கு விண்ணப்பித்தேன். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாராகப் பணியமர்த்தப்பட்டேன். நான்கு வருடங்களாக பணியில் உள்ளேன் 1,500 ரூபாய் தான் சம்பளம். என் சம்பளம் உயர்ந்து கொஞ்சமாவது வறுமை ஒழியும்.ஆட்கள் பற்றாக்குறையால் ஓதுவார்கள் பணி மறையத் துவங்கி உள்ளது. அதனால், ஆர்வமுள்ளவர்களுக்கு தேவாரம் சொல்லித் தருகிறேன். ஆண், பெண் பாகுபாடு இல்லாம தேவாரம் கத்துக்கிட்டு ஓதுவாரா வரணும்.

கருத்துகள் இல்லை: