செவ்வாய், 11 மே, 2010

நல்லூர் இராசதானி உரிய முறையில் பாதுகாக்கப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


நல்லூர் இராசதானியை உரிய முறையில் பாதுகாக்க எதிர்காலத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்துள்ளார்.

யாழ் நல்லூர் பகுதியில் புதிதாக உல்லாச விடுதி அமைப்பது தொடர்பாக இன்று (10) யாழ் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் நல்லூர்ப் பகுதியில் புதிதாக உல்லாச விடுதி அமைப்பது தொடர்பாக உடனடியாக முடிவுகள் எதனையும் எட்ட முடியாது இவ்விடயத்தில் மிக ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.

காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் முடிவுகள் எட்டப்பட முடியாது என்பதுடன் புதிய விடுதி அமைப்பது தொடர்பில் அதன் சாதக பாதக நிலை குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1970ம் ஆண்டு யாழ் நல்லூர் பகுதி புனித பிரதேசமாக்கப்பட்டது என்ற தகவல் உண்மைக்குப் புறம்பான பிழையான தகவல். இவ்விடயம் தொடர்பாக நாம் பரிசீலிக்க உள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நல்லூர் இராசதானி இனிவரும் காலங்களில் உரிய முறையில் பாதுகாக்கப்படும் என்பதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் உறுதியளித்தார்.

யாழ் மாநகர மேயர் திருமதி ப. யோகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது நல்லூரில் புதிய உல்லாச விடுதி அமைப்பதில் ஏற்படவுள்ள சாதக பாதக சூழ்நிலைகள் தொடர்பாக மதகுருமார்கள் பேராசிரியர்கள் கல்விமான்கள் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: