செவ்வாய், 20 ஜூலை, 2010

இரகசியங்களை அழிக்காமல் இலங்கைப் படைகளிடம் ஒப்படைத்து

ிவெளிநாட்டு  தமிழர்களின் இரகசியங்கள் இலங்கையின் கையில்?
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுச் செயலகமாகவும், புலம்பெயாந்த தமிழர்களின் செயற்பாட்டுத் தளமாகவும் இயங்கிக் கொண்டிருந்த “வெளிநாட்டுப் பிரிவு” அல்லது “கஸ்ரோ செயலகம்” என அழைக்கப்படும் நிர்வாகக் கட்டமைப்பில் பேணப்பட்ட சகல ஆவணங்களும் முழுமையாக இராணுவத்தால் இறுதிப் போரில் கைப்பற்றப்பட்டதாக கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் இலங்கையின் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் போன்றோரும் வெளிநாடுகளில் கடன் கொடுத்தோர் பட்டியல் முதல் சொத்துக்கள் கொள்வனவு செய்தோர் பட்டியல் வரை கைப்பற்றப்பட்டதாக அங்கு சென்றுவரும் முக்கியஸ்தர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் ஆணித்தரமாகத் தெரிவித்து வந்தனர்.
இதன் ஒரு கட்டமாக இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து “கிறிஸ்ரீனா” என அழைக்கப்படும் ஒரு பாரிய கப்பல் அடையாளம் காணப்பட்டதாக தனது இணையத்தளத்தில் கடந்த ஆண்டு போர் முடிந்த கையோடு அறிவித்த இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு அதனை கடந்த ஆண்டு இறுதியில் கைப்பற்றியும் இருந்தது.
இந் நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் கே.பி.ரெஜி, மற்றும் ஆனந்தராஜா, பவிதரன், அச்சுதன் பிருந்தாபன், ரூபன், ரவிசங்கர் கனகராஜா, நரேந்திரன் இரத்தினசபாபதி போன்றவர்களின் விபரங்களை கடந்த ஆண்டு வன்னிப் போர் முடிந்த சில மாதங்களிலேயே வெளியிட்ட இலங்கை அரசு இதனை இன்ரபோல் என்ற சர்வதேச பொலிஸ் நிறுவனத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தது.
இந் நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள சொத்துக்கள், நிறுவனங்கள், கட்டமைப்புக்கள் தொடர்பாக கஸ்ரோவின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கணனிகள், மற்றும் ஆவணங்களில் உள்ள விபரங்களை மொழி பெயர்க்கும் அல்லது உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு அதனை மேற்படி நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இந்நிலையில் தன்னைச் சந்தித்த மற்றும் தொடர்பு கொள்ளும் பிரமுகர்களுடன் கதைத்துள்ள கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனும் தான் கைதியாக இருக்கும் சூழ்நிலையில் இருந்து கொண்டு தன்னால் இயலக்கூடியதைத் தான் அங்குள்ள சிறைப்பட்டவர்களிற்கு செய்வதாகவும், தான் அரசியல் பேசவோ, அதிகாரம் பற்றிப் பேசவோ வரவில்லை என்று தெரிவித்ததோடு தான் காட்டிக் கொடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு இவ்வாறு நேரடியாகப் பதிலிறுத்துள்ளார்.
“காட்டிப் கொடுப்போர், துரோகி என்ற சொற்பதங்களை தாராளமாக என் மீது குற்றஞ்சாட்டுவோர் கூறட்டும். ஆனால் உண்மை யாதெனில் எனக்கே தெரியாத பல விடயங்களை அவர்கள் கஸ்ரோவின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மூலமே எனக்குத் தெரிய வருகிறது. அந்த அவ்வளவுக்கு முழுமையாக போராட்டத்தைப் பற்றிய இரகசியங்களை அழிக்காமல் இலங்கைப் படைகளிடம் ஒப்படைத்து சென்றிருக்கிறர்கள் அந்த அலுவலத்தில் இருந்தவர்கள்” என கே.பி. தெரிவித்துள்ளார்.
இதனை நிரூபிப்பது போலவே இந்த வார சண்டே ஒப்சேவர் வார இதழும் இலங்கைப் புலனாய்வுப் படை கஸ்ரோவின் அலுவலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து பல புதிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருப்பதான விலாவாரியான கட்டுரையொன்றைப் பிரசுரித்துள்ளதோடு 2003ம் ஆண்டிற்கு பிறகான விடயங்கள் பலவும் இவற்றில் கிடைத்துள்ளதாக சிலாகித்துள்ளது.
இந்நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழர் பொது அமைப்புக்கள் மற்றும் தமிழர் விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஊடகங்கள் என்பன தங்களை அந்த நாடுகளின் சட்டதிட்டங்களிற்குள் இயங்கும் நிறுவனங்களை இணைத்த அறக்கட்டளைக்குள் தம்மைக் கொண்டு வந்து அவற்றை மக்கள் நிறுவனங்களாக மாற்ற வேண்டிய தேவையை இவ்வாறு “கஸ்ரோவின்” அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அவர்களிற்கு ஏற்படுத்தியுள்ளன என்பதை அவர்கள் கருத்திற் கொண்டு நன்கு சிந்தித்து உடணடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: