புதன், 12 மே, 2010

யாழ் குடாநாட்டில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள வெள்ளைவான்

குடாநாட்டில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள வெள்ளைவான் கடத்தல்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இன்றையதினம் கரவெட்டி சம்பந்தர் கடையைச் சேர்ந்த 37வயதான குடும்பப் பெண்ணொருவர் கடத்தப்பட்டு வல்லைப்பகுதியில் குற்றுயிராக வீசப்பட்டிருக்கின்றார். குறித்த பெண் தனது மகனை பாடசாலையில் விட்டுவிட்டு சம்பந்தர்கடை கரவெட்டியிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம் வாகனத்தில் வந்த சிலர் இவரை பலாத்காரமாக கடத்தியதாக தெரிய வருகின்றது. ஆட்கள் நடமாட்டமற்ற வல்லைப் பகுதியில் இவரை கூரிய ஆயதங்களால் தாக்கி அவர் உயிரிழந்ததாகக் கருதி அப்பகுதியிலுள்ள பற்றை ஒன்றினுள் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதிக்கு ஈச்சம்பழம் சேகரிப்பதற்காகச் சென்ற சிறுவர்கள் குற்றயிராக அனுங்கிய நிலையில் இப்பெண்ணைக் கண்டதை அடுத்து பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலீசாரினால் மீட்கப்பட்ட குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது. குடாநாட்டில் தற்போது நிலவுகின்ற இவ்வாறான சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே வலிகாமம் சங்கரவத்தைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் வந்த மூவரால் இதேபோன்று கடத்தப்பட்டு கடுமையான சித்திரவதைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக கொடிகாமம் மற்றும் மீசாலையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்பிட்ட ரீதியில் இவ்வாறான கடத்தல் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒருபுறம் கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர மறுபுறம் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக இவ்வாறான உத்திகள் பயன்படுத்தப்பட்டு வருவது குடாநாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: