செவ்வாய், 11 மே, 2010

கண்ணிவெடி விபத்தில் பிரஞ்சு நாட்டை சேர்ந்த நிபுணர் ஒருவர் பலி

இலங்கையின் வடக்கே வவுனியா இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடி விபத்தொன்றில் சுவிட்சர்லாந்து கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


பிரஞ்சு பிரஜையாகிய 55 வயதுடைய டொமினிக் மொரின் உயிரிழந்துள்ளதாக எஃப்.எஸ்.டி என்ற அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த இவர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்காமல உயிரிழந்துள்ளார்.
அவரது சடலத்தை பிரான்சுக்கு அனுப்பி வைப்பதற்காக கொழும்பில் உள்ள பிரஞ்சு தூதரகத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடைகின்ற நிலையில் கண்ணிவெடி விபத்தொன்றில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னிப் பகுதியில் கண்ணிவெடிகளையும் மற்றும் வெடிப்பொருட்களையும் கண்டுபிடித்து அகற்றுகின்ற பணியில் எஃப்.எஸ்.டி நிறுவனம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வேறு இரண்டு நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டு நிறுவனங்களும், இலங்கை இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
 

கருத்துகள் இல்லை: